திங்கள், 10 ஜூன், 2019

புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்


வெப்துனியா :புதுவையின் முன்னால் முதல்வரும் திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்.வீ.ஜானகிராமன் அவர்கள் கடந்த 1996ஆம் ஆண்டு மே 26 முதல் 1999ஆம் ஆண்டு மார்ச் 18 வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தவர் என்பதும், இவர் புதுவையின் நெல்லித்தோப்பு என்ற தொகுதியில் இருந்து 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.வீ.ஜானகிராமன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் காலமானார். 
மறைந்த ஆர்.வீ.ஜானகிராமன் உடல் நாளை காலை 10.30 மணிக்கு மரக்காணம் ஆலந்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்களை நேரில் சந்தித்து திமுக எம்பி கனிமொழி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக