சனி, 6 ஜூலை, 2019

1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தினகரன் : சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பாக  சைதை சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்துவதற்காக  1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான தொடக்க விழா சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் நேற்று மாலை நடந்தது.இந்த விழாவில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் தலைமை  தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்து பேசியதாவது: மழை நீர் சேகரிப்பு திட்டம் அருமையான திட்டம். குடிநீர் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும் திட்டம். ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய வேலையை எதிர்கட்சியான திமுக  செய்து கொண்டிருக்கிறது.


எதிர்கட்சியாக இருக்கக்கூடிய திமுக ஆளும் கட்சியாகவும், ஆளுங் கட்சியாக உள்ள அதிமுக எதிர்கட்சியாகவும் இருப்பதாக மக்களுக்கு தோன்றுகிறது.  தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கு ஆட்சியாளர்களே காரணம். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. குடிநீருக்காக மக்கள் பல இடங்களில் அலைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 5, 6 மாதங்களுக்கு முன்பே தண்ணீர் பஞ்சம் வரும் என எச்சரிக்கப்பட்டது. ஆட்சியில் உள்ளவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். இதனை கருத்தில்கொண்டு தான் திமுக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணி மக்கள் பங்களிப்போடு துவங்கப்பட்டது. மக்கள் பணிகளை சிறப்பாக செய்ததன் காரணமாக அதற்கு பரிசாக நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்கள் பெற்று  மகத்தான வெற்றியினை பெற்றோம். நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது.ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாய் எப்போதும் உங்களோடு இணைந்து  இருப்போம். மழை நீர் சேகரிப்பு திட்டப் பணிகளை போல தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில்  முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.நகர் தனசேகர், மகேஷ்குமார், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக