ஞாயிறு, 16 ஜூன், 2019

மம்தா : உடனடியாக பணிக்கு திரும்புங்கள்: ‘டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கிறேன்’

உடனடியாக பணிக்கு திரும்புங்கள்: ‘டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கிறேன்’ - மம்தா பானர்ஜி அறிவிப்புதினத்தந்தி :மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகவும், எனவே டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கூறினார். கொல்கத்தா, கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கடந்த 10-ந்தேதி நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்கினர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் 11-ந்தேதி முதல் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் 5-வது நாளாக நேற்றும் நீடித்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், மம்தா பானர்ஜி என்.ஆர்.எஸ். மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.


இந்த நிலையில் மம்தா பானர்ஜி நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். எனது மந்திரிகள் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோரை டாக்டர்களை சந்திப்பதற்கு அனுப்பி வைத்தேன்.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்களுடன் பேச நான் தயாராக இருக்கிறேன். அவர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு நேற்றும் (நேற்று முன்தினம்), இன்றும் (நேற்று) 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. அரசியல் சாசன அமைப்புக்கு நீங்கள் (டாக்டர்கள்) மரியாதை வழங்க வேண்டும்.

டாக்டர்களின் மீது நடந்த தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டரின் அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும்.

பா.ஜனதா அரசுகள், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்கள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் ஜனநாயகத்தை நம்பும் நான் அதை கடைப்பிடிப்பது இல்லை. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மம்தா பானர்ஜியை, மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக மம்தாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தனது அழைப்பை மம்தா பானர்ஜி ஏற்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக