செவ்வாய், 4 ஜூன், 2019

இளையராஜாவுக்கு ஏன் பாரத் ரத்னா பட்டம் கொடுக்கவில்லை? அவரது ஜென்மம் சாபல்யம் அடையுமே?

LRJ : தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழ்மொழி வாழ்த்தை முறையாக அங்கீகரித்து அறிமுகம் செய்தபோது அதற்கு இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன் என்றொரு மாமேதை. அவர் தாய் மொழி தமிழல்ல.
அதே தமிழ்மொழியை செம்மொழியாக இந்திய அரசாங்கம் முறையாக அங்கீகரித்தபோது இயற்றப்பட்ட செம்மொழி வாழ்த்துப்பாடலுக்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்றொரு இளம் மேதை. நவீன தமிழ்தேசிய மரபணு சோதனையின் கீழ் இவரும் “அக்மார்க்” தமிழரல்ல. ”அந்நிய மதமானவர்”.
தமிழ்த்தாய் வாழ்த்தை தன் கானக்குரலில் பாடும்படி தமிழக அரசாங்கம் சார்பில் கோரப்பட்டபோது அதை நிர்தாட்சண்யமாக நிராகரித்தவர் இசையரசி எம் எஸ். சுப்புலட்சுமி.
பெரியார் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்தவர் இசைஞானி இளையராஜா.
எம் எஸ்ஸும், இளையராஜாவும் “100% அக்மார்க் தமிழர்கள்”. தேசபக்தி மிக்க இந்தியர்கள். மிகச்சிறந்த பக்திமான்கள். தபஸ்விகள். வாழும் கடவுள்கள்.
ஒரே ஒரு சின்ன குறைதான். எம் எஸ் சுப்புலட்சுமிக்கு இந்திய அரசால் அருளப்பட்ட பாரதரத்னா பட்டத்தை இசைஞானிக்கும் கொடுத்தால் அவரது ஜன்மமும் சாபல்யமடையும். தமிழ்நாட்டு சூத்திர, சத்சூத்திர, தலித்துகளின் சமஸ்கிருதமயமாதலின் சிகரமாகவும் அது அமையும்.

தமிழ்நாட்டு ஜதிபல்லக்குகளில் இன்னும் எத்தனை நாளைக்கு தான் பாரதிகளே பவனி வருவது. எம் எஸ்களும் இளையராஜாக்களும் கூட அதில் ஏறட்டுமே என்று ஆறுதல் அடைவோம். வேறு வழி?
நம் குழந்தைகளை இருகைகளால் எடுத்து கொஞ்சுகிறோம். அப்போது நம் முகம் பார்த்து அந்த மழலை ஒண்ணுக்கடித்தால் கோபித்துக்கொண்டு குழந்தையை கைவிடுவோமா என்ன? பக்குவமாய் ஓரத்தில் இறக்கிவைத்து முகத்தை கழுவிக்கொள்வதைப்போலத்தான் இதுவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக