திங்கள், 24 ஜூன், 2019

மோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை...! - யார் இந்த விரால் ஆச்சார்யா?

ரிசர்வ் வங்கிவிரால் ஆச்சார்யாvikatan.com - சத்யா கோபாலன் :
ஆர்.பி.ஐ துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்குள் அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசுக்கும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்ததே. ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், இதைத் தர மறுத்ததால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும், ஆர்.பி.ஐ-யும் சுமுகமாக உள்ளதாகப் பேசப்பட்ட நேரத்தில், டிசம்பர் 2018-ல் உர்ஜித் படேல் தன் ராஜினாமாவை அறிவித்தார்.  சொந்த காரணத்துக்காக ராஜினாமா செய்வதாக அதற்குக் காரணங்களும் கூறப்பட்டன. இதையடுத்து, புதிய ஆர்.பி.ஐ ஆளுநராக சக்தி கந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.
புதிய ஆளுநர் வந்த பிறகாவது எந்தப் பிரச்னையும் இருக்காது என எதிர்பார்த்த நிலையில், தற்போது மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு
விரால் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், வரும் 2020 பிப்ரவரி மாதம் நியூயார்க்கில்  உள்ள ஒரு பல்கலைக்கழக்கத்தில், பேராசிரியராக இணையவிருந்ததாகவும் அதற்காக ஆகஸ்ட் மாதமே கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆர்.பி.ஐ பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி கிருஷ்ணன்மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் 2017-ம் ஆண்டு பிரச்னை தொடங்கியது. அதற்கு முன்னர் சரியாக ஜனவரி மாதம்தான் ஆச்சார்யா ஆர்.பி.ஐ-யின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் மூன்று வருடப் பதவிக்காலத்தின் பாதி நாள்கள் பிரச்னைகளையே சந்தித்துள்ளார். மத்திய அரசு,  உர்ஜித் படேலுக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டபோது ஆச்சார்யாவுக்கும் அதே அழுத்தம் இருந்துள்ளது. படேல் ராஜினாமா செய்தபோதே இவரும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் கழித்து தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஆறு மாத இடைவெளியில் ஆர்.பி.ஐ-யில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது மிகவும் அரிதானது என ஆர்.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆச்சார்யாவின் ராஜினாமாவுக்கு என்ன காரணங்களாக இருக்கும் என அறிந்துகொள்ள இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம், `` விரால் ஆச்சார்யாவும், உர்ஜித் படேலும் ஒரே சிந்தனையுடையவர்கள். மத்திய அரசுடனான பிரச்னையின்போது இருவரும் இணைந்தே ராஜினாமா செய்யவிருந்தனர். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய பா.ஜ.க அரசு, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைப் பறிக்க நினைத்தது. அதற்காக வெளியில் உள்ள சில இயக்குநர்களைப் பயன்படுத்தியது. ஆச்சார்யாவும், உர்ஜித் படேலும் சீர்திருத்தவாதிகள். அவர்கள் மக்களுக்கு எதிரான நடைமுறைக்கு ஒருபோதும் துணை நிற்காமல் இருந்தனர். அதனால் அவர்களிடம் கொஞ்சமாக இருக்கும் சுதந்திரத்தையும் மத்திய அரசு இல்லாமல் செய்ய வேண்டும் என நினைத்துதான் பிரச்னை செய்தது.
உர்ஜித் படேல்
ஆச்சார்யாஆர்.பி.ஐ-யிடம் இருக்கும் பணத்தை மத்திய அரசு கேட்டபோது, அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் ஆச்சார்யாதான். அதைத்தொடர்ந்துதான் உர்ஜித் படேலும் மத்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டார். ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, முடிவெடுக்கும் உரிமை இவை அனைத்தும் இல்லாமல், வெறும் தாளில் கையெழுத்துப் போடச் சொல்கிறது மத்திய அரசு. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்து உர்ஜித் படேலை கையொப்பம் போடும்படி மத்திய அரசு நெருக்கியுள்ளது. முதலில் உச்சநீதிமன்றத்தில் கை வைத்தார்கள், பிறகு சி.பி.ஐ., அதைத் தொடர்ந்து தற்போது ஆர்.பி.ஐ-யையும் நெருக்குக்கிறார்கள். எந்த அமைப்பும் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. இந்த அதிக அழுத்தத்தை அனைவராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை அதனால் சிலர் வெளியில் சென்றுவிடுகின்றனர். அதில் ஆச்சார்யாவும் ஒருவர்” எனத் தெரிவித்த அவர் தொடர்ந்து,
``அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றப் போகிறேன் என இதற்கு முன்னால் ராஜினாமா செய்த பலரும் கூறியுள்ளனர். அதைத் தவிர வேறு எந்தக் காரணமும் அவர்களால் கூறமுடியாது. ராஜினாமாவுக்கு இப்படியான காரணங்களைக் கூறிதான் ஆக வேண்டும். ராஜினாமா செய்யும்போது வாய் திறக்காதவர்கள், வெளியில் சென்ற பிறகு ஆர்.பி.ஐ-யில் நடந்தவற்றைக் குற்றச்சாட்டாக கூறிய கதைகளும் உள்ளது. காரணம் கூறுவது என்பது வழக்கமான ஒன்றுதான்” என நிதானமாகக் கூறிமுடித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக