சனி, 22 ஜூன், 2019

ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது .. பதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.


tamil.oneindia.com - veerakumaran : டெல்லி: அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை தலைமை அமைப்பான சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), இந்திய விமான நிறுவனங்கள் "ஈரானிய வான்வெளியில் பாதிக்கப்பட்ட பகுதியை" தவிர்க்கவும், தங்கள் விமானத்தை "பொருத்தமான" பகுதி வழியாக இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, ஈரான் தனது வான்வெளியில், அமெரிக்க ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானிய வான்வெளியில் பறக்கும் வர்த்தக விமானங்களும், தவறாக குறிவைக்கப்பட்டு வீழ்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க விமான ஒழுங்குமுறை, அமைப்பான, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) எச்சரித்தது. இதையடுத்து, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் தெஹ்ரான் விமான தகவல் பிராந்தியத்தில், இயங்குவதை தடைசெய்து நேற்று நோட்டீஸ் வெளியிட்டது.

இந்த நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகமும் இதேபோன்ற முடிவை இன்று எடுத்துள்ளது. "டிஜிசிஏவுடன் கலந்தாலோசித்ததன்பேரில், அனைத்து இந்திய ஆபரேட்டர்களும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, ஈரானிய வான்வெளியில் பாதிக்கப்பட்ட பகுதியை தவிர்க்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் பொருத்தமான வகையில் விமானங்களை வேறுபாதையில் இயக்குவார்கள் "என்று டிஜிசிஏ ட்விட்டரில் இன்று, தெரிவித்துள்ளது.
அமெரிக்க ட்ரோன், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, உலகெங்கிலும் உள்ள முக்கிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் விமான பயண பாதைகளை மாற்றியமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக