ஞாயிறு, 2 ஜூன், 2019

மீண்டும் மோடி.. மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள்.. சாராயம் குடித்த வானரம் ..

மின்னம்பலம் : அ.குமரேசன் மீண்டும் மோடி: அத்துமீறல்கள் தீவிரமாகுமா?“எதிர்க்கட்சிகளின் அவதூறுப் பிரச்சாரங்களை நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டார்கள்” என்பதுதான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிய நேரத்திலிருந்து, நரேந்திர மோடி அரசு மறுபடி பதவியேற்ற பிறகும் பாரதிய ஜனதா கட்சியினரும் அவர்களது கூட்டாளிகளும் அழுத்தமாகச் சொல்லிவரும் கருத்து. ரஃபேல் விமான பேரத்தில் பெரும் ஊழல், பண மதிப்பு ஒழிப்பால் கடும் பாதிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை, விவசாயிகள் கோரிக்கைகள் புறக்கணிப்பு, ‘சௌகிதார் அல்ல சோர்’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தேர்தல் முடிவுகள் பற்றிய ஓர் ஆய்வு என்ன சொல்கிறது? தேசிய அளவில் பதிவான வாக்குகளில் பாஜகவுக்கு 37.3 சதவிகிதம் கிடைத்துள்ளது என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதுவரையில் மத்திய ஆட்சியில் அமர்ந்த கட்சிகளிலேயே (பாஜக உட்பட) இப்போது அந்தக் கட்சி பெற்றிருப்பதுதான் மிக அதிகமான சதவிகிதம் என்றும் தெரிவிக்கிறது.
பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 45 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன (தி இந்து, மே 24).
ஒரு தொகுதியில் ஒரு கூட்டணி சார்பில்தான் அதில் அங்கம் வகிக்கும் கட்சி போட்டியிடுகிறது என்பதால் அதற்கு எத்தனை சதவிகித வாக்குகள் என்று வேண்டுமானால் பார்க்கலாம். எப்படிப் பார்த்தாலும், எந்தக் கட்சியானாலும் அது அந்தக் கூட்டணிக்கு விழுகிற வாக்குகள்தாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது என்பதால், அந்தத் தொகுதிகளில் அக்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளை அதற்கு மட்டுமே கிடைத்த வாக்குகளாகக் கணக்கிடுவது சரியான கணக்காகுமா? கூட்டணியின் மற்ற கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளை அந்தக் கட்சிகளுக்கு மட்டுமே கிடைத்த வாக்குகளாக எடுத்துக்கொள்ள முடியுமா? அவையும் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகளே. எதிர்க்கட்சிக் கூட்டணிகளுக்குக் கிடைத்த வாக்குகளையும் இப்படித்தான் மதிப்பிட முடியும்.
இந்த வாத நியாயத்தின்படி பாஜகவுக்கு மட்டுமே 37.3 வாக்குகள் கிடைத்தன எனக் கூறுவது சரியான மதிப்பீடல்ல. அந்தக் கூட்டணிக்கு 45 சதவிகிதம் கிடைத்திருப்பதையே கணக்கில் எடுத்துக்கொள்வோம். அப்படியானால் மீதியுள்ள 55 சதவிகிதம் பேர் பாஜக கூட்டணியை நிராகரித்திருக்கிறார்கள். 55 சதவிகித மக்கள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த 55 சதவிகிதத்தை ஒரே திரட்சியாகக் கட்டுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த பலவீனமும் முனைப்பின்மையும்தான் பாஜக கூட்டணிக்கு இத்தனை இடங்களாகவும் அறுவடையாகியிருக்கிறது. வேர்மட்ட நிலவரங்களைப் புரிந்துகொள்ளாமை, யாருக்குப் பிரதமர் நாற்காலி என்பதில் வெளிப்பட்ட குறுகிய நோக்கங்கள் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆளுங்கட்சிக் கூட்டணியினரும் ஆராய்ந்தாக வேண்டிய உண்மைகள் இருக்கின்றன. இந்தச் சிறுபான்மை வெற்றி, முந்தைய ஐந்தாண்டுக் கால ஆட்சியின் அத்துமீறல்களுக்கான ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரம் அல்ல. 55 சதவிகிதம் பேர் எதிர்த்திருக்கிறார்கள். மக்களில் பெரும்பான்மையினர் - பாதிக்கு மேற்பட்டோர் - மாற்று நடவடிக்கைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை முதலில் ஆளுங்கூட்டணியின் தலைமைக் கட்சியும் கூட்டாளிகளும் புரிந்துகொண்டாக வேண்டும். பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாக வேண்டும்.

இதையெல்லாமா அங்கீகரித்தார்கள்?
மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று சொல்லி, முந்தைய அத்துமீறல்களைத் தொடர்வார்களோ என்ற கவலை இயல்பாக ஏற்பட்டிருக்கிறது. திடீரென நடுராத்திரியில் உயர் மதிப்பு பணத்தாள்களுக்கு மதிப்பில்லை என அறிவித்தது, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வரித் தள்ளுபடி அளித்தது, எளிய மக்களுக்கான பல மானியங்களை வெட்டியது, தேசப் பொருளாதாரத்தில் மையமான பங்கு வகிக்கிற பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயத்தை அரசின் பொறுப்பிலிருந்து கழற்றிவிட்டு முற்றிலுமாகச் சந்தை சக்திகளின் பிடியில் ஒப்படைத்தது, விவசாயிகளின் கடன் சுமைகள் அவர்களுடைய கழுத்தை நெரிக்க அனுமதித்தது, திட்டக்குழு போன்ற ஜனநாயகபூர்வமான நிறுவனங்களைச் சீர்குலைத்தது, உச்ச நீதிமன்றச் செயல்பாடுகள் வரையில் தலையிட்டது, அரசியல் பழிவாங்கலுக்காகவும் ‘பிளாக் மெயில்’ உத்திகளுக்காகவும் செயலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டது, மாநில எல்லைக்குள் ஓடுகிற ரயிலுக்குக்கூட இந்தியில் பெயர் சூட்டியது உள்படப் பலவகைகளிலும் மாநில உரிமைகளை அவமதித்தது, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை நீர்த்துப் போகவைத்தது, தேர்வு எழுத வரும் இளையோரை அவமானப்படுத்தும் ‘நீட்’ கெடுபிடிகளைப் புகுத்தியது என மக்களை வதைத்த நடவடிக்கைகள் அனைத்தும், “மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள்” என்ற வண்ணப்பூச்சால் நியாயப்படுத்தப்படும்.
ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு தாக்குதல்களின் வலிகளை மக்கள் வெளிப்படுத்தியபோது, முன்னேற்றங்களை நோக்கிய கடுமையான பொருளாதார நடவடிக்கைகளில் சில இழப்புகளைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றும், மக்கள் சில கடுமையான நிலைமைகளுக்குத் தயாராக இருக்கத்தான் வேண்டும் என்றும் அப்போது அறிவுரை கூறியவர்கள் இவர்கள். அந்த அறிவுரைகளை ஏன் கார்ப்பரேட் கனவான்களுக்கும் பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழிகளுக்கும் சொல்லவில்லை என்ற கேள்வி வந்தது. பதில்தான் வரவில்லை. மறுபடியும் மோடி ஆட்சிதான் என்று உறுதிப்பட்டதும் பங்குச் சந்தைப் புள்ளி சரசரவென்று மேலே ஏறியது. அது கார்ப்பரேட் பெரும்புள்ளிகளும் பங்குச் சூதாட்டக் கரும்புள்ளிகளும் விடுத்த சமிக்ஞையே அல்லவா?
ஐந்தாண்டுக் கால ஆட்சியில் உண்மையிலேயே ஆதாயம் பெற்ற உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் அதே ஆட்சி தொடர்வதில் கூடுதல் குதூகலத்தோடும் கூடுதல் எதிர்பார்ப்புகளோடும் இருக்கிறார்கள். தான் கார்ப்பரேட்டுகளின் பக்கம் நிற்பதைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொண்டவராயிற்றே பிரதமர். அவரது பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் வட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களும் இருந்தார்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் தலைவர்களும் இருந்தார்கள்.
முந்தைய ஐந்தாண்டின் அத்துமீறல்கள் நியாயப்படுத்தப்பட்டு இனிவரும் ஐந்தாண்டுகளில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்ற கவலையும்கூட, பொருளாதாரம், நிர்வாகம் என்ற எல்லைகளுக்குள் நிற்கவில்லை. அவற்றைத் தாண்டி மேலும் விரிவான களத்திற்கு அந்தக் கவலை பரவுகிறது.

மன்றமும் சாசனமும் மோடியும்
நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன், இந்திய அரசமைப்பு சாசனத்தின் முன் வணங்கி நிற்கிற காட்சியைப் பார்த்த ஒரு முகநூல் நண்பர், “போன முறை நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன் அதன் வாசற்படி முன்பாகக் குனிந்து வணங்கினார் மோடி. ஐந்தாண்டுகள் நாடாளுமன்றத்தையே மதிக்காமல் பல நடவடிக்கைகளை எடுத்தார். இப்போது அரசமைப்பு சாசனத்தை வணங்குகிறார். என்ன ஆகப்போகுதோ” என்று பதிவிட்டிருந்தார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல், அதற்குப் பல மாதங்கள், பல ஆண்டுகள் முன்பிருந்தே தொடர்ச்சியாக மதவாத அரசியலைக் கையில் எடுக்கக் கூச்சப்பட்டதில்லை பாஜக. அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துகிற கட்சிகள் இங்கே உண்டு. ஆனால், மதத்துக்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி பாஜக. இந்தியாவை ஒற்றை மத ஆதிக்க நாடாக மாற்றுவதை லட்சியமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகம்தான் பாஜக என்பதைத் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்காது. பெரும்பான்மை இந்து மக்களின் ஆதரவைத் தன் பக்கம் திரட்டுகிற தேர்தல் தந்திரமாக மட்டும் இதை பாஜக கையாளவில்லை. தேசியவாதம், பெரும்பான்மைவாதம் ஆகியவற்றோடு இந்து மதவாதத்தைக் கலப்பது “இந்து நாடு” என்று இந்தியாவை அறிவிக்கிற இறுதி இலக்கோடும் சம்பந்தப்பட்டது.
“உலகில் முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன, கிறிஸ்துவ நாடுகள் இருக்கின்றன.. இந்து நாடு இருக்கக் கூடாதா” என்ற உணர்ச்சித் தூண்டல் பேச்சுகளால் கட்டப்பட்டுவந்திருப்பது பாஜக வழிமுறை. அவர்கள் தேர்தலைக் குறிவைத்து ஐந்தாண்டுத் திட்டம் பத்தாண்டுத் திட்டம் என்றெல்லாம் வகுத்து, கடுமையாக உழைக்கிறார்கள் என்று அரசியல் கருத்தாளர்கள் சொல்வதுண்டு. அந்தக் கடுமையான வேலை என்பது, வீடு வீடாக இந்த மதவாதம் சார்ந்த சிந்தனைகளைக் கொண்டு செல்வதும், மதச்சார்பின்மை என்பது இந்து மதத்திற்கு எதிரான கோட்பாடு என்ற வெறுப்புணர்வை ஊன்றுவதும்தான் என்பதை அந்தக் கருத்தாளர்கள் சொல்வதில்லை. மதச்சார்பின்மைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் நிற்கிற எதிர்க்கட்சிகள் தங்களுடைய சிந்தனைகளை இவ்வாறு வீடு வீடாக மக்களிடம் கொண்டுசென்று ஊன்றுவதில் செயல்முனைப்போடு ஈடுபட்டதில்லை.
எது கற்பனை மோடி அவர்களே?
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், மே 25 அன்று கூட்டணி எம்.பி.க்களிடையே பேசிய மோடி, “சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் நாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது, அவர்கள் கற்பனையான அச்சத்துடன் வாழ்கிறார்கள் … அதை மாற்றுவதற்கு நாம் உழைத்தாக வேண்டும்” என்றார். ஒரு பிரதமர் என்ற முறையில், சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ்கிற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும், ஒரு மாற்றம் நிகழும் போல இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரோ, அந்த அச்சமே கற்பனையானது, எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டது என்கிறார்.
மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்பதால் அடித்துக்கொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் கற்பனையாக நடித்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளா? தலைநகர் டெல்லியின் ஒரு நெடுஞ்சாலை முதல், உத்தரப் பிரதேசத்தின் ஒரு ரயில் நிலையம் வரையில் நூற்றுக்கணக்கான இடங்களில் இஸ்லாமியப் பெயர்கள் மாற்றப்பட்டது கனவில் நிகழ்ந்தவையா? இந்தியர் என்றால் இந்துக்கள்தான், இதை ஏற்க முடியாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசப்பட்டது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்தியா? சகிப்பின்மை அதிகரித்துவருகிறது என்ற கவலையை வெளிப்படுத்திய ‘கான்’ என்று முடியும் பெயர் கொண்ட திரைப்படக் கலைஞர்களையும் பாகிஸ்தானுக்குப் போய்விடச் சொன்னார்களே அதுவும் போலியாகத் தயாரிக்கப்பட்டதுதானா? தவறான மணமுறிவைத் தடுப்பதற்கும், பாதிக்கப்படும் பெண்களுக்குச் சரியான இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்குமான சட்டபூர்வ ஏற்பாடுகள் எல்லாச் சமயத்தினருக்கும் தேவை. சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தேவை. ஆனால், ‘முத்தலாக்’ சொல்கிற முஸ்லிம் ஆண்களை மட்டும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றவாளியாக்குகிற சட்டம் வெறும் மாயையா?
மத்திய அரசுப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் முகலாயர் வருகை குறித்துத் தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிற பாடம் உள்பட பல சீர்குலைவுகள் நடந்திருப்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்கள் கற்பனை உலகிலிருந்துதான் அவ்வாறு சுட்டிக்காட்டினார்களா?
போய்விட்ட ஐந்தாண்டுகளை விட்டுவிடுவோம். இதோ, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், பின்னர் “சர்ச்சைக்குரிய இடம்” என்று சாதுரியமாக அடையாளப்படுத்தப்பட்ட மனையில், இந்த ஐந்தாண்டுக் காலத்தில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதி என்று முழங்கியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத். அது உண்மையில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நல்லிணக்கத்துக்காக வாதாடுகிற அனைவரின் எதிர்ப்பையும் எந்த வழியிலும் ஒடுக்கி, அந்தக் கோயிலைக் கட்டியே தீர வேண்டும் என்கிற மறைமுக உத்தரவுதான் என்று மதச்சார்பின்மை மாண்புக்காகக் குரல்கொடுப்போர் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கையா?

மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள்
எம்.பி.க்களிடையே பிரதமர் அவ்வாறு பேசிக்கொண்டிருக்க, மாட்டுக்கறி வைத்திருந்ததாக முஸ்லிம் குடும்பங்களைத் தாக்கிய கும்பல்கள், முஸ்லிம் இளைஞர்களையும் ஒரு பேராசிரியரையும் தாக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என உச்சரிக்கவைத்த கூட்டங்கள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. அந்தக் கும்பல்களையும் கூட்டங்களையும் பிரதமர் கடுமையாகக் கண்டித்தார் என்பதாகக் கற்பனைச் செய்திகூட வரவில்லையே!
சொல்லப்பட வேண்டிய ஏராளமான அத்துமீறல்களில் ஒன்று சமஸ்கிருத, இந்தித் திணிப்பு நடவடிக்கைகள். தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டாத, மாநிலத்துக்கு உள்ளே மட்டும் ஓடுகிற ரயில்களுக்கு தேஜாஸ் ரயில் என்றும் அந்தியோதயா ரயில் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. மத்திய அரசுத் திட்டங்களுக்கெல்லாம் இந்தியில் பெயர் வைக்கப்படுகிறது. கேட்டால், ஏன் அந்நிய மொழி ஆங்கிலத்தில்தான் பெயர் வைக்க வேண்டுமா, உங்கள் அடிமைத்தனம் மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டார்கள். உள்நாட்டு மொழியில் பெயர் சூட்டுவது வரவேற்கத்தக்கது, அது ஒரே ஒரு மொழியாக மட்டும் இருப்பதே கண்டனத்துக்குரியது. புதிய கல்வித் திட்ட வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையில் இந்தி கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தது. தமிழகத்திலிருந்து உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் எழ, அத்தகைய பரிந்துரை எதுவும் அறிக்கையில் இல்லை என்று அமைச்சர் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். அதை நம்பி சும்மா இருந்துவிட முடியாது.
இதற்கெல்லாம் உச்சமாக, இத்தகைய நடவடிக்கைகளை விமர்சித்தால் உடனே தேசத்துரோகி, சமூகவிரோதி, இந்து விரோதி, அர்பன் நக்சல் என்ற பட்டயங்கள் மாட்டிவிடப்பட்டன. கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவது ஊடக நிறுவனங்கள் முதல் தெருப்பாடகர் வரையில் விரிவுபடுத்தப்பட்டது.
இத்தகைய அத்துமீறல்கள் நியாயப்படுத்தப்படும் - அந்த 45 சதவிகிதத்தின் பெயரால். மேலும் பல மடங்கு தீவிரப்படுத்தப்படும் - அதே 45 சதவிகிதத்தின் பெயரால்.
இது அவநம்பிக்கை சார்ந்த நிமித்திகம் அல்ல, இப்படியெல்லாம் நடக்குமோ என்ற நியாயமான அச்சமே. இப்படியெல்லாம் நடக்காது, உண்மையாகவே கற்பனை அச்சமாகத்தான் போகும் என்றால், கெட்ட கனவாகத்தான் கடக்கும் என்றால் மகிழ்ச்சிதான். ஆனால், கையைக் கிள்ளிப் பார்க்கிறபோது வலிக்கிறதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக