சனி, 29 ஜூன், 2019

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ . -பாகம் -27)

ilakkiyainfo.com :கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
 இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.
“ஆமிக்காரனிட்டதான் போகப் போறம், என்ன செய்யப் போறீயள்? உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டம். இனி எங்கே போகச் சொல்லுறிங்கள், இனியும் என்னவாம் செய்யப் போறார் உங்கட தலைவர்?”
இப்போது இயக்கத் தலைமை காண்பித்த 300 போர்வீரர்கள் படம் நினைவுக்கு வந்தது. எமது போராட்ட வாழ்க்கையின் முடிவை இயக்கத் தலைமை என்றோ தீர்மானித்து விட்டதாகத்தான் அக்கணத்தில் எண்ணத் தோன்றியது.
கைப்பற்றப்பட்டதன் பின்னர் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடுருவித் தாக்குதலைப் புலிகள் மேற்கொண்டனர். பல பிரதான தளபதிகள் நேரடியாகப் பங்குபெற்ற இந்த நடவடிக்கைக்குத் தளபதி பானு தலைமை தாங்கினார்.
மூன்று நாட்கள்வரை நீடித்த தாக்குதலில், பல மூத்த தளபதிகள் உட்பட அதிகமான போராளிகள் உயிரிழந்தனர். தளபதி பானுவுடன் சொற்பமான போராளிகளே உயிருடன் மீண்டனர்.

தளபதிகள் விதுஷா, துர்க்கா, மணிவண்ணன், கடாபி ஆகியோரும் மேலும் பல போராளிகளும் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட முடியாமல் அங்கேயே கைவிடப்பட்டன. காயமடைந்திருந்த பல போராளிகளையும் அப்படியே கைவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக அந்தத் தாக்குதலில் கலந்துகொண்டவரான கிட்டு, பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி பவநிதி என்னிடம் கூறியிருந்தார்.
கிளிநொச்சி இழக்கப்பட்டதன் பின்பு மக்கள் வாழும் இடங்களே முன்னணிக் களமுனைகளாக மாற்றமடைந்தன. இயக்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் மக்கள் கூட்டத்தின் நடுவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன.
கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முள்ளிவாய்க்கால் வரை அதி தீவிரத்துடன் மேற்கொள்ளப்பட்டன. அப்பிரதேசங்களின் பனைமரக் கூடல்களில் அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதனால் பொதுமக்களும் போராளிகளும் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றனர். பல அனுபவமான போராளிகள் இயக்கத்திலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.
மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.
புலம்பெயர்ந்த மக்களின் ஏற்பாட்டில் ‘வணங்காமண்’ என்ற கப்பல் மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் வந்துகொண்டிருப்பதான ஒரு எழுச்சியான செய்தியைப் புலிகளின் குரல் வானொலி மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தது.
அந்த நெருக்கடியான கட்டத்தில் புலிகளின் குரல் வானொலி மக்களுக்குப் பலவிதமான நம்பிக்கைகளையும் ஊட்டும் விதத்தில் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வழங்கிக்கொண்டிருந்தது.
நோயாளர்களையும் காயமடைந்த மக்களையும் ஏற்றிச் செல்வதற்காகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கப்பலில் செல்வதற்கான அனுமதியை எப்படியாவது பெற்றுக்கொண்டு வெளியேறிச் சென்றுவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்புடன் மக்கள் முண்டியடித்தனர்.
பல போராளிக் குடும்பங்களும் தமது குழந்தைகளையாவது பாதுகாப்பாக அனுப்பிவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். கடல்வழி மூலமாகவும் தரைவழிகள் மூலமாகவும் மக்கள் இயக்கத்திற்குத் தெரியாமல் வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்.
இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.
எனது தாயாரின் கர்ப்பப்பையில் கட்டி ஏற்பட்டிருந்ததன் காரணமாகக் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆறுமாதம் முடிவதற்குள்ளாகவே கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்திருந்த எமது வீட்டைவிட்டு அவர் இடம் பெயர்ந்திருந்தார்.
மாறிமாறி ஒவ்வொரு இடத்திலும் இருந்து, இறுதியாக ஒரு சிறிய பையுடன் தன்னந்தனியாக வட்டுவாகல் கடற்கரையில் நிற்பதைக் கண்டதாக எனக்குத் தெரிந்த போராளிகள் கூறினார்கள்.
புதுமாத்தளன் பகுதியில் ஒருதடவை என்னைச் சந்தித்த எனது தாயார் ‘சனங்கள் போற மாதிரி நாங்களும் போவம் பிள்ளை, உன்னை விட்டால் எனக்கு வேறு ஒத்தருமில்லை’ எனக்கூறி அழுது புலம்பியிருந்தார்.
எனது சகோதர சகோதரிகளுடைய குடும்பத்தில் யார் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாதிருந்தது.
முள்ளிவாய்க்காலில் அம்மாவைக் கண்டபோது தனது கால்களில் முட்கள் கீறிக் கிழித்த காயங்களை எனக்குக் காண்பித்தார். தேவிபுரம் காட்டுப் பாதையூடாக ஓடிவந்தபோது அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறினார்.
வெயிலுக்கு மறைப்பாகத் தலையை ஒரு துணியால் மூடிக்கொண்டு கஞ்சி பெற்றுக்கொள்வதற்காக ஒரு அலுமினியச் சட்டியுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.
நாடு மீட்கப்போய் எம்மைப் பெற்ற தாய்மாரின் நிர்க்கதி நிலைக்கும் காரணமாகிவிட்டோமே என மனம் அங்கலாய்த்தது.
இயக்கத்தின் களஞ்சியங்களுக்குள் அத்துமீறிப் புகுந்த மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள்.
போராளிகள் என்கிற மதிப்புடனும் ஒருவிதப் பாசத்துடனும் எம்முடன் பழகிய மக்கள், வெறுப்பும், கோபமும் எல்லைமீறிப் போனவர்களாக, விடுதலைப் புலிகளுடன் முரண்படத் தொடங்கினார்கள்.
“ஆமிக்காரனிட்டதான் போகப் போறம், என்ன செய்யப் போறீயள்? உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டம். இனி எங்கே போகச் சொல்லுறிங்கள், இனியும் என்னவாம் செய்யப் போறார் உங்கட தலைவர்?” மக்களின் ஆதங்கம் கோபமான வார்த்தைகளாகவும் கண்ணீராகவும் பொங்கிப் பெருகியது.
இயக்கத்திலிருந்த தமது போராளிப் பிள்ளைகளை “நீங்கள் போராடிக் கிழிச்சது காணும், வாங்கோ” என ஆத்திரத்துடன் வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து இழுத்துச்சென்ற சம்பவங்களும் நடைபெற்றன.
இனி இயக்கத்தால் எதுவுமே செய்ய முடியாத நிலைமை என்றாகிவிட்டிருந்த பின்பும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும்படியான செயற்பாடுகளை இயக்கம் மேற்கொண்டிருந்தது.
ஒரு எறிகணை விழுந்து வெடித்தால் பத்துப்பேருக்கு மேல் உயிரிழக்க வேண்டிய நெருக்கடியான நிலைமையில் மக்கள் சிக்குண்டிருந்தனர்.
2009ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி இரவு ஏழுமணியளவில்   அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்களுடைய பதுங்குக்குழி அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கடற்கரையின் மணற்பாங்கான ஒரு இடத்தில் சிறிய மரம் ஒன்றின் கீழே அரசியல்துறையின் ஒருசில பொறுப்பாளர்களை அவசரச் சந்திப்புக்காக அழைத்திருந்தார்.
நிலவு பகல்போல ஒளி வீசிக் கொண்டிருந்தது. அருகிலே மக்கள் நெருக்கமாகப் பிளாஸ்டிக் தரைப்பாய்களைக் கட்டி இருப்பிடங்களை அமைத்திருந்தார்கள்.
அந்த இருப்பிடங்களுக்கிடையே ஆங்காங்கு சிறிய குழுக்களாகப் போராளிகள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஏனெனில் இராணுவம் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இரகசிய ஊடுருவல்களைச் செய்வதன் மூலமாக மக்கள் நெருக்கமாயிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றலாம் எனப் புலிகள் கருதினார்கள்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மிக அருகிலே திடீரென இரவைப் பகலாக்கும்படியான வெளிச்சம் எழுந்தது. புலிகளின் எரிபொருள் பரல்கள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் எறிகணைகள் விழுந்து வெடித்ததனால் அந்த இடம் சொக்கப்பனைபோல மூண்டெரியத் தொடங்கியது.
அருகிலிருந்த சில ஆயுதங்களும் வெடித்துச் சிதறின. அந்த நெருப்பின் உக்கிரம் நாங்கள் இருந்த இடத்தையும் மூடித் தகித்தது. அனைவரும் சிதறியோடினோம்.
என்னுடைய தலைக்கு மேலாக வண்டு ரீங்காரமிடுவதுபோலச் சத்தம் கேட்டது. சற்றுத் தலையை அசைத்துப் பார்த்தேன். எனக்கு முன்பாக ஒரு எறிகணைச் சிதறல் தொப்பென விழுந்தது.
தலையை அசைக்காமல் இருந்திருந்தால் வேகமாக வந்த அந்தச் சிதறல் எனது தலையைப் பதம் பார்த்திருக்கும். அதைக் கையிலே தூக்கிப் பார்த்தேன், நெருப்புத் துண்டமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
2009 மே பதின்மூன்றாம் திகதி முள்ளிவாய்க்காலில் இறுதியாக அரசியல்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்தேன். அதற்கு முன்னைய சில தினங்கள்வரை அவரிடமிருந்த தமிழ்நாட்டு உதவிகள் பற்றிய நம்பிக்கையான வார்த்தைகள் எவையுமிருக்கவில்லை.
நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். அவருடைய முகத்தைப் பார்த்தபோது அவர் ஏதோ பாரதூரமான விடயமொன்றை எமக்குச் சொல்ல முடியாத சங்கடத்தில் இருப்பதுபோலப் புரிந்தது.
சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு அண்மையாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அனுப்பிவிட்டார். அதுதான் அவருடனான எனது இறுதிச் சந்திப்பாகவும் அமைந்தது.
2009 மே பதினைந்தாம் திகதி மாலையாகியது. மீண்டும் மீண்டும் பல தடவைகள் முயற்சி செய்தபோதும் எந்தப் பொறுப்பாளரின் தொடர்பையும் என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
நானும் சில போராளிகளும் முள்ளிவாய்க்காலில் பனைமரங்கள் அடர்ந்த பகுதியில் நிலையை அமைத்திருந்தோம். மிக அண்மையாகத் துப்பாக்கி ரவைகள் பறந்து வந்துகொண்டிருந்தன.
அப்போது கடற்புலி மகளிர் பொறுப்பாளராகிய பூரணி எமது நிலைகளுக்கு வந்திருந்தார். அவரும் நானும் ஒரே காலத்தில் இயக்கத்தில் இணைந்திருந்த காரணத்தால் ஆரம்பத்திலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தோம்.
அவர் என்னுடன் இரகசியத் தகவல் ஒன்றினைப் பகிர்ந்துகொண்டார்.
அதாவது, இயக்கத்தின் தலைவரும் அவருடன் சில போராளிகளும் இரகசியமாக வெளியேறுவதற்கான திட்டமிருப்பதாகவும், ஆனாலும் அவர்கள் பெருங்கடல் மூலமாக வெளியேற முடியாதபடி முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் சண்டைப் படகுகள்  இறுக்கமாக முற்றுகையிட்டிருப்பதால், நந்திக்கடல் நீரேரியைச் சிறிய படகுகள் மூலம் கடந்துசென்று கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்துடன் சண்டையிட்டு ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு கேப்பாபிலவு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதனூடாக முன்னேறிப் பெருங்காட்டுக்குள் நுழைந்துவிடுவது எனத் தீர்மானித்திருப்பதாக அறியமுடிந்தது.
இராணுவத்தினரின் பலமான முற்றுகையை உடைக்கக் கூடிய வகையில் இயக்கத்திடம் எந்தவிதமான பலமோ, தந்திரோபாயமோ இல்லாத நிலையில் இந்தத் திட்டம் வெற்றியளிப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்குமென்பதை வெளிப்படையாகவே உணர முடிந்தது.
இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது தகவலறிந்த ஒரு போராளி சொன்னாள் “நந்திக்கடலைக் கடந்து நகரும்போது இராணுவத்தினருடைய நிலைகளைக் கண்டால் எழுந்த மானத்தில் அடித்துக்கொண்டு முன்னேறிச்சென்று காட்டுப் பகுதியை அடைந்துவிடுவதுதான் திட்டம்” என அந்தப் போராளியை விரும்பியிருக்கும் ஆண் போராளி தன்னிடம் கூறியதாகச் சொன்னாள்.
அந்தப் போராளி இம்ரான், பாண்டியன் படையணியில் இருந்தான். எனக்கு இந்தத் தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையானது எனத் தெரியவில்லை.


இருப்பினும், போராளிகள்  கைவிடப்பட்டு விட்டார்கள் என்பது அக்கணத்தில் தெட்டத்தெளிவாகப் புரிந்தது.
இறந்துபோனவர்கள் போக, காயப்பட்டுக் கிடந்த போராளிகளுக்கும் உயிரோடிருந்த போராளிகளுக்கும் முடிவு என்ன என்பது பற்றி எவருக்கும் எந்தத் தகவலும் சொல்லப்பட்டிருக்கவில்லை.
இப்போது இயக்கத் தலைமை காண்பித்த 300 போர்வீரர்கள் படம் நினைவுக்கு வந்தது. எமது போராட்ட வாழ்க்கையின் முடிவை இயக்கத் தலைமை என்றோ தீர்மானித்துவிட்டதாகத்தான் அக்கணத்தில் எண்ணத் தோன்றியது.
எமது நிலைக்கு அருகிலேயே சோதியா படையணியினர் நிலையமைத்திருந்தனர். அங்கே இரண்டொரு போராளிகளே எஞ்சியிருந்தனர். பெரும்பாலானவர்கள் பெற்றோர்களையும் அறிந்தவர்கள் தெரிந்தவர்களையும் தேடிச் சென்றுவிட்டதாக அங்கிருந்த ஒரு மூத்த போராளி கூறினார்.
அவர் அப்படையணியின் முக்கியப் பொறுப்புகளை ஆற்றியவர். அவருடைய கணவர் இயக்கத்தின் முக்கியப் பயிற்சி ஆசிரியராகச் செயற்பட்டவர்.
மிகவும் கல்வியறிவு கொண்ட, திறமைசாலியான அவர் இயக்கத்தின் சில தவறான நடவடிக்கைகளால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததை நானறிவேன்.
அவர் படுகாயமடைந்த நிலையில் தனது துணைவியிடம் மக்களோடு சேர்ந்து வெளியேறிச் சென்று இராணுவத்திடம் சரணடையும்படி வற்புறுத்திக் கூறியிருந்தார்.
அதன்பின் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறியமுடிந்தது. கடற்புலிகளின் பெரிய படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கடற்புலித் தளபதி ஸ்ரீராம் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன்.
அவர் மிக இளவயது போராளியாக இயக்கத்தில் இணைந்து ஒரு திறமையான தளபதியாக வளர்ந்தவர். எப்போது என்னைக் கண்டாலும் அன்போடு அக்கா என அழைத்து உரையாடும் அவரிடம் “என்ன நிலைப்பாடு சிறிராம்” எனக் கேட்டேன்.
“இனியென்னக்கா இருக்குது, பேசாமல் சனத்தோடு சனமாக வெளியேறத்தான் வேணும்” எனக் கூறினார். இந்தப் படகை எரிப்பதற்குப் பெற்றோல் கொண்டு வருவதற்காகப் பொடியள் போயிருக்கிறாங்கள் அதுதான் பாத்துக்கொண்டு நிற்கிறன்” எனக் கூறினார்.
அவரது மனைவியான இசைப்பிரியா எங்கே எனக் கேட்டேன். பக்கத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் நிற்பதாகவும் விரைவில் வந்துவிடுவாள் என்றும் குறிப்பிட்டார்.
தொடரும்…
-தமிழினி-
தொகுப்பு: கி.பாஸ்கரன்-சுவிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக