புதன், 12 ஜூன், 2019

அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யார் காலை யாரெல்லாம் வாருவார்கள்?

tamil.oneindia.com -VelmuruganP : சென்னை: தேர்தல் தோல்வியால் வருத்ததில்
உள்ள அதிமுக நிர்வாகிகள் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக இன்று நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புயல் கிளம்பும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் படுதோல்வி அடைந்தன. இதற்கு அதிமுகவில் உள்ள உள்கட்சி பூசல் தான் காரணம் என்று நிர்வாகிகளுக்குள் வருத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தவறு இழைத்தவர்கள் மீது உறுதியான முடிவு எடுக்க இரட்டை தலைமை சரிவராது என கூறி ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் உள்பட பலர் வெளிப்படையாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி குரல் எழுப்பி வருகிறார்கள். இதேபோல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என தனித்தனியாக செயல்படுவதையும் அதிமுக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை.
;
இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வெளிப்படையாக தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் உள்ளனர்.


ராயப்பேட்டையில் கூட்டம்

இதனிடையே தேர்தல் தோல்வி மற்றும் ஒற்றை தலைமை விவாகரம் உள்பட கட்சியில் நிலவும் பூசல்களுக்கு தீர்வு காணும் விதமாக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இன்று காலை 10மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.


யாருக்கு பச்சைக்கொடி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் , எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில் குடும்ப அரசியல், ஜாதி ரீதியான முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தலைமைக்கான புயல் ஆகியவை வெடிக்கும் என தெரிகிறது. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருடைய தலைமைக்கு பச்சைக்கொடியும், யாருடைய தலைமைக்கு போர்க்கொடியும் எம்எல்ஏக்கள் தூக்குவார்கள் என்பதும், இல்லாவிட்டால் இரட்டை தலைமைக்கு ஒப்புக்கொள்வார்களா என்பது இன்று தெரிந்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக