திங்கள், 17 ஜூன், 2019

ஆயிரத்தொரு சொற்கள்.. ஷோபா சக்தி

ஆயிரத்தொரு சொற்கள்
ஆயிரத்தொரு சொற்கள்next.vikatan.com -ஷோபாசக்தி : நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இன வன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தூரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நூலகம், இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலீஸாரால் முற்றாக எரியூட்டப் பட்டபோது எனக்கு 13 வயது. 90,000 நூல்களும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளும் வானம் நோக்கி எரியும் சுவாலையை, அந்த இரவில் எங்கள் கிராமத்தின் கடற்கரையிலிருந்து நாங்கள் பார்த்துக்கொண்டி ருந்தோம்.


இந்தக் காலகட்டத்தில்தான் நான் உணர்ச்சி வரிகளை எனக்குத் தெரிந்தளவு சந்தத்தில் எழுதத் தொடங்கினேன். தன்மானம், தமிழீழம், சுதந்திரம், புலிவீரம்... என்ற மாதிரியான சொற்கள் அந்த வரிகளிலிருக்கும். எழுதுபவற்றை எப்படிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவது என்ற வழி எனக்குத் தெரியவில்லை. ஆனால் மக்கள் படித்தாக வேண்டுமே. இரவோடு இரவாக எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடச் சுவரிலும் கூட்டுறவுக் கடைச் சுவரிலும் அந்த வரிகளை அடுப்புக் கரியால் எழுதிவைப்பேன். அதையெல்லாம் ஆர்வமுடன் படிக்க எங்கள் கிராமத்திலொரு சுவர் வாசகர் வட்டமுமிருந்தது.

அப்போது என்னிடம் நிறைய உணர்ச்சி வரிகளும் ஏராளமான குட்டிக் கதைகளுமிருந்தன. ஆனால் அவற்றை எழுதுவதற்கான தாள்கள்தான் தட்டுப்பாடாக இருந்தன. கடையில் தாள்களை வாங்குவதற்குக் காசு வேண்டுமே. கவிதை, கதை எழுதப் போகிறேன் என்று வீட்டில் காசு கேட்டால், உதை கிடைக்குமே தவிர காசு கிடைக்காது. பாடப் புத்தகம் வாங்கித் தருவதற்கே பத்துத் தடவை யோசிக்க வேண்டிய நிலையில்தான் என் பெற்றோர்கள் இருந்தார்கள்.

ஆயிரத்தொரு சொற்கள்
பள்ளியில் எங்களுக்கு எட்டுப் பாடங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனியாகக் குறிப்பேடுகள் வைத்திருக்க வேண்டும். வீட்டிலிருந்த வறுமை காரணமாக, நான்கு குறிப்பேடுகளை மட்டுமே வாங்கி, ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரித்து இரண்டு பாடங்களுக்காக வைத்திருப்பேன். என் நிலைமை சற்றுப் பரவாயில்லை. அப்போது குறிப்பேடு வாங்க வசதியற்று பள்ளிக் கல்வியையே இழந்தவர்கள் பலர்.

பாடம் எழுதும் குறிப்பேட்டில் ஆங்காங்கே கவிதைகளோ குட்டிக் கதையோ எழுதிவைத்திருப்பேன். அவை தப்பித் தவறி ஆசிரியர்களின் கண்களில் பட்டால், தோல் உரிய பிரம்படி நிச்சயம். படிக்கிற பிள்ளை பாடங்களில் மட்டுமே முழுவதுமாகக் கவனம் செலுத்தவேண்டும் என்பது ஆசிரியர்களின் நிலைப்பாடு.

நான் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு,  புலிகளுடன் சேர்ந்தபோது எழுதுவதற்குத் தாள்கள் தட்டுப்பாடாக இருக்கவில்லை என்றாலும் நினைத்ததையெல்லாம் எழுத முடியாத கட்டுப்பாடு இருந்தது. இயக்கத்தில் நானிருந்த  அணிக்குத் தலைவராக இருந்தவர், பிற்காலத்தில் புகழ்பெற்ற கவிஞராகவும் எழுத்தாளராகவும் ஆகிய நிலாந்தன். நான் எழுதிய சில கவிதைகளை அவரிடம் காட்டியிருக்கிறேன். அவர் இப்போது போலவே அப்போதும் மூர்க்கமான இலக்கிய விமர்சகராகவும் தயவுதாட்சண்யமில்லாத நிராகரிப்பாளராகவும் இருந்தார். இடுப்பில் துப்பாக்கி வேறு எப்போதும் வைத்திருப்பார்.

இலங்கைச் சிறையிலிருந்த காலத்தில், எப்போது சிறைக்குள் வன்முறை வெடித்து சிங்களக் கைதிகளால் குட்டிமணி, தங்கத்துரைபோல கொல்லப்படுவேனோ என எப்போதும் அச்சத்திலேயே நான் இருந்ததால் கவிதை, கதை எழுதும் எண்ணமே தோன்றவில்லை. உயிருக்கு முன்னே என்ன மயிர் இலக்கியம் சொல்லுங்கள்!

சிறையிலிருந்து வெளியே வந்தபின்பு, நான்கு வருடங்கள் தாய்லாந்தில் அகதி வாழ்க்கை. படிப்பதற்குத் தமிழில் ஒரு பத்திரிகைத் துண்டுகூட அங்கே கிடைக்காது.  அழகான குறிப்பேடுகள் நிறைய வாங்கி, அவற்றை எனது கதைகளாலும் கவிதைகளாலும் நிரப்பித் தள்ளினேன். நானே எழுதி நானே படித்தால் போதுமா? இந்தச் சமூகம் என்னைப் படிக்க வேண்டாமா! பாங்கொக் நகரில் அப்போது வாழ்ந்த 200 வரையான தமிழ் அகதிகளுக்காக  ‘நெற்றிக்கண்’ என ஒரு பத்திரிகையைத் தொடக்கினேன். எட்டு வெள்ளைத் தாள்களில் கட்டுரைகள், கவிதைகள், கதை, துணுக்குச் செய்திகள் என நெருக்கமாகக் கையால் எழுதி, பொருத்தமான ஓவியங்களையும் பக்கங்களிடையே தீட்டி, நகல் இயந்திரத்தால் 20 பிரதிகளாக்கி விநியோகித்தேன். முதற் பக்கக் கட்டுரையின் தலைப்பே அதிரடியாக இருந்தது:  ‘ஏமாற்றும் ஏஜென்ஸிகளை நம்பி, எண்ணுகிறார்கள் சிறையில் கம்பி.’

அய்ரோப்பா, கனடாவுக்கு அனுப்புவதாகச் சொல்லி, கொழுத்த தொகையைப் பெற்றுக்கொள்ளும் பயண முகவர்களில் சரிபாதியினர், தாங்கள் இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்துவந்த அகதிகளை தாய்லாந்திலேயே கைவிட்டுவிடுவார்கள். முறையான விசா வைத்திருக்காத அந்த அகதிகள் பாங்கொக் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். என்னுடைய பத்திரிகைக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவது இதழைக் கொண்டுவர நான் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, நானே குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சட்டவிரோதக் குடியேறிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டேன்.

ஆயிரத்தொரு சொற்கள்
நான் பாரிஸ் வரும்போது, எனக்கு 25 வயது. வந்ததும் முதல் வேலை, 20 வெள்ளைத்தாள்களில் எனது சொந்தக் கதையை எழுதி ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதுதான். அது அரசியல் தஞ்சம் கேட்டு எழுதிய சுயவரலாறுதான் என்றாலும், ஆங்காங்கே சில புனைவுகளையும் சேர்க்க வேண்டித்தான் இருந்தது. ஏனென்றால், ஓர் உண்மையான அகதியின் வரலாறு இப்படித்தான் இருக்கவேண்டும் என உள்துறை அமைச்சகத்தில் அவர்களாகவே ஒரு சட்டம் செய்துவைத்திருக்கிறார்கள். அந்தச் சட்டத்திற்குள் அடங்காத அல்லது அதிகாரிகளது அறிவுக்கு எட்டாத வரலாறுகளை ஓர் அகதி கொண்டிருக்கவே முடியாது என அவர்கள் நம்புகிறார்கள்.

பாரிஸில் தாள் தட்டுப்பாடுகளோ கட்டுப்பாடுகளோ இல்லாதிருந்தபோதும், எழுதுவதற்கு ஒரு மேசையோ, எழுதுவதற்கான சூழலோ இல்லாமலேயே பல வருடங்கள் வாழ்ந்தேன். ஒரு சிறிய அறையை ஆறு நண்பர்கள் பகிர்ந்து வாழ்ந்தோம். படுக்கவே இடமில்லை, இதில் எங்கே எழுத! அதிகாலை 4 மணிக்கு வேலைக்குப் போகும் நண்பர்கள் காரணமாக, இரவு பத்து மணிக்கெல்லாம் அறை விளக்குகள் அணைக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகான நடமாட்டமெல்லாம் இருளில்தான்.
பின்பு, ஒரு தொழிலாளர் விடுதியில் போய்த் தங்கினேன். நான் ஒரு நாவலில் குறிப்பிட்டிருந்ததுபோல, ஆறு சவப்பெட்டிகளை நெருக்கமாக அடுக்கிவைக்க எவ்வளவு இடம் தேவையோ அவ்வளவு இடம்தான் அந்த அறை. நான் உணவு விடுதியில் பாத்திரங்கள் கழுவும் பணியிலிருந்தேன். அறையிலிருந்து காலை ஒன்பது மணிக்கு வேலைக்குக் கிளம்பினால், அதிகாலை ஒரு மணிக்குத்தான் வேலையால் திரும்பிவருவேன். களைப்போடு படுக்கையில் சாய்ந்தால் மனதில் கதைப் பாத்திரங்கள் தோன்றாது. இன்று கழுவாமல் மிச்சம் வைத்துவிட்டு வந்த கரிப் பாத்திரக் குவியலே மனதை ஆக்கிரமித்திருக்கும். அவை சில வேளைகளில் கனவுகளிலும் உருளும்.

வேலையின் நடுவே, மாலையில் 3 மணியிலிருந்து 6 மணி வரை இடைவேளை. நான் வேலை செய்த உணவு விடுதிக்கு அருகேதான் புகழ்பெற்ற ‘பொம்பிடு’ நூலகம்  இருக்கிறது. இந்த நூலகக் கட்டடம் பின்நவீனத்துவப் பாணியில் கட்டப்பட்டது என்கிறார்கள். என்றாலும் பாதுகாப்புச் சோதனைகளும் கெடுபிடிகளும் பக்காவாக இருக்கும்.  இடைவேளையின்போது அங்கே போய்விடுவேன். சில நாள்களில், நுழைவு வரிசையில் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாகக் காத்து நிற்கவேண்டியிருக்கும். உள்ளே நுழைந்து ஒரு மேசையைப் பிடித்துத் தாளில் எழுதத் தொடங்குவேன். என் எழுத்து எறும்பு நடை நடந்து ஒரு பக்கத்தைத் தாண்டும் முன்பே இடைவேளை முடிந்துவிடும். இந்த நூலகத்திலிருந்துதான் என் முதலிரண்டு நாவல்களையும் எழுதி முடித்தேன்.

ஆயிரத்தொரு சொற்கள்
இப்போது என் தங்கையின் குடும்பத்தோடு பாரிஸின் புறநகர் ஒன்றில் வசிக்கிறேன். நாங்கள் அய்ந்து பேர், இரண்டு அறைகள் கொண்ட சிறிய அப்பார்ட்மென்டில்  வசிக்கிறோம். இந்த நாட்டின் சட்டப்படி அய்ந்து நபர்கள் வாழத் தகுதியற்ற அப்பார்ட்மென்ட் இது. சட்டத்தையும் சமாளித்து எழுத்தையும் ஒருவாறு சமாளித்துக்கொண்டிருக்கிறோம். எனது தங்கையும் ஓர் எழுத்தாளர்.

அசோகமித்திரன், ‘அயோவா’ பல்கலைக்கழகத்தின் அழைப்பில் அமெரிக்கா போய், எழுத்தாளர் உறைவிடத்தில் தங்கியிருந்து, அந்தப் புதுமை அனுபவங்களைச் சித்திரித்து எழுதிய  ‘ஒற்றன்’  நாவலைப் படிக்கும்போதெல்லாம்,  நிம்மதியாக எழுதுவதற்கான வசதிகளும் தனிமையுமுள்ள ஓர் எழுத்தாளர் உறைவிடம் எனக்கும் வாய்க்காதா என நினைத்துக் கொள்வேன். அசோகமித்திரன் போல எனக்கும் வயதானால் ஒருவேளை கிடைக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டதுண்டு.

சென்ற வருடம் 50 வயதைக் கடந்தேன். இந்த வருடம் அவ்வாறானதோர் எழுத்தாளர் உறைவிடத்தில் வந்து தங்கும்படி பெல்ஜியத்தில் இயங்கும் ‘பஸ்ஸ போர்டா’ இலக்கிய அமைப்பிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் எனக்கு ஒதுக்கிய ஏப்ரல் - மே மாதங்களில், சினிமா சம்பந்தமாக எனக்குச் சில வேலைகளிருந்தன. நடுவில்  ‘கான்’ திரைப்பட விழாவும் இருக்கிறது.  நான் கதை எழுதி,  நடித்த ‘ரூபா’ திரைப்படம் ‘மும்பை பால்புதுமையினர் திரைப்பட விழா’வில் காண்பிக்கப்படவிருப்பதால் என்னையும் மும்பைக்கு  அழைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு எழுத்தாளர் உறைவிட வாய்ப்பைச் சிக்கெனப் பற்றிக்கொண்டேன். எத்தனை வருடக் கனவு!

எழுத்தாளர் உறைவிடம் கொஞ்சம் ஆடம்பரமாகத்தான் இருக்கிறது. பெரிய பெரிய கண்ணாடிச் சாளரங்கள் வீதியைப் பார்த்தவாறிருக்கின்றன.  எழுதும் அறையின் சுவர்களில் ஃபிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் ஃபிளெமிஷிலும் ஏராளமான இலக்கிய நூல்கள் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டி ருக்கின்றன. என்னுடைய பயணப் பையில் எப்போதுமிருக்கும் பாரதியார் கவிதைத் தொகுப்பை இந்தப் புத்தக வரிசைகளிடையே வைத்துவிட்டுப் போவதாக முடிவெடுத்தி ருக்கிறேன்.

பெரியதும் பழைமையானதுமான, எழுதும் மேசையில் பரிதி வெளிச்சம். 25 வருடங்களாக இயங்கும் இந்த உறைவிடத்தில் எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் வந்து தங்கி, இந்த மேசையிலிருந்து எழுதியிருப்பார்கள் என நினைக்கும்போதெல்லாம் நான் இந்த மேசையைத் தொட்டுக் கும்பிட மறப்பதில்லை. நமக்குக் கடவுள், சாத்தான் எல்லாமே எழுத்துதானே.

புதிய உறைவிடத்தில் காலையில் அதீத உற்சாகத்துடன் எழுந்திருப்பேன். எழுதும் மேசை முன் உட்கார்ந்து முதலில் இணையதளங்களில் செய்திகளைப் படிப்பேன். எழுதத் தொடங்க, முதலில் நாட்டு நடப்புகளில் என்னை ‘அப்டேட்’ செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு நானே வைத்திருக்கும் விதி.

கண்டியில் முஸ்லிம்கள்மீது சிங்களக் காடையர்களின் தாக்குதல், தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள். அபாயா உடை அணிந்துவந்த ஆசிரியைகள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் அவசரக் காலச் சட்டம். ஊரடங்குச் சட்டம். தாக்கப்படும் பள்ளிவாசல்கள், குடும்பத்தோடு வெடித்த ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ தற்கொலைக் குண்டுதாரிகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் பத்தாவது வருட நினைவேந்தல் என்று  உள்நாட்டுச் செய்திகளும், படகில் ரியூனியன் தீவுக்குச் சென்று அகதித் தஞ்சம் கோரிய 300 இலங்கை அகதிகள் திருப்பியனுப்பப் பட்டார்கள், அய்ரோப்பாவை நோக்கி வந்த சிரியா அகதிகள் மெடிட்டரினியன் கடலில் மூழ்கிச் சாவு என்று வெளிநாட்டுச் செய்திகளுமிருக்கும். என் உற்சாகம் அப்படியே வடிந்துவிடும். இந்தச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் எழுதி மட்டும்தானே என்னால் கடக்கமுடியும்.

இந்த எழுத்தாளர் உறைவிடத்தில், நாளொன்றுக்குச் சரியாக ஆயிரம் சொற்கள் எழுதுவது என்பது நான் வகுத்துக்கொண்ட இன்னொரு விதி. ஆயிரத்திற்கு மேலே ஒரு சொல் அதிகமாக எழுதினாலும் என் எழுத்து நீர்த்துப்போய் அர்த்தம் கெட்டுவிடும் என்பது என் உறுதியான நம்பிக்கை. ஆயிரம் சொற்களை எட்டியதும் அப்படியே கணினியை அணைத்துவைத்துவிட்டு வெளியே கிளம்பிவிடுவேன்.

பிரஸெல்ஸ் நகரின் பழைமை வாய்ந்த பகுதியில், பழைய சந்தைச் சதுக்கத்தில் என்னுடைய உறைவிடம் இருக்கிறது. இந்தப் பகுதியில் ரசனையான உணவகங்களும் மதுச்சாலைகளும் நிறைந்திருக்கின்றன. மதுச்சாலைகளின் முன்னே மெல்லிய வெயிலில் மக்கள் அமர்ந்திருந்து பெரிய பெரிய கண்ணாடிக் கோப்பைகளில் பீர் அருந்தியவாறு இளவேனிற்காலத்தை அனுபவிக்கிறார்கள். பெருமளவான உல்லாசப் பிரயாணிகளும் வெளிநாட்ட வர்களும் வீதிகளில் காணப்படுகிறார்கள். அந்த முகங்களிடையே ஏதாவதொரு கறுப்புத் தமிழ்முகம் தென்படுகிறதா என ஒவ்வொரு நாளும் கவனிப்பேன். இதுவரையிலும் ஒரு முகமும் தென்பட வில்லை. ஒன்றரை வயதில் பேசத் தொடங்கி என்ன புண்ணியம்! பேசுவதைக் கேட்பதற்கு எதிரே ஆள் வேண்டாமா?

ஆயிரத்தொரு சொற்கள்
பாரிஸ் நகரத்தின் தெருவோர நடைபாதைகள் போலவே இந்த நகரத்தின் நடைபாதைகளிலும், உடலைப் பழைய கம்பளிகளால் போர்த்தியபடி  சிரியா நாட்டு அகதிகளும் வேற்றுநாட்டு அகதிகளும் காணப்படுகிறார்கள். இவர்களில் அநேகர், கொந்தளிக்கும் மெடிட்டரினியன் கடல் அலைகள்மீது நடந்துவந்து அற்புதம் நிகழ்த்தியவர்கள். ஒவ்வொரு நாளும் அவர்களிடம் பேச்சுக்கொடுப்பேன்.  என்ன மொழியில் பேசுவேன் எனக் கேட்காதீர்கள். இந்த உலகத்தில் அகதிகளுக்கென தனிச் சங்கேதச் சொற்கள் உள்ளன.

இன்று ஆயிரம் சொற்களை எழுதி முடிக்கும்போது நேரம் மாலை 5 மணி. பிரஸ்லெஸ் வீதிகளில் மனம்போன போக்கில் நடக்கத்தொடங்கினேன். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நகரத்தில் பால் புதுமையினரின் மிகப் பெரிய அணிவகுப்பு நடக்கயிருப்பதால் வீதிகளில் வானவில்  கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அவற்றிற்குக் கீழாக நான் நடந்து கொண்டிருந்தேன். எதிர்ப்பட்ட முகங்களில் கறுப்புத் தமிழ் முகமொன்றையும் இன்றும் காணவில்லை. தமிழ் அகதிகளுக்கு அய்ரோப்பாவின் எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டே வருகின்றன.

நடந்துகொண்டிருந்தவன், ஒரு பாதைக்கு ‘ரோஸா லுக்ஸம்பேர்க்’ எனப் பெயரிடப்பட்டிருந்ததைக் கண்டு அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினேன். சில நிமிடங்கள் நடந்ததும் பாதையின் ஓரத்திலே ஒரு சாம்பற் குவியலைக் கண்டேன். அதற்குள் எரிந்தும் எரியாமலும் பொருள்கள் கிடந்தன. எனக்கு எதிரே சற்றுத் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு போலீஸ் வண்டிகளுக்குள் போலீஸார் இருப்பது தெரிந்தது. இன்னும் சில அடிகள் எடுத்துவைத்தபோது, பாதையோரத்திலிருந்த பழைய மாடிக் கட்டடத்தில் கறுப்பு பேனர்  கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப் பேனரில் ஃபிரஞ்சு மொழியில் இப்படி எழுதப்பட்டிருந்தது: “இந்தக் கட்டடத்திற்குள்  நுழைந்து சோதனையிடுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம், அகதிகள் மீதான அடக்குமுறையை நிறுத்து!”

நான் அந்தக் கட்டடத்தை நெருங்கிப் போனேன். இங்கே ஒரு கறுத்த தமிழ் முகத்தை ஒருவேளை நான் காணக்கூடும்.  ஆனால் அந்தக் கட்டடம் மூடியிருந்தது. வாசற் கதவில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இரண்டு குழந்தைகளுள்ள ஒரு குடும்பம் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிழலாக அந்த போஸ்டரில் நிற்கிறது. அகதிக் குழந்தைகள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதை எதிர்த்து வடிவமைக்கப்பட்ட பிரசார போஸ்டர்.

வாசற் கதவுக்கு அருகே ஃபிரஞ்சு மொழியில், அந்த ஆதரவு மையம் திறக்கப்படும் நேரமும், உதவி கோரி எந்நேரத்திலும் அழைக்க  ஒரு தொலைபேசி எண்ணும் சுவரில் பொறிக்கப்பட்டிருந்தது.

நாளைக்குக் காலையிலே இங்கு வந்து பார்க்கவேண்டும் என நினைத்தபடி நான் திரும்பியபோது, எதிரே சாம்பல் குவியலைக் கண்டதும் ஒரு கணம் நின்றேன். அந்தச் சாம்பல் குவியலுக்குள்ளிருந்து வாகான ஒரு கரித்துண்டைத் தேடி எடுத்தேன். பின்பு சுவரில் பொறிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு அருகே ‘அவசரத்துக்கு’ எனத் தமிழில் கரியால் எழுதினேன்.

இந்த இரவில் ஒரு கறுப்புத் தமிழ் அகதி இங்கே வரக்கூடும்.

ஷோபாசக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக