சனி, 1 ஜூன், 2019

துப்பட்டா அவசியம் ....உடை கட்டுப்பாடு.... வேட்டி அணிய அனுமதி!

மின்னம்பலம் : அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாடு தொடர்பாகத்
தமிழக தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளியான நிலையில், பாரம்பரிய உடையான வேட்டி அணிவதில் தடை ஏதுமில்லை என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அணியும் உடைகள் தொடர்பாக, நேற்று (மே 31) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், பணியாளர் கையேட்டில் இதனைக் குறிப்பிடும் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. “ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். உடைகள் அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் இருக்க வேண்டும். சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அவசியம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும் என்றும், டிசர்ட் போன்ற கேஷுவல் ஆடைகளை அணியக் கூடாது என்றும், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணியவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆண் ஊழியர்கள் வேட்டி கட்டக் கூடாதா என்ற சந்தேகம் எழுந்தது. சென்னை தலைமைச் செயலகத்துக்கு வரும் அரசியல்வாதிகள் வேட்டி கட்டிக்கொள்ளும்போது அரசு ஊழியர்களுக்கு மட்டும் அது பொருந்தாதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் தரும் வகையில், இன்று (ஜூன் 1) தலைமைச் செயலாளர் சார்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. பாரம்பரிய உடைகளை ஊழியர்கள் அணிவதற்குத் தடை ஏதுமில்லை என்றும், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்ட பத்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக நேரம், விடுமுறை மற்றவை என்ற தலைப்பில் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த தகவல்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆண் ஊழியர்கள் பேண்ட் அல்லது தமிழ் மற்றும் இதர இந்தியக் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வேட்டி அணியலாம் என்று ஏற்கனவே வெளியான அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக