வெள்ளி, 24 மே, 2019

ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து .. மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்

Modi cant remove article 370, 35A from Kashmir: Farooq Abdullah tamil.oneindia.com - arivalagan. ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா சவால் விட்டுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 35A மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு சட்டப் பிரிவுகள் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருப்பதாகவும் பாஜக கூறியிருந்தது.
இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோர் அப்போதே கண்டனம் தெரிவித்தனர். இது இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் உள்ள உறவை துண்டிக்கும் செயலாக இருக்கும் என்றும், இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், பாஜகவும் சரிசமமான வெற்றியை பதிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

இந்த சூழலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகளை பாஜக அரசு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில்," லோக்சபா தேர்தலில் மோடி எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், காஷ்மீருக்கான 35A மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளை மட்டும் நீக்க முடியாது," என்று கூறி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்த கேள்விக்கு,"காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்," என்று நம்பிக்கை தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக