புதன், 5 ஜூன், 2019

ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்

ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!
 மின்னம்பலம் :  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது இருக்கும் ஒரே டென்ஷன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அணி மாறிவிடாமல் தடுத்து நிறுத்துவதுதான்.
திமுக தலைமை ரகசிய பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அக்கட்சிப் புள்ளிகள் சிலர் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் கிட்டத்தட்ட பேரம் பேசி அட்வான்ஸ் கொடுத்துவைத்திருப்பதாகத் தகவல்கள் சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டது போல பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுக பிரமுகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருவதும், இதன் விளைவாக சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஏதேனும் நடந்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வும்தான் முதல்வரிடம் இப்போது அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவிலேயே ஒரு சாரார்.
தன் ஆட்சியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த ஆபரேஷனை முறியடிப்பதற்காக, மத்திய வருமான வரித் துறையின் தலையீடு வேண்டுமென பாஜக பிரமுகர்களின் உதவியை எடப்பாடி நாடியிருப்பதாக நேற்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆட்சியைக் கவிழ்க்க திமுக ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்லப்படும், இந்த ஆபரேஷனுக்குக் காரணமானவர்கள் என்று தமிழக உளவுத் துறை முதல்வருக்கு ஒரு பட்டியல் கொடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் எ.வ.வேலு ,பொன்முடி, ஜெகத்ரட்சகன், செந்தில் பாலாஜி ஆகியோரது பெயர்கள் முன் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தாலே ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் பணப் பரிமாற்றத்தை எடுத்துவிட முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லியிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், இப்போது பந்து பாஜக வசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் பணப் பரிமாற்றத்தை ரெய்டுகள் மூலம் தடுத்து நிறுத்திய மத்திய அரசு, இன்னமும் அதே பாதையில் பயணிக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத் தேர்தல் முடிவுகளில் கடுமையான அதிருப்தியில் இருக்கும் பாஜக மேலிடம், ‘தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றியைத் தவறவிட்ட வாக்கு வித்தியாசத்தை விட, அதிமுகதான் அதிக தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளது. எனவே பாஜகவை விட அதிமுக மேல்தான் மக்கள் அதிக அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்று கருதுகிறது. எனவே, இனி எடப்பாடியின் எல்லா கோரிக்கைகளும் டெல்லியால் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக