வெள்ளி, 7 ஜூன், 2019

ஆந்திரா ஜெகன் மோகன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? ( ஆந்திரா சபாநாயகர் ரோஜா)


தினமலர் :ஐதராபாத் : ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசி, லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலை அமோக வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் தற்போது அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதிக்கு என்ன செய்வது என்ற பெரிய கேள்வியுடன் குழப்பத்தில் உள்ளனர் ஒய்எஸ்ஆர்., காங்., கட்சியின் எம்எல்ஏ.,க்களும் எம்.பி.,க்களும்.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகளில் 23 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 175 தொகுதியில் 151 இடங்களிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று ஆந்திர முதல்வரானார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் ஆந்திராவின் நிதிநிலை ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், ஜெகன் மோகன் அளித்த மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நிதிக்கு என்ன செய்வது என்ற கவலை எழுந்துள்ளது. 2014-15 ம் நிதியாண்டில் ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை ரூ.16,200 கோடியாக இருந்தது.

மூத்த குடிமக்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கான பென்சன் ரூ.2000 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும். விவசாய ஆதரவு தொகை ரூ.12500 லிருந்து ரூ.50,000 ஆக்கப்படும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு மாதம் ரூ.15,000. இலவச விவசாய கடன், இலவச போர்வெல். மகளிர் கடன் தள்ளுபடி, பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு ரூ.75,000 வரை நிதி, 25 லட்சம் வீடுகள் உள்ளிட்டவை ஜெகன் மோகன் அளித்த வாக்குறுதிகள்.

நிதி ஆதாரம் உயர்த்தப்படும், உலக வங்கியிடம் கடன் பெறப்படும் என ஜெகன் கூறினார். ஆனால் அரசு அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே ரூ.2.97 லட்சம் கோடி கடன் உள்ளது எனவும், 2019 ஏப்ரல் கணக்கீட்டின்படி ஆந்திராவின் உற்பத்தி அளவு 5 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். ஜெகனின் 5 ஆண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர அரசு நல திட்டங்களை செயல்படுத்தவும் நிதி தேவை. தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகனுக்கு ஆந்திராவின் நிதி நெருக்கடி பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.


அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஜெகன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சந்திரபாபு நாயுடு இத்தகைய படுதோல்வியை சந்தித்தார் என்றால், இதே தீர்ப்பை தான் மக்கள் ஓய்எஸ்ஆர் காங்.,க்கும் அளிப்பார்கள். நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதால் திட்டங்களை செயல்படுத்துவதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக