புதன், 12 ஜூன், 2019

திமுக வெற்றிக்கு உதயநிதியின் பங்கு....... சமுகவலையில் உலாவரும் கருத்துக்கள்

LRJ : உதயநிதியின் மாநில அளவிலான பிரச்சாரம் தான் நடந்து முடிந்த
நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றும் அதனால் அவருக்கு உடனடியாக கட்சியில் பதவி தந்தே ஆகவேண்டும் என்று திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு மட்டும் இந்த கேள்வி:
இவரை விட அதிகமான கூட்டத்தை ஒருகாலத்தில் நடிகை ராதிகாவும் கூட்டினார். திமுக கூட்ட்டணிக்காக. ஒரு தேர்தலில் மட்டுமல்ல பல தேர்தல்களில். அதனால் திமுக பெற்ற வெற்றிகளுக்கு ராதிகா பொறுப்பென்றால் ஏற்பீர்களா?
என்னவிதமான உளறல் இது? இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு திமுக என்கிற கட்சியின் கொள்கையோ, கோட்பாடோ, அதன் சார்பில் முன்வைக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரமோ, வேட்பாளர்களின் தேர்வோ, திமுக கூட்டணி கட்சிக்காரர்களின் உழைப்போ எதுவுமே காரணமல்ல; உதயநிதியின் உலா தான் முதன்மைக்காரணம் என்பதன் மூலம் நீங்கள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் கேலி செய்கிறீர்கள் என்பது கூடவா உங்களுக்கு உறைக்கவில்லை?

சொந்த படத்தை ஓடவைக்கவே வலுவான காமெடியனோ அழகான கதாநாயகியோ தேவைப்படும் "நடிகர்" உதயநிதியின் முகவசீகரமும் பேச்சாற்றலும் கொள்கைத்தெளிவும் தான் திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் என்பதை வேறெங்கும் வேண்டாம் சொந்த வீட்டில் இருப்பவர்களிடம் போய் சொல்லிப்பாருங்கள். அவர்கள் எதனால் சிரிப்பார்கள் என்று நான் சொல்லத்தேவையில்லை.
கோபுரத்தை தாங்கி நிற்பது அதில் மேலுக்கு ஒட்டவைக்கப்பட்டிருக்கும் அலங்கார பொம்மைகளல்ல. கண்ணுக்குத்தெரியாத அடிக்கற்கள். அலங்கார பதுமைக்கு முகஸ்துதி செய்வதாக நினைத்துக்கொண்டு அடிக்கற்களை அவமதித்துக்கொண்டிருக்கிறீர்கள். காலம் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அனைத்தையும் அது கணக்கு வைத்துக்கொள்ளும். அண்ணா சொன்னபடி அது தேவைப்படும்போது கணக்கும் தீர்க்கும்.
இப்படித்தான் அழகிரிக்கும் ஆலவட்டம் சுற்றியது ஒரு கும்பல். அஞ்சா நெஞ்சன் என்று. அவரில்லாவிட்டால் தென் தமிழ்நாட்டில் திமுகவே இருக்காது என்றெல்லாம் ஏத்தி விட்டார்கள். இன்று அவர் நிலையென்ன? திமுகவின் நிலையென்ன? அதே நிலைமை உதயநிதிக்கும் ஏற்படக்கூடாது என்று உண்மையிலேயே நினைப்பவர்கள் அவருக்கு இப்போது இந்த தேவையற்ற ஆலவட்டம் சுற்றமாட்டார்கள். அவரது ஆணவத்தை அதிகரிக்க செய்யவும் மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக