வியாழன், 13 ஜூன், 2019

அகதிகள் முகாம் ரேசன் கடைகளில் வேறு பொருட்களை வாங்கினால் மட்டுமே சீனி, பருப்பு, சமையலெண்ணை....


Pathi Nathan : தமிழ்நாட்டில் இருக்கும் ரேசன்கடைகள் விளிம்புநிலை மக்களின் பசியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது வடஇந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த ரேசன் கடையில்லையானால் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப ஊதியமும் அவர்களை நம்பியிருக்கும் ஊரில் உள்ள குடும்பங்களுக்கு போய்சேராது.
தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் அளவையும், நிறுவையும் சரியாக ஒருசாமானியன் வாங்கினால் உலகில் உள்ள அத்தனை அணுகுண்டுகளும் தானாக வெடித்துவிடும். இன்று உலகை காப்பது ரேசன்கடை பணியாளர்கள்தான்.
1990 ல் இருந்து 1998 வரை முகாமிலிருந்த காலங்களில் ரேசன் கடையில் வரிசையில் நின்றிருக்கிறேன். எத்தனை ரேசன்கடை பணியாளர் மாறினாலும் எல்லாரும் நிறுவையிலும், அளவையிலும் ஒரேமாதிரியே இருப்பார்கள். இவர்கள் எங்குதான் பயிற்சி எடுக்கிறார்களோ?
மதுரையில் பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் முன்பு அகதிகள் முகாமிருந்தது.( தற்போது திருவாதவூர் முகாமிற்கு மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதில்). இந்த முகாமில் அகதிகள் ரேசன் கடை பணியாளரை அடித்து காயப்படுத்திய கதைகள் இருக்கிறது. அடித்த அகதி முகாம் மாறிப்போனதும், நீதிமன்த்தில் வழக்கு இருந்ததால் இலங்கை போக முடியாமல் தவித்ததும் எனக்குத்தெரியும்

பெரிய அகதிகள் முகாம்மாக இருந்தால் முகாமிற்குள்ளயே ரேசன் கடையிருக்கும். ஆனால் வாரம் முழுதும் வேலைநாட்களில் கடை திறந்திருக்காது. மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் அரிசியும், குறிப்பிட்ட நாட்களில் மண்ணெண்ணை, மற்றும் பருப்பு சீனி, சமையல் எண்ணை வழங்கப்படும். அந்த நாட்களை தவறவிட்டால் அந்த மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வாங்குவது முடியாத நிலை இருக்கிறது.
முறையான ரேசன் கடைகளில்லாமல் அரிசி நனைந்து வீணாக போனது, அதனால் முகாம்வாசிகள் காசு சேர்த்து ஓலைக்கொட்டிலால் ரேசன் கடை கட்டியது, சில இடங்களில் தொண்நிறுவனம் கட்டிய பாலர் பாடசாலைகளில் ரேசன் கடையிருந்தது, அதனால் குழந்தைகள் படிக்க முடியாத நிலை இப்படியெல்லாம் ரேசன் கடை வரலாறுகள் முகாம்களி இருக்கிறது.
சிறிய முகாம்களுக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. அகதிங்கிற அலட்சியம் உலகம் முழுதும் இருப்பதுபோல் இங்கிருந்தாலும் ஊருடனான ரேசன் கடைகள் ஒப்பீட்டளவில் பறவாயில்லை என்றே சொல்வேன்.
ரேசன் கடை பணியாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள பூர்வீக குடிமக்கள் மீது கொஞ்சமாவது பயமிருக்கும். ஏதாவது திருகுதாளம் செவதாக இருந்தாலும் மிக கவனமாக இருப்பார்கள். பணியாளர்கள் மேலதிகாரிக்கும், மக்களுக்கும் பயப்படும் நிலையிருக்கும்.
முகாம்காம் ரேசன்கடை பணியாளர் மேலதிகாரிகளை சமாளித்தால் போதும் முகாமில் அவர்தான் எஜமான். பெரும்பாலும் முகாம்களில் பெண்கள்தான் ரேசன் கடைக்கு போவார்கள். இவர்கள் ரேசன் கடை காரர் என்ன, எவ்வளவு கொடுக்கிறாரோ அதை சத்தமில்லாமல் வாங்கி வந்துவிடுவார்கள்.
ஊரில் உள்ள ரேசன் கடையில் ரேசனில் இல்லாத மசாலா பொடி, தேயிலை பாக்கற், மா போன்ற பொருட்கள் இருக்கும் அதை வாங்கினால்தான் ரேசன் பொருள்கள் தருவேன் என்று கட்டாயப்படுத்துவதில்லை. விரும்பினால் வாங்கலாம்.
ஆனால் முகாமில் உள்ள ரேசன் கடைகளில் ரேசனில் இல்லாத சில பொருட்களை அதன் விலைக்கு காசு கொடுத்து வாங்கினால் மட்டும் ரேசன் பொருட்களான சீனி, பருப்பு, சமையலெண்ணை வாங்க முடியும் என்ற நிலையிருக்கிறது. தேவையோ தேவையில்லையோ கட்டாயம் வாங்க வேண்டும். அப்படி எனக்குத்தெரிந்த ஒருமுகாமில் முன்பு தேயிலை, மசாலாப்பொடி வித்ததாகவும் தற்போது பிரபல பிராண்டு நிறுவனத்தின் மைதா மா பாக்கற் 25 / ரூபாய்க்கு ரேசன் கடையில் விற்பதாக கூறினார்கள். அதனை வாங்கித்தான் அத்தியாவசியமான ரேசன் பொருட்கள் வாங்குவதாக கூறுகிறார்கள்.
அவர்கள் விற்கும் பொருள்வேண்டாம் என்றால், ரேசன் பொருட்கள் வாங்க முடியாது.
ரேசன் கடைகளை தமிழக அரசு சமீபத்தில் நவீனப்படுத்தியது ஸ்மாட் காடு சிஸ்டமெல்லாம் கொண்டுவந்தது ரேசன் காடுடன் ஆதார் எண்ணையும் சேர்த்தார்கள். இந்த நடைமுறைகள் முகாம்களில் உள்ள ரேசன் கடைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் முறைகேடுகளை தடுக்கமுடியாவிட்டாலும் குறைக்கலாம்.
வெளியே உள்ள ரேசன் கடைகள் போல் இருந்தாலாவது பறவாயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக