ஞாயிறு, 16 ஜூன், 2019

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ஆட்சி ..நிரந்தர சர்வாதிகாரத்தின் அத்தனை முயற்சிகளும் சத்தம் போடாமல் .. ஆர் எஸ் எஸ் .

மின்னம்பலம் :ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி
ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைய புதுமுகங்கள் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மக்களவையின் முதல் கூட்டமே புத்துணர்ச்சியுடனும், புதிய சிந்தனைகளுடனும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்களா இல்லையா என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் 16ஆம் மக்களவையின் கடைசி இரண்டு ஆண்டுகள் எப்படி வீணாகியது என்பது பற்றியும் மோடி விளக்கினார்” என்று தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, வறட்சி குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
கூட்டம் முடிந்தபின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல்முறையாகவும், மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவும் இன்று ஆக்கப்பூர்வமான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து தலைவர்களும் வழங்கிய பரிந்துரைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக இயக்க அனைவரும் ஒப்புக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தின்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17ஆம் மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக