வெள்ளி, 14 ஜூன், 2019

மாதவிடாய் வலிக்குச் சட்ட விரோத மாத்திரை: தமிழக தொழிற்சாலைகளின் அக்கிரமம்..

மின்னம்பலம் : மாதவிடாய் வலிக்குச் சட்ட விரோத மாத்திரை: அதிர்ச்சித் தகவல்!மாதவிடாயின்போது, மருத்துவர்கள் ஆலோசனையின்றி சட்ட விரோதமான மாத்திரைகளைப் பெண்களுக்குத் தமிழகத் தொழிற்சாலைகள் வழங்குவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது வயிறு வலி, உடம்பு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் இந்த வலிகளைத் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் செயல்படும் ஆடைத் தொழிற்சாலைகள் சில, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு வலி ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை இன்றி, சட்ட விரோதமாக மாத்திரைகள் கொடுத்துவந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தாம்ஸன் ராய்ட்ர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 100 பெண்களிடம் நடத்திய ஆய்வு மூலம் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. சில தொழிற்சாலைகள், மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு வலி குறைய, அங்கீகரிக்கப்படாத மாத்திரைகளைப் பெண்களுக்கு வழங்குகின்றன. குறிப்பாகத் தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் விடுப்பு உடல்நிலை குறித்துக் கவனிப்பதற்குத் தனி மேற்பார்வையாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் முன்னிலையில் அந்த மாத்திரைகள் உட்கொள்ள வற்புறுத்தப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்றி வழங்கப்படும் இவ்வகையான மாத்திரைகளால் பின் விளைவுகள் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுதா (20) என்ற பெண் 10 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்துவருகிறார். மாதவிடாய் நேரத்தில் விடுப்பு எடுத்தால் சம்பளம் குறையும் என அஞ்சி, தொழிற்சாலை வழங்கும் மாத்திரைகளை உட்கொண்டுவந்திருக்கிறார். இதனால் அவருக்குக் கருப்பையில் நார்த் திசுக் கட்டிகள் உருவாகியுள்ளன. வேலை செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் இவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் தான் வாங்கிய கடனைக் கட்டுவதற்காகவும், தனது அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காகவும், வேறு வழியின்றி அவர் வேலைக்குச் சென்றுவருகிறார். தன்னுடைய மொத்த சம்பளமான 6 ஆயிரம் ரூபாயில் பாதிப் பணத்தைக் கடன் தொகையாகச் செலுத்திவருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுபோல அங்கீகரிக்கப்படாத மாத்திரைகளை உட்கொள்ளும் பல பெண்களும் மன அழுத்தம், பதற்றம், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகள், நீர்த் திசுக் கட்டிகள், கருச்சிதைவு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிப்படைகிறார்கள் என்று கூறப்படுகிறது.
“மாதவிடாயின்போது, மேற்பார்வையாளர் முன்னிலையில் நாங்கள் கட்டாயமாக மாத்திரையைப் போட்டாக வேண்டும். மாத்திரையின் பெயரையோ அல்லது அதன் பக்க விளைவுகளையோ அவர்கள் எங்களுக்குத் தெரிவிப்பதில்லை” என ராய்ட்ர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இது 15 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தொழிற்சாலையில் தங்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழங்கப்படும் மாத்திரைகளை ராய்ட்ர்ஸ் நிறுவனத்திடம் பெண்கள் காட்டியுள்ளனர். அதில், மாத்திரையின் பிராண்ட், காலாவதி தேதி போன்ற தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அம்மாத்திரைகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் இருவர், “இந்த மாத்திரைகள் வலியைக் குறைக்கும் இபுப்ரோஃபென் (Ibuprofen), அட்வில் (Advil) போன்றவைதான். இருந்தாலும், இதனைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

ராய்ட்ர்ஸ் நிறுவனம் நடத்திய இந்த ஆய்விற்கு தமிழக அரசு சார்பில், “ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பிரச்சினைகளைக் கண்காணித்து அதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனே எடுக்கும்”என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தமிழக தொழில் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரியான மணிவேலன் ராஜமாணிக்கம், “இந்தியத் தொழிற்சாலைகள் சட்ட விதிப்படி, மருந்தகங்கள் தகுதி வாய்ந்த செவிலியர்கள் அல்லது மருத்துவர்களால் நடத்தப்பட வேண்டும். ஆனால் சில தொழிற்சாலைகள் இந்த சட்டத்தினை மீறிச் செயல்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் 40,000 ஆடைத் தொழிற்சாலைகளும் ஸ்பின்னிங் மில்களும் இயங்கிவருகின்றன. இதில் 3 லட்சம் பெண் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர் என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான பெண்கள் படிக்காதவர்கள்,குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனுராதா நாகராஜ்
நன்றி: ஸ்க்ரால்.இன்
தமிழில்: இளவேனில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக