புதன், 5 ஜூன், 2019

இளையராஜாவின் முதல் இசைத்தட்டு அன்னக்கிளி அல்ல .. தென்றல் காற்றே ... நாகூர் ஹனிபா ... வீடியோ


John Durai Asir Chelliah : இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் இசைத்தட்டு
“அன்னக்கிளி” என்றுதானே நீங்களும் , நானும் இதுநாள்வரை நினைத்துக் கொண்டிருந்தோம் ?
இல்லவே இல்லை! இளையராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் இசைத்தட்டு ,
இதுதான் !
“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு!
கொஞ்சம் நில்லு! – எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு .”

இதோ , அது பற்றி சொல்பவர் ,
நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி :
“அப்பா [ நாகூர் ஹனீபா ] மேல்சபை உறுப்பினராக இருந்த நேரம் . சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த அப்பாவைத் தேடி ஒரு நாள் இளைஞர் ஒருவர் வந்தார்.
வந்தவர் , " ஐயா ... நான் நல்லா மெட்டுப் போடுவேன். உங்கள் பாடலுக்கு மெட்டுப்போட விரும்புகிறேன்” என்றார் பவ்யமாக.
அப்பாவோ, "அப்படியென்றால் நீங்கள் என் பாடல்களை வெளியிடும் இசை நிறுவனத்தைத்தான் அணுகவேண்டும்'’ என்றார்.
வந்தவரோ, "முதலில் நான் அங்குதான் சென்றேன். அவர்கள்தான் உங்களைச் சந்தித்துவிட்டு வரச்சொன்னார்கள்” என்றார்.
இரண்டொரு பாடல்களையும் அவர் அப்பா முன் பாடிக் காட்டினார். அப்பாவின் முகத்தில் பிரகாசம்.

’"சரி , ஏற்கனவே ஒரு பாடல் எழுதி , அது பதிவாக வேண்டியதுதான் பாக்கி. அதற்கு நீங்கள் இசை அமையுங்களேன் , பார்க்கலாம்” என்றார்.
அப்படி அந்த இளைஞரால் இசை அமைக்கப்பட்டு பதிவான பாடல்தான் ,
"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
எங்கள் திரு நபியிடம் போய்ச் சொல்லு ,
சலாம் சொல்லு '’ என்ற பாடல்.
இதைக்கேட்டு மகிழ்ந்த அப்பா, "தென்றல் காற்றே ஒரு கணம் நிற்பதுபோல் பண்ணிவிட்டீர்களே , அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. எங்கேயோ போகப்போகிறீர்கள் " என மனதாரப் பாராட்டினார்.
அதற்குப் பின் அப்பா , சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் போய் தொடர் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு , தமிழகம் வந்தபோது , எங்கு பார்த்தாலும், "மச்சானைப் பார்த்தீங்களா , மலைவாழத் தோப்புக்குள்ளே'’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது . ஆம் . அப்பாவின் கணிப்புப்படியே அந்த இளைஞர் எங்கேயோ போய் விட்டிருந்தார்” என்று சொல்லி மகிழ்கிறார் நாகூர் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி.
அந்த இளைஞர்தான் - இளையராஜா !
இந்தத் தகவலைப் படித்து விட்டு "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. " பாடலை யூடியூபில் கேட்டுப் பார்த்தேன்..!
இன்னமும் கொஞ்சம் இனிமை கூடி இருந்தது !
கேட்டுத்தான் பாருங்களேன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக