ஞாயிறு, 9 ஜூன், 2019

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையாம் ... நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கை

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. : நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கைtamil.news18.com : தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனம் உடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் சிங்காரவேலன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தருமபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும், அதே பகுதியை சேர்ந்த திவ்யாவும், கலப்புத்திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னர் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதால், சம்பந்தப்பட்ட இரண்டு சாதியினர் இடையே வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இந்நிலையில் திருமணம் செய்த சில காலத்திலேயே, இளவரசனின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு பெற்ற நீதிபதி சிங்கார வேலன் தலைமையில் ஆணையத்தை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
பல்வேறு கட்ட விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதமே சிங்காரவேலன் ஆணையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும், ஆனால் இந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடியின் விசாரணையின் தரவுகளை வைத்து, சிங்காரவேலன் ஆணயம் இந்த மரணம் தற்கொலை என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், இளவரசனின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணையிலும் தற்கொலை என்றே முடிவு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இளவரசன் கைகடிகாரம் நின்றுபோன நேரமான 1.20 மணிக்கு குர்லா எக்ஸ்பிரஸ் கடந்து சென்றதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனம் உடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் எனவும் சிங்காரவேலன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக