திங்கள், 24 ஜூன், 2019

திமுக -காங்கிரஸ் உரசல்: ப.சிதம்பரம் தலையீடு!

மின்னம்பலம் : திமுக -காங்கிரஸ் உரசல்: ப.சிதம்பரம் தலையீடு!ஜூன் 21ஆம் தேதி நடந்த காங்கிரஸ் ஆய்வுக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என்று பேச... அதற்கு பதிலடியாக மறுநாள் ஜூன் 22 ஆம் தேதி ‘திமுக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்’ என்று திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் திமுக மாசெவான முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேச... திமுக காங்கிரஸ் கூட்டணி உரசல் என்று பரபரப்புச் செய்திகள் வந்தன.
இதையடுத்து அன்று மாலையே கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்து, ‘நான் கலகக் குரல் எழுப்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தையே நான் முன்வைத்தேன். திருச்சியிலிருந்து எங்களுடைய குரல் இது. நீங்கள் நினைத்து வந்தது போல வேறு எதுவும் இல்லை. ஒரு சாதாரண மாவட்டச் செயலாளராக என்னுடைய எண்ணத்தை தலைவருக்கு சொன்னேன். தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறியுள்ளேன். அதனை இவ்வளவு பெரிதாக்கிவிட்டீர்கள்” என்று கூறினார்.
இதன் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும், “ திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதிவாய்ந்தது” என்று அறிக்கை விட்டதோடு, ‘காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளை ஊடகங்களில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்திருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அடிகோலியதே கராத்தே தியாகராஜன் தான் என்று கருதிய கே.எஸ். அழகிரி அவர் பற்றி ப.சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார்.
“இவ்வளவு நடந்தும் அவர் ஒரு தன்னிலை விளக்கத்தை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கவே இல்லை. அவரை வைத்துக் கொண்டு என்னால கட்சி நடத்த முடியவிலை. நீங்கள்தான் அவரிடம் பேச வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அப்போது அழகிரிக்கு பதில் சொன்ன சிதம்பரம், “நான் பொதுவாக தமிழ்நாட்டில் கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை. மக்களவைத் தேர்தலில் கூட எத்தனை சீட் என்பதற்காகத்தான் நான் ராகுல் காந்தியிடம் பேசினேனே தவிர, யாருக்கு என்ன சீட் என்பது பற்றியெல்லாம் நான் பேசவேயில்லை.ராகுல் 13 சீட்டுக்குக் குறையாமல் கேட்க, இதுபற்றி கனிமொழி திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்.

அப்போது ஸ்டாலின், 13 சீட்டெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி கனிமொழியை சென்னை கிளம்பி வரச் சொல்லிவிட்டார். இந்தத் தகவல் அறிந்த நான் உடனடியாக ராகுலை சந்தித்து, திமுக எத்தனை சீட் கொடுக்கிறதோ அதை வாங்கிக்கொள்வதுதான் தமிழகத்தில் காங்கிரஸுக்கு நல்லது என்று சொல்லி ராகுலை சம்மதிக்க வைத்தேன். இப்போது உங்களைப் பற்றி கூட புகார்கள் எனக்கு வருகின்றன” என்று இடித்துரைத்திருக்கிறார்.
அதையடுத்து கராத்தேயிடமும் இதுபற்றி சிதம்பரம் பேசியிருக்கிறார். அதன் பிறகே இன்று (ஜூன் 24) கராத்தே தியாகராஜன் ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார்.
“மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அது சில நாளிதழ்களில் வந்ததால் திமுக முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என். நேரு சில கருத்துகளை கூறியிருந்தார். தொடர்ந்து அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறிவிட்டார். இது தொடர்பாக நான் கூறியதும் எனது தனிப்பட்ட கருத்தாகும். அது திமுகவுக்கோ, திமுக காங்கிரஸ் கூட்டணிக்கோ எதிரானது அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக