வெள்ளி, 21 ஜூன், 2019

5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்!' - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்?

விஜயகாந்த் சொத்துகள் ஏலம்` 5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்!'  - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்?ஆ.விஜயானந்த் விகடன் : ஐ.ஓ.பி வங்கியில் விஜயகாந்த் குடும்பத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. கட்சி, மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், கல்லூரி என அனைத்துக்குமான கணக்கு வழக்குகளை ஐ.ஓ.பி வங்கிதான் கவனித்து வருகிறது. நீண்டகாலமாக இந்த வங்கி நிர்வாகத்துடன் விஜயகாந்த் குடும்பத்துக்கு நட்பு இருக்கிறது.
` தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலம்' - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பு தே.மு.தி.க தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இப்படியொரு நல்ல மனிதரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எப்படியெல்லாம் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர்' என்ற உணர்வையும் பரவலாகக் காண முடிகிறது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ` கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்/ஜாமீன்தாரர்கள் ஆகியோரிடமிருந்து பெற வேண்டிய கடன்பாக்கித் தொகையான ரூ.5,52,73,825 மற்றும் வட்டி, இதர செலவுகளை வசூலிப்பதற்காக கீழ்க்கண்ட அசையாச் சொத்துகளை `உள்ள இடத்தில் உள்ளவாறு', `உள்ளது உள்ளவாறு' மற்றும் `எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே' என்ற அடிப்படையில் 26.7.2019 அன்று விற்பனை செய்யப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது' எனக் குறிப்பிட்டு, விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சொத்து விவரம், சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் வணிக வளாகம் ஆகிய ஏலம் வரக் கூடிய சொத்துகளைப் பற்றி விவரித்துள்ளது வங்கி நிர்வாகம். இதற்கான குறைந்தபட்சக் கேட்புத் தொகையும் வெளியிடப்பட்டுள்ளது. 

விஜயகாந்த்
அதன்படி, ஜி.எஸ்.டி சாலை மாமண்டூர் கிராமம் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி முகவரியில் உள்ள 24 ஏக்கர் 3 சென்ட் (பட்டா படி) மற்றும் மொத்த கட்டட பரப்பு 4,38,956 சதுர அடி சொத்துக்கான குறைந்தபட்சக் கேட்புத் தொகை ரூ.92,05,05,051 எனவும் இதற்கான இ.எம்.டி கட்டணமாக ரூ.9,20,50,505 எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், சாலிகிராமத்தில் உள்ள வீடு மற்றும் வணிக வளாகத்துக்கான குறைந்தபட்சக் கேட்புத் தொகையும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 26-ம் தேதி அன்று விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
` 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துகள் இருக்கும்போது, வெறும் 5 கோடி ரூபாய் கடனுக்காக இப்படியொரு நடவடிக்கையை எடுப்பது சரிதானா?' என்ற கேள்வியை விஜயகாந்துக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம். `` இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதன் மூலமாக, விஜயகாந்தை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடக்கிறதோ எனச் சந்தேகப்பட வேண்டியதாக இருக்கிறது" என விவரித்தவர்கள், அதற்கான காரணங்களையும் நம்மிடம் பட்டியலிட்டனர்.
1. மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளையின் ட்ரஸ்ட்டியாக இருக்கிறார் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த். இந்தக் கல்லூரிக்குக் கடன் பெறுவதற்காக அவர் ஜாமீன் மட்டும்தான் கொடுத்திருக்கிறார். இந்த அறக்கட்டளையில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உட்பட மேலும் சிலர் அங்கத்தினர்களாக உள்ளனர். கடனுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை வெறும் 5,52,73,825 ரூபாய் மட்டுமே. இந்தக் கடனில் அறக்கட்டளையின் இதர நிர்வாகிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு கல்லூரியானது, வங்கியில் இருந்து 5 கோடி ரூபாயைக் கடன் பெறுவது என்பது மிகச் சாதாரண விஷயம். இதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டுதல் மதிப்பின்படியே 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய கல்லூரியும் 4 கோடி ரூபாய், 3 கோடியே 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சொத்துகளையும் ஏலம் விடுவதாக அறிவித்துள்ளனர். 5 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுக்காகக் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை ஏலம் விட இருக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.
விஜயகாந்த் பிரமாணப் பத்திரம்
2. வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி, இதர செலவு என ஒரு தொகையைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட 3 சொத்துகளுக்கும் 10 கோடி ரூபாய் வரையில் இ.எம்.டி கட்டினால்தான் ஏலத்திலேயே கலந்துகொள்ள முடியும். 5 கோடி ரூபாய் கடனுக்காக இத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இழப்பதற்கு விஜயகாந்த் குடும்பம் தயாராக இருக்கிறதா? வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டாமல் வைத்திருந்தால் விஜயகாந்த் பெயரில் நோட்டீஸ் வரும் என்பதைத் பிரேமலதாவும் உணர்ந்திருப்பார். பொதுவாக, நாளிதழ்களைப் படிக்கும் வழக்கம் விஜயகாந்துக்கு இருந்தது இல்லை. அதை அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அவரது அனுமதியோடு இந்த அறிவிப்பு வந்திருக்குமா என்பது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அறிந்த உண்மை. அரசியல் களத்தில் தே.மு.தி.க இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக இப்படியொரு முயற்சி நடக்கிறதா என்ற கவலையும் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது. பொதுவாக, ஓர் அரசியல் கட்சித் தலைவரின் சொத்துகளை இப்படி வெளிப்படையாக அறிவிப்பதற்கு வங்கி நிர்வாகம் முன்வருமா என்பதும் பிரதான கேள்வி.
3. இந்த விவகாரத்தில் ஆச்சர்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்டார் விஜயகாந்த். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ஐ.ஓ.பி வங்கியில் கடன் இருப்பதைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அஃபிடவிட்டின் 16-வது பக்கத்தில், `பொது நிறுவனங்களுக்கும் அரசுக்கும் செலுத்த வேண்டிய பாக்கிகள் குறித்த விவரத்தைத் தெரிவிக்கிறேன்' எனக் குறிப்பிட்டு, தனக்கு எந்தக் கடனும் இல்லை என்கிறார். அடுத்ததாக, தன்னுடைய துணைவி பெயரில் அண்ணா சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் கார் வாங்கிய கடனாக ரூ.29,49,234 இருப்பதாகத் தெரிவிக்கிறார். அதேபோல், தன்னுடைய துணைவியாருக்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் கார் கடனாக ரூ.12,50,000 இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
விஜயகாந்த் தாக்கல் செய்த பிரமாண பத்திரம்
மேலும், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் ரூ.4,23,59,036 ரூபாயும் மற்றொருவரிடம் 58,31,570 ரூபாய் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இங்குதான் சந்தேகம் வலுக்கிறது. 2016-ம் ஆண்டு வரையில் தனக்குக் கடன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த். அதன்பிறகு வாங்கிய கடனுக்காக இரண்டே ஆண்டுகளில் இப்படியொரு நடவடிக்கையை எடுக்க வங்கி நிர்வாகம் முன்வருமா. 5 கோடி ரூபாய் கடனுக்கு 10 சதவிகித தொகையைக் கட்டினாலே வங்கி நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான் உண்மை. விஜயகாந்த் கஷ்டத்தில் இருப்பதாக வெளிக்காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
4. ஐ.ஓ.பி வங்கியில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் ட்ரஸ்ட் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரஸ்ட்டுக்கு 4,38,956 சதுர அடி நிலம் கல்லூரியின் பரப்பளவாக அமைந்திருக்கிறது. 100 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்தை விற்றுகூட கடனை அடைக்கலாம். விஜயகாந்த் ஜாமீன் கொடுத்தார் என்பதற்காக அவரது வீட்டையும் காம்ப்ளக்ஸும் ஏலத்துக்கு வருவதாக மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டிய தேவை ஏன் வந்தது? சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு, வேதவள்ளித் தெரு ஆகியவற்றில் அமைந்துள்ள வீடு, வணிக வளாகம் ஏலத்துக்கு வந்துவிட்டதாகக் காட்டும்போது, மக்கள் மத்தியில் பரிதாப உணர்வு ஏற்படும் எனச் சிலர் திட்டம் போட்டுள்ளதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
விஜயகாந்த் பிரமாணப் பத்திரம்
5. சொல்லப் போனால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாகச் சரியான அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வேலை பார்த்தவர்களையெல்லாம் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். ஐ.ஓ.பி வங்கியில் விஜயகாந்த் குடும்பத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. கட்சி, மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், கல்லூரி என அனைத்துக்குமான கணக்கு வழக்குகளை ஐ.ஓ.பி வங்கிதான் கவனித்து வருகிறது. நீண்டகாலமாக இந்த வங்கி நிர்வாகத்துடன் விஜயகாந்த் குடும்பத்துக்கு நட்பு இருக்கிறது என்பதையும் ஏல அறிவிப்போடு முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டியுள்ளது" எனச் சந்தேகங்களை விவரித்து முடித்தனர்.
பார்த்தசாரதி
விஜயகாந்த் சொத்துகள் ஏலத்துக்கு வருவது குறித்து தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம்.
`` ஆண்டாள் அழகர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்ததும் வங்கிக்குச் செட்டில் செய்யலாம் என நினைத்திருந்தனர். இதுதொடர்பாக, வங்கியில் நேரம் கேட்டிருந்தும் திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர்" என ஆதங்கப்பட்டவரிடம்,
வெறும் 5 கோடி ரூபாய் கடனுக்காக 100 கோடி ரூபாய் சொத்துகளை ஏலம் விடுவது எந்த வகையில் சரியானது?
`` நீங்களும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். வங்கியிலிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. இது நீண்ட காலத்துக்கு முன்பே வாங்கிய கடன்"
2016 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தக் கடன் குறித்து அஃபிடவிட்டில் விஜயகாந்த் குறிப்பிடவில்லையே?
`` ட்ரஸ்ட்டில் உள்ள யாராவது பெயரில் கடன் வாங்கியிருக்கலாம். மேடம் (பிரேமலதா) பெயரில்கூட கடன் வாங்கியிருக்கலாம். அதுபற்றிய தகவல் எனக்குத் தெரியவில்லை"
100 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிபோகுமா?
`` ஏலமே நடப்பதற்கு வாய்ப்பில்லை. திங்கள்கிழமை வட்டி கட்டிவிட்டால் முடிவுக்கு வந்துவிடும்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக