ஞாயிறு, 28 ஜூலை, 2019

BBC : இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன?


முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : தமிழகத்தில் ஓடும் வைகை,
தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பாய்ந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கடல் மட்ட உயர்வால் இந்த நதிகள் மூழ்கிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோர் மேற்கொண்ட இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் 2019 ஜூன் 25ஆம் தேதியிட்ட Current Science இதழில் வெளியாகியிருக்கின்றன.
தென்தமிழகத்தில் பாயும் மற்றொரு நதியான தாமிரபரணி கடந்த காலத்தில் வைகையின் துணை நதியாக இருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
தற்போதுள்ள இந்திய நிலப்
பகுதிக்கு வெளியில் இந்த நதிகள் ஓடிய நிலப்பரப்புதான் தற்போதைய மன்னார் வளைகுடாப் பகுதியாக கடலில் மூழ்கியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொள்ள அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது?
தமிழக எல்லையோரங்களைக் காண்பிக்கும் செயற்கைக்கோள் படங்களைப் பார்த்தபோது, வைகை, தாமிரபரணி ஆகிய இரு நதிகளின் டெல்டாக்களும் திடீரென முடிந்ததைப்போல (abrupt truncation) இருந்ததையடுத்தே, இந்த நதிகளுக்கு நீட்சி இருக்குமா என்பதை மன்னார் வளைகுடா பகுதியில் தேட ஆரம்பித்தனர். GEBCO என்ற இணையதளம் வழங்கும் கடல்கீழ் தரைமட்ட வரைவுப் படங்கள் (General Bathymetric Chart of the Oceans) உதவின.

இந்த கடல்கீழ் தரைமட்ட வரைவுப்படத்தைப் பயன்படுத்தியும் ArcGIS என்ற புவிசார் தகவல் மென்பொருளைப் பயன்படுத்தியும் கடலுக்கடியில் வைகையும் தாமிரபரணியும் பாய்ந்த ஆற்றுத் தடங்களை இவர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
இந்தியாவின் தொலைஉணர்வு செயற்கைக்கோள்கள் அனுப்பிய படங்களை வைத்து மேலும் ஆய்வுசெய்தபோது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போதைய முகத்துவாரத்தில் இருந்து கிழக்குமுகமாக பாய்ந்த வைகை, ராமேஸ்வரத்திற்கு வடக்காகச் சென்று, பிறகு தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது. அதற்குப் பிறகு அங்கிருந்து நானூறு கிலோ மீட்டர் தூரம் தெற்கு திசையிலேயே பயணிக்கிறது. அதாவது இலங்கையின் தென் முனையில் இருக்கும் காலி வரை இந்த நதி செல்கிறது.
"செயற்கைக்கோள் படங்களில் இம்மாதிரி ஒரு வழித்தடம் தென்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் வைகை பாய்ந்ததற்கான தடம்தான் அது" என்கிறார் ராமசாமி.
இதேபோல, தாமிரபரணி நதி ஓடியது போன்ற பள்ளங்களும் கடலடியில் காணக் கிடைத்திருக்கின்றன. இருந்தபோதும் மன்னார் வளைகுடா பகுதியில் ஓடிய மிகப் பெரிய நதியாக வைகை இருந்திருக்கலாம் என்றும் தாமிரபரணி அதன் துணை நதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு கடல் மட்டம் இருந்தது என்பது தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆய்வுசெய்தபோது, அந்தத் தகவல்களும் கடலடி கடற்கரை தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் பொருந்திப்போயின. "கடந்த 20,000 ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் உயர ஆரம்பித்ததும் இந்த இரு நதிகளும் படிப்படியாக மூழ்க ஆரம்பித்தன" என்கிறார் ராமசாமி.e>தமிழகத்தையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசநாட்டுப் பள்ளத்தாக்குப் பகுதியில் உருவாகிறது வைகை நதி. தேனி, மதுரை, திருப்புவனம், பரமக்குடி வழியாகப் பாய்ந்து அழகன்குளம் அருகில் கடலில் கலக்கிறது.
"ஆதிகாலத்தில் இருந்தே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது பெரியார் பாசனப் பகுதியாக இருக்கும் இடம் ஒரு காலத்தில் வைகையின் டெல்டாவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அதுவரை கடல் இருந்தது. பிறகு, திருப்புவனத்தில் ஒரு டெல்டா உருவாகியிருக்கிறது. பிறகு, பரமக்குடியில் ஒரு டெல்டா இருந்தது. இதற்குப் பிறகுதான், ராமநாதபுரத்தில் தற்போது உள்ள டெல்டா உருவானது" என வைகை நதியின் பாதையை விளக்க ஆரம்பிக்கிறார் ராமசாமி.
கடல்கீழ் தரைமட்டத்தின் படங்கள் ஆராயப்பட்டபோது தற்போதைய ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே இருந்து இலங்கையின் காலி வரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தென்பட்டது. தற்போது மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த பள்ளத்தாக்குப் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பகுதியே வைகை நதி ஓடிய தடம் எனக் கண்டறியப்பட்டது.
அதேபோல தாமிரபரணி நதியின் முகத்துவாரத்திலிருந்தும் ஒரு பள்ளத்தாக்கு நீண்டது. அந்தப் பள்ளத்தாக்கு ஒரு கட்டத்தில் வைகையின் பாதையுடன் கடலடியில் இணைகிறது.
இந்தப் பாதைக்கு மேற்கில் மற்றொரு தடமும் தென்படுகிறது. அதுவே இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம். இதன் துவக்கம், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் பழையாறு எனப்படும் பரளியாறாக இருக்கலாம் என்கிறார் ராமசாமி.
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்படும் ஆறாக இது இருக்கலாம் என்கிறார் அவர்.
e>தமிழ் நாட்டில் நீண்டகாலமாகவே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு இருந்து அழிந்ததாகவும் அந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பரந்து விரிந்திருந்ததாகவும் அந்த நிலப்பரப்பு குமரிக் கண்டமென அழைக்கப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டுதென்றிசை
யாண்ட தென்னவன் வாழி"
என சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் கூறப்படுவது இந்தக் குமரிக் கண்டம்தான் என தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுவது வழக்கம்.
தற்போதைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாமா? "எங்களுடைய கண்டுபிடிப்பின்படி குமரிக்குத் தெற்கே சுமார் 2 -3 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள நிலப்பரப்பு இருந்திருக்கலாம். அவ்வளவுதான். மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியாவ வரை இந்த நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார் ராமசாமி.
இந்த குமரிக்கண்டம் என்ற கருத்தாக்கம் குறித்து நிலவியல் அடிப்படையில் விரிவான நூல் ஒன்றை 'குமரி நிலநீட்சி' என்ற பெயரில் எழுதிய நிலவியல் ஆய்வாளர் சு.கி. ஜெயகரன், பிரம்மாண்டமான குமரிக்கண்டம் ஏதும் கன்னியாகுமரிக்கு தெற்கில் இருந்ததில்லை என்ற தன்னுடைய முடிவையே தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறார்.
கு. பகவதி எழுதிய 'இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள்' என்ற புத்தகத்தில் 'பொதிய மலையில் பிறந்து கொற்கையில் கடலில் சங்கமிக்கும் தாமிரவருணி முன்பு கொற்கைக்குக் கிழக்கே ஓடிக்கொண்டிருந்தது. அது இலங்கையுள்ளும் பாய்ந்தது. அதனால், அந்த ஆற்றின் பெயரையே ஈழத்திற்கும் வழங்கினர். முன்னொரு காலத்தே கன்னியாகுமரிக்கு தெற்கில் கடல் இல்லாதபோது தாமிரவருணி இலங்கையில் ஓடியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார். >ஆனால், நிலவியல் அடிப்படையில் இது சாத்தியமே இல்லை என தன் குமரி நிலநீட்சி நூலில் மறுத்திருந்தார் ஜெயகரன்.
"இந்த ஆய்வின் முடிவுகளைப் பார்த்து, இப்போது இலங்கையில் வைகை ஓடியதாக பலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த ஆய்விலேயே குறிப்பிட்டிருப்பதைப் போல, மன்னார் வளைகுடாப் பகுதியில்தான் வைகையும் தாமிரவருணியும் ஓடியிருக்கின்றன" என்கிறார் ஜெயகரன்.
இந்தக் கண்டுபிடிப்பு, ஆதிச்சநல்லூர் புதைமேடு குறித்த மர்மத்திற்கும் விடையளிக்கக்கூடும் என்கிறார் பேராசிரியர் ராமசாமி. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் பழங்காலத்தில் உடல்களை அடக்கம் செய்யப்பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்தன. அந்த இடத்தில் அவ்வளவு பெரிய மயான பூமி இருந்திருந்தால், அதற்கு அருகில் மிகப் பெரிய நகரமோ, நாகரீகமோ இருந்திருக்க வேண்டும். ஆனால், ஆதிச்சநல்லூருக்கு அருகில் அப்படி ஒரு பழங்கால நாகரீகம் ஏதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
"ஒரு கடல்கோள் நடந்தபோது தாமிரபரணி வழியாக பல உடல்கள் அங்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்ற கருத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்கிறார் ராமசாமி.
விரைவிலேயே பூம்புகாரில் கடலினுள் மூழ்கிய பகுதிகள் குறித்தும் இது போன்ற கடலடி ஆய்வுகளை மேற்கொள்ளப் போவதாக பேராசிரியர் ராமசாமி தெரிவிக்கிறார். இதற்காக 8.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக