வியாழன், 6 ஜூன், 2019

ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. ஆன்லைனில் இருந்த வாட்ஸ் அப், ‘டைப்பிங்’ மோடில் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மெசேஜ் உள்பெட்டியில் வந்து விழுந்தது.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?“திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மட்டுமல்ல திமுகவின் கடைக்கோடித் தொண்டர்கள் எங்கே பார்த்துக்கொண்டாலும் அவர்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி, ‘இந்த ஆட்சியை தலைவர் எப்பப்பா கவுப்பாரு?’ என்பதுதான். ஜெயலலிதா காலமானதில் இருந்து அதிமுக என்ற கட்சிக்கு உள்ளே பல குழப்பங்கள், நெருக்கடிகள், பிளவுகள் ஏற்பட்ட போதிலும் 2017 பிப்ரவரியில் சசிகலா மூலமாக பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு மத்திய அரசின் ஆதரவும் உறுதியாக இருந்தது.
ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 13 இல் திமுக வெற்றி பெற்றது. ஒன்பது இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக இழையளவில் சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இடைத்தேர்தல் மூலம் எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்குப் போட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த ரிசல்ட்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆன போதும் எப்படியாவது நம்பர் விளையாட்டு நடத்தி ஆட்சியக் கவிழ்த்தே தீர வேண்டும் என்று திமுக தலைமையிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஸ்டாலின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பச்சைக்கொடி காட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் தத்தமது பகுதிகளில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களைத் தொடர்பு கொண்டதும், பேசியதும் தொடர்ச்சியாக மின்னம்பலத்தில் செய்திகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசலாம், சம்மதிக்க வைக்கலாம். ஆனால் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை யார் கொடுப்பது என்ற நிலையில்தான் திமுகவில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. தலைமையோ, மாவட்டச் செயலாளர்களே பார்த்துக் கொடுங்கள் என்று ஒரு சமிக்ஞை அனுப்ப, ‘இப்போதுதான் தேர்தலுக்காக துடைத்து எடுத்து செலவு பண்ணிட்டு நிக்கிறோம். அதுக்குள்ள நாங்க எப்படிக் கொடுக்கறது’ என்று பல மாசெக்கள் முகம் சுளித்தார்கள்.
இந்த நிலையில் இந்த ஆபரேஷன் காஸ்ட் முழுவதையும் தானே ஏற்பதாகச் சொல்லி அரவக்குறிச்சி புதிய சட்டமன்ற உறுப்பினரான செந்தில்பாலாஜி முன் வந்திருக்கிறார். முதலில் தலைமை இதற்கு ஒ.கே. சொன்னாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை சில மாதங்களுக்கு முன் கட்சிக்கு வந்த செந்தில்பாலாஜியிடம் ஒப்படைப்பதா என்ற தயக்கமும் தலைமைக்கு இருந்திருக்கிறது. அதனால் சற்றே அமைதி காத்தது அறிவாலயம்.
இந்த நகர்வுகளை எல்லாம் அறிந்த சில சீனியர் திமுக மாசெக்கள், ‘ஒரு வருஷம் முன்னாடியே 15 அதிமுக எம்எல்ஏக்கள் தலா 5 கோடி கொடுத்தால் போதும் என்று சொல்லி நம்மகிட்ட வந்தாங்க. அப்பவும் தலைமை இதேபோல பணப் பிரச்சினையை சொல்லி கெடப்புல போட்டாங்க. ஆனா, இடைத்தேர்தல்ல 22 தொகுதியில போட்டி போட்டோம். குறைந்த பட்சமா பாத்தாலே தலைமையே இந்த இடைத்தேர்தலுக்காக 100 கோடி ரூபா செலவு பண்ணியிருக்கும். வேட்பாளர்களோட செலவையெல்லாம் சேர்த்து கணக்குப் போட்டா 22 தொகுதிக்கும் செலவு 200 கோடிக்கு மேல போய் நிக்கும். ஒரு வருஷம் முன்னாடியே முடிச்சிருந்தோம்னா, இந்த இடைத்தேர்தலுக்கே வேலையில்லாம போயிருக்கும். இத்தனை கோடி செலவழிச்சும், இப்ப மறுபடியும் பணத்தைக் காரணம் காட்டினா என்ன அர்த்தம். ஏற்கனவே மத்தியிலயும் ஆட்சி இல்லை. இங்கயும் ஒண்ணுமில்லை... என்னமோ போங்க’ என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால் இன்னொரு காரணம் சொல்கிறார்கள். ‘இப்போதைய நிலவரப்படி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அதிரடி காட்ட வேண்டாம் என்ற மூடில் இருக்கிறது தலைமை. காரணம் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் வருகிறது. அதில் மூன்று எம்பிக்கள் திமுகவுக்கு கிடைப்பது உறுதி. அதிரடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் ராஜ்ய சபா எம்.பி.க்களைப் பெறும் வாய்ப்பு பறிபோகும். எனவே ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை எந்த அவசரமும் வேண்டாம். அதற்காக ஆபரேஷனை கைவிடப் போவதில்லை. நெகோஷியேஷன் நடந்துகொண்டே இருக்கும். இப்போதைக்கு சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறது தலைமை’ என்கிறார்கள்.
திமுகவின்ஆபரேஷனை எதிர்கொள்ள பல்வேறு தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இந்த சூழலில் திமுகவின் தற்போதைய முடிவு எடப்பாடிக்கே சாதகமாக இருக்கும் என்பதே ஆட்சிக் கவிழ்ப்புப் படத்தின் தற்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு சென்றது வாட்ஸ் அப். அதை ஷேர் செய்துகொண்டிருந்தது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக