புதன், 19 ஜூன், 2019

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைப்பு .. மக்களவை தேர்தல் .. வீடியோ


மின்னம்பலம் : கர்நாடக காங்கிரஸில் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள் நிலவிவந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கலைத்து உத்தரவிட்டுள்ளது. எனினும், கர்நாடக காங்கிரஸ் தலைவரும், செயல் தலைவரும் மட்டும் பதவிநீக்கம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கர்நாடக பிரதேச காங்கிரஸின் தற்போதைய கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய தலைவரிலும், செயல் தலைவரிலும் எந்த மாற்றமுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து கர்நாடக காங்கிரஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. கூட்டணி அரசை நடத்துவதால் வேதனைகளுக்குட்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தெரிவித்துள்ளார்.

கமிட்டி கலைப்பு குறித்து கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் மட்டுமல்லாமல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், தொகுதி காங்கிரஸ் கமிட்டிகளையும் எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசிக்க வேண்டும். அனைத்து படிநிலைகளிலும் கட்சியில் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸில் பல்வேறு படிநிலைகளில் தலைவர்கள் செய்த தவறுகளாலும், மாநில தலைவர்களின் தோல்விகளாலும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர். சரியாக செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய குழுக்களை கொண்டுவருவதற்காக கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது.
சீனியர் தலைவர்களின் பதவி ஆசை, மற்றவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுதல், கட்சிக்குள் பல அணிகள், அணிகளுக்கு இடையேயான சண்டைகள், தலைவர்களின் விசுவாசிகளுக்கு இடையேயான மோதல்கள் போன்றவற்றால் கட்சியின் ஒற்றுமை சீர்குலைந்துவிட்டதாகவும், விரைவில் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சித்தராமைய்யா நீக்கப்படலாம் எனவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக