வியாழன், 27 ஜூன், 2019

பாஜவுக்கு தூது விடும் தங்க.தமிழ்செல்வன்: ஓரிரு நாளில் முக்கிய முடிவு அறிவிப்பு


தினகரன் :சென்னை: அதிமுகவில் சேர்ந்தாலும்
ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் குமாரை தாண்டி அரசியலில் பிரகாசிக்க முடியுமா என்ற குழப்பம் தங்க.தமிழ்செல்வனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அதிமுகவில் சேர தயக்கம் காட்டுவதாகவும்,  பாஜவில் சேருவதற்காக தூது விடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக பிளவுபட்டு டி.டி.வி.தினகரன் தனி அணியாக  செயல்பட தொடங்கியதும், அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அமமுக கொள்கை பரப்பு  செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் வலம் வந்த தங்கதமிழ்செல்வன், அந்த அணி சார்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதும், டிவி விவாதங்களில் பங்கேற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையில்  தங்க.தமிழ்செல்வன், தினகரனை திட்டும் ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களிலும், ‘டிவி’ மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தேனியில் கூட்டம்  நடத்த அமமுக நிர்வாகிகளை அழைத்த தங்கதமிழ்செல்வன், அவர்களில் பெரும்பாலானோர் சென்னைக்கு சென்று விட்டதை அறிந்து கொந்தளித்தார்.

அந்த கோபத்தை வெளிப்படுத்திய அவர், தேனியில் கூட்டம் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து கேரளாவிற்கு சென்று ஒரு ரகசிய இடத்தில் தங்கி விட்டதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, ‘‘தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் சேரப்போகிறாரா? திமுகவில் சேரப்போகிறாரா? பாஜவில் சேரப்போகிறாரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான  விஐபி தான் தங்கதமிழ்செல்வனை இயக்கி வருகிறார். தற்போது அவர் யார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தங்கதமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஓரிரு நாளில்  அத்தனை குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும். தங்கதமிழ்செல்வன் வெகு விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டினை தெரிவிப்பார்’’ என்றனர். இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ்சை தாண்டி தேனி மாவட்ட  அரசியலில் ஜொலிப்பது சிரமம். ஏனெனில் இப்போது அதிமுகவில் ஓபிஎஸ் கைதான் ஓங்கியுள்ளது.

இதனால் அதிமுகவில் சேருவது சரியாக இருக்குமா என்ற குழப்பத்திலும் தங்க தமிழ்செல்வன் இருந்து வருவதாக தகவல் வெளியாகி  உள்ளது. இதனால் பாஜவில் சேருவதற்காக தூது விட்டுள்ளாராம். இதனால், இன்றோ அல்லது நாளையோ தங்க.தமிழ்செல்வன் தனது முடிவை அறிவிப்பார் என்றும், அவர் அதிமுக தவிர இன்னொரு முக்கிய கட்சியில் கூட சேரலாம் என்றும்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக