திங்கள், 17 ஜூன், 2019

ஒரே நேரத்தில் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் தேர்தல் .. திருமாவளவன் ஆதரவு!

மோடி கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு!
மின்னம்பலம் : ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது நல்லதுதான் என்று விசிக தலைவர்
திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை முன்வைத்து மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக வரும் 19ஆம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் மக்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக டெல்லி செல்வதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 17) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவனிடம் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. அப்படி நடந்தால் நல்லதுதான்.
அது தேர்தல் ஆணையத்தின் செலவைக் குறைக்கும். காலமும் விரயமாகாது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மிகப்பெரிய கால இடைவெளியில்தான் தேர்தல் நடந்துவருகிறது. அதனை எந்த அளவுக்கு சீர்செய்ய முடியும் என்று தெரியவில்லை ” என்று பதிலளித்தார்.

பிரதமரை முதல்வர் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, “பிரதமரை முதல்வர் சந்தித்து தமிழக பிரச்சினைகள் குறித்து மனு அளித்ததாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் உட்கட்சிப் பிரச்சினை குறித்துதான் பிரதமரிடம் பேசியுள்ளார், தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு இருப்பதால்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடித்துள்ளது. மோடியும் அதிமுகவுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது என்று நினைக்கிறேன்” என்றும் விமர்சித்தார். மேலும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்களவையில் குரல் கொடுப்போம் என்றும் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக