திங்கள், 8 ஜூலை, 2019

7 லட்சம் கோடி கடன் வாங்கி, 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை... இந்திய பட்ஜெட்

Muralidharan Kasi Viswanathan : இந்த பட்ஜெட்டினால், வருமான வரியில் 15 ரூபாய் 50 காசு குறையும், கார்ப்பரேட் நிறுவனங்கல் கூடுதலாக 26 ரூபாய் வரி செலுத்துவார்கள் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், நிதி நிலை கடந்த ஐந்தாண்டுகளாக மிக மோசமடைந்திருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் சொல்வதுபடி பார்த்தால், படுத்தபடுக்கையாக இருக்கிறது நிலைமை.
இந்த நிதிநிலை அறிக்கையின்படி பார்த்தால் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் 2019-20ஆம் ஆண்டில் 19 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செலவு 27 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை கடனாக வாங்கப் போகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கப்படவுள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்.
இதில் கவலை தரத்தக்க அம்சம், 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கி 6.6 லட்சம் கோடி ரூபாயை ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாக செலுத்த வேண்டும். நம்முடைய மொத்த வருவாயே 19 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக இருக்கும்போது, அதில் வட்டிக்கு மட்டும் 6.6 லட்சம் கோடி என்றால் மீதமிருப்பது 13 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வழக்கமான செலவுகளைக்கூட அரசால் செய்ய முடியாது.

இந்தப் பற்றாக்குறை என்பது, பட்ஜெட்டோடு முடியவில்லை. பட்ஜெட்டிற்கு வெளியிலும் கடன் வாங்கப்படுகிறது. நம்முடைய பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கும் கடன்கள் பட்ஜெட்டில் வராது. உதாரணமாக, நேஷனல் ஹைவேஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா, ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம்.
இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே 4.4. லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளன. இவை பொதுத் துறை நிறுவனங்கள் என்பதால், இதுவும் அரசின் கடன்தான். பட்ஜெட்டில் காட்டினால், கடன்விகிதம் அதிகரிக்கும் என்பதால், நிறுவனங்கள் தனியாக வாங்குவதைப் போல இந்தக் கடன்கள் காட்டப்படுகின்றன.
இப்படி பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களையும் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6 சதவீதம் வருகிறது.
இது தவிர, மாநில அரசுகளின் பற்றாக்குறை, கடன் ஆகியவை இருக்கின்றன. இதையும் சேர்த்துக்கொண்டால் நாட்டின் கடன் என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்பது 26 சதவீதம். அதாவது, அரசின் மொத்த அளவே ஜிடிபி-யில் 26 சதவீதம்தான். ஆனால், ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 10-11 சதவீதத்தை அரசே கடனாகப் பெற்றால், எப்படி சரியாக இருக்கும்?
இதற்கு எவ்வளவு வட்டி கட்டுவது? 7 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று, அதில் 6.6 லட்சம் கோடியை வட்டியாகக் கட்டுகிறோம். பிறகு எப்படி நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக