ஞாயிறு, 30 ஜூன், 2019

இந்தியாவில் இருந்து நியுசிலாந்துக்கு படகில் சென்ற 243 பேர் என்னவானார்கள் ? நீடிக்கிறது மர்மம்


BBC : அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது. அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வர காரணம்.
ஆனால் தற்போது இந்த பகுதி முழுவதும் ஓர் இருள் சூழ்ந்துள்ளது. ஐந்து மாதங்களாக காணாமல் போன படகில் பயணம் செய்த 243 பேரில் 164 பேர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்தாம்.
கேரளாவின் கடற்கரை பகுதியில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு புறப்பட்ட அந்த படகின் நிலை குறித்தும் அதில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்தும் ஒரு தகவலும் இல்லை
ஜனவரி மாதம் 12ஆம் தேதி இந்த படகில் புறப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லை; எனவே இது ஒரு சட்ட விரோத பயணம். ஆனால் அவர்களுக்கு நியூசிலாந்தில் ஒரு நல்ல வாழ்வு உள்ளது என்று கூறி அந்த படகு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக பசிபிக் பெருங்கடல் கரையில் உள்ள நாடுகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஆனால் எந்த பதிலும் இதுவரை இல்லை என்றும் தெரிவிக்கிறது.< "எங்களுக்கு அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்று தெரியாது. நாங்கள் கடைசியாக அவர்களிடம் ஜனவரி 11ஆம் தேதியன்று போனில் பேசினோம்," என்கிறார் 68 வயது கனக லிங்கம்.
அந்த படகில் சென்ற டெல்லியின் மதன்கீர் சிலோன் காலனியை சேர்ந்த 164 பேரில் 47 பேர் கனக லிங்கத்தின் உறவினர்கள். அதில் அவரின் சகோதரர், மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளும் அடக்கம்.ரவீந்திரன் என்பவர் தங்களின் குடியிருப்பில் வந்து வசித்ததாகவும் அவர், நியூசிலாந்துக்கு சென்றால் அங்கு ஒரு பிரகாசமான வாழ்க்கை இருப்பதாகவும், லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் அங்குள்ள மக்களிடம் ஆசை காட்டினார் என்றும் தெரிவிக்கிறார் கனக லிங்கம்.
மேலும் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கு அங்குள்ளவர்கள் தங்களின் நகைகளையும், வீடுகளையும் விற்றனர் என்கிறார் கனக லிங்கம்.
தனது உறவினர்கள் கடைசியாக தன்னை ஜனவரி 11ஆம் தேதியன்று தொடர்பு கொண்டதாகவும் நினைவு கூறுகிறார் கனக லிங்கம்.
அதே காலணியில் அதிகம் வெளிச்ச்சம் கூட இல்லாத ஒரு வீட்டில் கணவரை இழந்த சரஸ்வதி தனியாக வசித்து வருகிறார். e>அவர் அழும்போது அவரின் அக்கம் பக்கது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். சரஸ்வதியின் ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை அந்த படகில் சென்றுள்ளனர்.
அவரின் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு போனது அவருக்கு தெரியாது என்கிறார் சரஸ்வதி.
கேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு செல்வதாக சொன்ன குடும்பத்தினருடன் அவரின் மகன் சென்றதாக கூறுகிறார் சரஸ்வதி.
படகு தொலைந்து போன செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவந்த பிறகே அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது.
அந்த காலணியில் சில அதிர்ஷ்டசாலிகளும் உள்ளனர். ஆம். அந்த படகில் இடமில்லை என்று அவர்கள் அதில் ஏறவில்லை. அதில் ஒருவர்தான் பிரபு. ஆனால் அவரின் குடும்பத்தினர் அதில் சென்றுள்ளனர்.< கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளா சராய் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
"எங்களை அழைத்து செல்ல இரண்டு சிற்றுந்துகள் வந்தன. ஆனால் அந்த சிற்றுந்து திரும்பி வரும் என்று கூறி அந்த முகவர் என்னை விட்டு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் எனது குடும்பத்தினர் அந்த சிற்றுந்தில் ஏறியிருந்தனர். நான் காத்திருக்க தொடங்கினேன். ஆனால் அந்த சிற்றுந்து வரவே இல்லை. அதன்பின் அந்த படகு சென்றுவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்," என்கிறார் அவர்.
முனம்பம் கடற்கரையில் 80 பைகள் கேட்பாரற்று கிடப்பதாக தகவல் கிடைத்த சமயம் தான் தங்களுக்கு இந்த பயணம் குறித்து தெரியவந்தது என்கிறது கேரள போலீஸ்.< இந்த சம்பவம் தொடர்பில் குறைந்தது 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அதில் பலர் அந்த படகில் இடமில்லாமல் ஏற முடியாமல் போனவர்கள். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது வாரந்திர பத்திரிகையாளர் சந்திப்பில், படகில் சென்றவர்களின் உறவினர்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக தெரிவித்தார்.
தே மாதா -2 என்று அழைக்கப்பட்ட அந்த படகு குறித்து இந்தியா ஆஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள மதன்கிரியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 70 பேர் பயணம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தனது காலணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் இல்லை என்பதை கனக லிங்கம் ஒப்புக் கொண்டார். மேலும் அவர்கள் அங்கு நன்றாக இருப்பதாகவும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
படகு குறித்த எந்த ஒரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்துக்கோ போலீஸாருக்கோ கிடைக்கவில்லை. ஆனால் தங்களின் உறவினர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை இவர்கள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக