திங்கள், 13 மே, 2019

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?மின்னம்பலம் : விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களும் அதில் அடங்கி உள்ளது. இவ்விடங்களில் மொத்தம் 116 கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு இருந்தது. அதனடிப்படையில் முதல்கட்டமாக 32 கிணறுகள் அமைப்பதற்கான எல்லைகளை வரையறுத்து கொடுத்து, அதில் ஆய்வுப்பணி மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர், ஸ்டாலின்
தமிழக விவசாயிகளின் கருத்துகளை முன்கூட்டியே கேட்காமல் அலட்சியப்படுத்திவிட்டு, வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு கொடுத்த அனுமதியை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். ஆனால், இந்த அழிவுத் திட்டங்களை எதிர்க்கத் துளியும் துணிச்சல் இல்லாத “எடுபிடி அதிமுக அரசு” தொடர்ந்து தமிழக விவசாயிகளைத் திட்டமிட்டு வஞ்சித்து வதைத்து வருகிறது. இதுதொடர்பான போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல்.
ஆகவே, மத்தியில் புதிய அரசு அமையும் வரை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியையும், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்துடன் உள்ள நெருக்கத்தின் காரணமாக, நிறுத்தி வைக்க மறுத்து பிடிவாதமாக இருந்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இந்த அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
பாமக நிறுவனர், ராமதாஸ்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதே மிகவும் ஆபத்தானது; அதிலும் இந்தத் திட்டத்தை வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்படைப்பது இன்னும் பல மடங்கு ஆபத்தானது ஆகும். ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதனால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி வேதாந்தா நிறுவனம் கொஞ்சமும் கவலைப்படாது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி அளிப்பது என்பது மத்திய அரசு உறுதியளித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது ஆகும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அந்த மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுக்க முடியாது. தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள் தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதையும், பாலைவனங்களாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர், வைகோ
விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு அழிப்பதற்கும், விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது, தமிழகத்தின் நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தைக் கண்டித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை டெல்டா பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக