திங்கள், 1 ஜூலை, 2019

மத வெறி ஊடடப்படுகின்றது. மத இயக்கங்களே அரசுகளைத் தோற்றுவிக்கின்றன


Sharmila Seyyid : முகநூலில் அறிமுகமாகிப் பரிச்சயமான நண்பன் ஒருவன் மிக ஆபத்தான சூழலில் இருப்பதாக அறிந்ததும் தொலைபேசினேன். குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருமே அவனைக் கிட்டத்தட்ட கைகழுவி விட்டிருந்தார்கள். எங்கேயாவது போய்த் தொலை என்பதுபோலத்தான் நடந்து கொள்கிறார்கள். இரண்டு நாட்களாக உணவில்லை. அக்கம்பக்கத்தார் உறவினர்கள் வீட்டுப்பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். இப்படி ஏகப்பட்ட முறைப்பாடுகள். இதெல்லாம் எதற்காக நடக்கின்றன? ஏன் அவனைப் புறக்கணிக்க வேண்டும்? அவன் செய்த குற்றம் என்ன?
பதில் இதுதான்.
அவன் தனது மார்க்கத்தை விட்டு விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறான். இதுவரை காலமும் நம்பியிருந்த மதத்தில் இனி நம்பிக்கை இல்லை என்று பகிரங்கப்படுத்தியிருக்கிறான். இதற்கு அவனிடமிருந்த நியாயமான காரணங்களையும் முன்வைத்திருக்கிறான். மதத்தில் எங்கே வன்முறை விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளான்.
இதில் ஒருவர் இரண்டு விதமான நிலைப்பாட்டுக்கு வர முடியும். ஒன்று இவரது கருத்துடன் ஒத்துப்போவது. அல்லது மறுப்பது. அல்லது தர்க்க ரீதியாக விவாதித்து மேலும் தெளிவைப் பெறவோ, அல்லது உரிய நபருக்குத் தெளிவுபடுத்தவோ முயல்வது.
ஆனால் சமூகத்தில் வன்முறையின் வேர்கள் ஆழமாக ஊடுறுவிட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ”கறுப்பு” ஆடுகளைக் கொன்றுவிடுவதுதான் சரியான தீர்வு என்பதில் பெரும்பான்மை ஒற்றுமைப்படுகிறளவு மக்களின் மனத்தில் வன்முறை இடம்பிடித்துள்ளது. யார் மதத்தில் இருந்தால் என்ன? விலகிப் போனால் என்ன? அது அவரவர் உரிமை, தனிப்பட்ட விவகாரம் என்று விலகியிருக்க முடியாமல் தடுப்பது எது? ஏன் அடுத்தவர்களின் சட்டையைக் கழுவுகிற சலவைத் தொழிலாளிகளாக மனத்தை வைத்திருக்க இருக்க வேண்டும்? 
மதங்கள் குறித்த தெளிவற்ற போக்கு, மதங்கள் பற்றிய தெளிவான விரிவான வெளிப்படையான கலந்துரையாடல்களை பொதுவெளியில் நிகழ்த்துவதில் இருக்கிற தடைகள் இவையெல்லாம்தான் மதத்தின் பெயரலால் செய்யப்படுகின்ற அரசியலுக்கான இடத்தை ஏற்படுத்துகின்றன.
உலகில் பெரும்பாலான அரசியல் - மத அடிப்படைவாதத்தினால், ஏகாதிபத்திய அடிப்படைவாதத்தினாலுமே உறுதியடைந்திருக்கின்றன. அடிப்படைவாதம் என்பது இங்கே வெறுமனே மதம் சார்ந்த ஒன்றல்ல. அது ஏகாதிபத்திய அரசியல். ஒரு வணிகத்திற்கான முதலீடு. இஸ்லாத்தை விட்டு வெளியேறியனைக் கொல்வதற்குத் துரத்தும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஒருபக்கம், முஸ்லிம்கள் மீது கற்களை வீசுவதற்கு அழைப்பு விடுக்கும் சிங்கள பௌத்த வாதம் இன்னொரு பக்கம் என்று இந்த நாடு மத தீவிரவாதத்தினால் நாளுகு்குநாள் சீரழிந்து கொண்டு வருகிறது.
இதிலிருந்து தெளிவாகும் ஒன்றுதான், ஏகாதிபத்தியம் முடிவு செய்கிற அரசியலுக்கு மதங்கள் இலக்காகியுள்ளன. மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் நோக்கத்திற்கு உதவும் வகையில் மத வெறி ஊடடப்படுகின்றது. மத இயக்கங்களே அரசுகளைத் தோற்றுவிக்கின்றன. அரசியலும் அடிப்படைவாதமும் ஒரு புள்ளியிலிருந்து துவங்கிய இரு கோடுகள். இதற்கு நாம் அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. நம் சமகாலமே சான்று.
ஏகபோக வணிக நிறுவனங்கள் அரசுகளையும் ஊடகங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முழு சமூக, அரசியல் அமைப்பு முறையையும் தங்களது வேலையாளாக மாற்றிவிட்டிருக்கின்றன. இவை அனைத்தினதும் செல்வாக்குடன், மனித மேம்பாட்டுக்கென்றிருந்த மதங்கள் இப்போது மதத்திற்காக மனிதன் என்பதாக மாறியுள்ளது.
எல்லா மதங்களும் கடவுளின் பெயரால் இன்னோரன்ன அயோக்கியத்தனங்களைச் செய்கின்றன. மத அடிப்படைவாதம் இஸ்லாம் மதத்திற்கு மட்டுமானதில்லை. அடிப்படைவாதம் எல்லா மதத்திலும் உள்ள ஒன்று. எந்தக் காரணத்திற்காக உயிராபத்தை எதிர்கொண்டிருப்பவராக இருந்தாலும், ஆணாயினும் பெண்ணாயினும் அவர்களுடன் நிற்பதைத் தார்மீகமாக எண்ணுகிறேன். ஒருவரின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதென்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
உயிரைப் பறிக்கும் எச்சரிக்கைகள் தரக்கூடிய உளவியல் சிக்கல்களையும், சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகளையும் அனுபவித்தவள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருப்பவள் என்ற வகையில் இந்த வலியை என்னால் முற்றிலுமாக உணர முடிகின்றது. குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் நட்புக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் தருவதற்கு முன்பாக மதத்திற்கு முக்கியத்துமளிப்பது சாதாரணமானது. இது அவர்கள் மதவாதிகள் என்பதால் அல்ல. மதவாதிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக.
சுவர்க்கதிற்குப் போவதோ நரகிற்குப் போவதோ இங்கு யாருக்கும் அக்கறையேயில்லை. ஆனால் தான் சுர்க்கத்திற்குப் போகின்றவனைப் போலக் குறைந்தபட்சம் நடிப்பதை மனித மனம் விரும்புகின்றது. தான் மரணித்த பின்பு ”இவன் ஒரு நல்ல மனிதன். சுவர்க்கவாதி” என்று நான்கு பேராவது சொல்லவேண்டும் என்பதற்காகவே மெனக்கெட்டு நடித்தே சாகிறார்கள். இந்த நாடகப் போராட்டத்தில் மெய்யான தேடலுடன் மெய்யான கேள்விகளுடன் வருகின்ற ஒருவனைப் பற்றி யார் அக்கறைப்படப் போகிறார்? இவனுக்கு ஏன் இப்படியொரு கேள்வி வந்தது என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்பதற்குக் கூட இங்கு யாருக்கும் பொறுமை இல்லை. கேள்வி எழுப்பியவனை ஏதாவது செய்து வாயை அடைத்துவிடுவது, அல்லது மரண அறிவிப்புச் செய்துவிட்டு மறு வேலைக்குக் கிளம்புவதே வன்முறை உலகில் எளிதாகியிருக்கின்றது. இந்த நிலை நீடிப்பது ஆபத்தானது. எதிர்கால சந்ததி மத சுதந்திரம் பெற்றவர்களாக வாழ்வதற்கான சூழலை நாம் உருவாக்கவேண்டும். மதசுதந்திரம் என்று இங்கு நான் குறிப்பிடுவது, தன்னுடைய மதம்தான் பெரியது என்று தூக்கிப்பிடிப்பதோ ஏனைய நம்பிக்கையாளர்களுக்கு மத மேலாதிக்கத்தை நிரூபிக்க முயல்வது பற்றியோ அல்ல.
நம் பிள்ளைகள் விரும்பிய மதத்தைப் பின்பற்றக்கூடியவர்களாகவும் விரும்பியபோது நம்பியிருந்த மத நம்பிக்கையிலிருந்து வெளிவரக் கூடியவர்களாகவோ மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். மதம் பற்றிய கேள்விகளை அச்சமின்றி எழுப்பவேண்டும். உரையாடல்களைச் செய்யவேண்டும். எல்லா மதத்தவர்களுடனும் இணைந்து கலந்து வாழவேண்ணடும். மதம் என்பது அன்பையும், நேசத்தையும் நல்லவை அனைத்தையும் போதிக்கும் ஒரு கலாசாரமாக இருக்கவேண்டுமே தவிர வன்முறையையும் கொடிய தண்டனைகளையும் அறிமுகம் செய்வதாக இருக்கக் கூடாது.
மத அடிப்படைவாதத்திற்கும் தனக்கேற்றவகையில் உலகை ஒழுங்குபடுத்த உறுதி கொணடிருக்கும் ஒரு ஏகாதிபத்திய அடிப்படைவாதத்திற்கும் இடையிலான மோதலில் இரண்டையும் எதிர்க்க வேண்டிய தேவை இருப்பதாக பாகிஸ்தானின் முன்னணி அறிவு ஜீவியாக அறியப்படும் தாரிக் அலி ”அடிப்படைவாதங்களின் மோதல்” என்ற நூலில் கூறியிருப்பதுடன் நானும் முற்றாக உடன்படுகின்றனர்.
அடிப்படைவாதத்திற்கும் ஏகாதிபத்திய அடிப்படைவாதத்திற்குமிடையிலான மோதலைத் தவிர்ப்பதாக இருந்தால் நாம் நம்மை மட்டும் திரும்பி நோக்கினால் போதாது. நமது கடந்தகாலத்தைச் செம்மைப்படுத்துவதென்பது ஒருபோதும் சாத்தியமில்லை. நாம் நம்மைத் திரும்பிப்பார்த்து உணர்கின்ற அதேநேரம் நாம் செப்பனிடவேண்டியது, செப்பனிடக் கூடியதும் எதிர்காலம் மட்டுமே. அதற்கு நாம் நிகழ்காலத்தில் கவனம்கூட்ட வேண்டும். அதுதான் நம் கையில் இருக்கின்றது.
மத வெறிக்குப் பலியான இறுதியான தலைமுறையாக நாம் இருப்போம். நம் தலைமுறைக்கு இந்த அனுபவங்கள் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக