சனி, 22 ஜூன், 2019

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவை கெடுத்த செல்லகுமார் .. நேருவின் flashback பேச்சு

நேருவுக்கு செல்லக்குமார் பதில்!மின்னம்பலம் :  திருச்சி திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தன் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியிடம், பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்து மாவட்டம் தோறும் திமுக இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடத்தியது. திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய நேரு, “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடனும்னு ஒருத்தர் கேட்டிருக்காரு. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜ், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இருந்த உறவைக் கெடுத்ததே அவர்கள் இருவர்தான். சட்டமன்றத்தில் செல்லக்குமார் தலைவர் எதிரிலேயே பேசினார். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அதே செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் வேலைசெய்து வெற்றிபெற வைத்தோம்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.செல்லக்குமாரை இன்று பிற்பகல் மின்னம்பலம் சார்பில் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் தொடர்பில் கிடைக்கவில்லை. அவருடன் இருந்த காங்கிரஸ் கட்சியினர், “ராகுல் காந்தி உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தொகுதியில் ஒரு கிராமம் விடாமல் நன்றி சொல்லி வருகிறார் செல்லக்குமார். அதுவும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , நிர்வாகிகள் என யாரையும் விடாமல் அழைத்துச் செல்லுகிறார். வேப்பனஹள்ளி திமுக எம்.எல்.ஏ. முருகன் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு தளி பிரகாஷ், இப்போது ஜெயித்த ஓசூர் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோரையும் அழைத்துக் கொண்டு ஓசூரிலுள்ள திமுக மாவட்ட அவைத் தலைவர் யுவராஜின் வீடு தேடிப் போய் நன்றி சொன்னார். அங்கே இருந்தபோதுதான் நேரு பேச்சை எல்லாரும் டிவியில் பார்த்தார்கள்” என்று கூறினர்.
சிறிது நேரம் கழித்து செல்லக்குமாரே நம் தொடர்புக்கு வந்தார். “கே.என். நேரு உங்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே ?”என்று கேட்டோம்.
“1996-2001 சட்டமன்றத்தில் நான் உறுப்பினராக இருந்தேன். இருபது வருடம் முன்பு நடந்தது பற்றி நேரு பேசியிருக்கிறார். அரசியல் நாகரிகம் கருதி இதை விவாத மேடையாக்க நான் விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார் கிருஷ்ணகிரி எம்.பி.யான செல்லக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக