vikatan.com/
சத்யா கோபாலன் :
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்த பிறகு கடந்த 2014-ம் ஆண்டு
அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி
பெற்று சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் முதல்வரான பின்பு ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக்
கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு
முன்னதாக தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும்
கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார்.
அப்போதே அந்த வீட்டின் அருகில் சுமார் 8 கோடி செலவில் பிரஜா வேதிகா என்ற
மற்றுமொரு புதிய கட்டடத்தையும் கட்டினார். பிரஜா வேதிகா கட்டடத்தை
கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் வார இறுதி
நாள்களில் குடும்பத்துடன் கழிக்கவும் பயன்படுத்திவந்தார் சந்திரபாபு
நாயுடு. அவர் அங்கு கட்டடம் கட்டும்போதே ஆபத்தான நதிக்கரைக்கு அருகில்
கட்டுவதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.
இது இப்படியிருக்க, சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப்
பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு செய்த ஊழல், முன்னதாக
அவர் மீது கூறப்பட்டுள்ள முறைகேடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில்
கொண்டுவரத் தொடங்கியுள்ளார். முதலில் அமராவதி
திட்டத்தில் சந்திரபாபு நாயுடு பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும்
அதற்காக முறையான விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார் ஜெகன்.
அடுத்தபடியாக தற்போது சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த பிரஜா வேதிகா
கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக
பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன்முதலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்
நடைபெற்றது. அதில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். `அந்தக் கட்டடம்
சாதாரண மனிதர்களால் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில்
கட்டுப்பட்டுள்ளது. அதனால் அதை இடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்’ என ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். பிரஜா வேதிகா கட்டடத்தில்தான்
நேற்று ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அங்கு
இருந்துகொண்டே அதே கட்டடத்தை இடிக்கக் கூறியுள்ளார் ஜெகன்.
பிரஜா வேதிகா கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும்
எனக் கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசுக்குக் கோரிக்கை
விடுத்திருந்தார். ஆனால், அரசு அவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
கட்டடத்தை இடிக்கும் பணிகள் நாளை முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி பேசியுள்ள தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கோரண்ட்லா
புச்சையா சவுத்ரி , `` கட்டடம் தொடர்பாக கடந்த மாதமே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
தலைமையிலான ஆந்திர அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதற்கு
அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அங்கிருந்த எங்கள் கட்சி
நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர்
என்ற மரியாதையே இல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுகிறார். இது முறையானது
அல்ல.
பிரஜா வேதிகா தனி மனித செயல்பாட்டுக்காக கட்டப்பட்டது இல்லை. அதைப் பலர்
பயன்படுத்தி வருகின்றனர். முறை தவறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிரஜா
வேதிகா கட்டடத்துக்கு அருகில் நிறைய கட்டடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம்
ஜெகன் இடித்துவிடுவாரா. ஐம்பது வருடங்களாக நாங்கள் அங்கு இருக்கிறோம்.
கிருஷ்ணா நதியில் வெள்ளம் வந்ததே இல்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக