புதன், 22 மே, 2019

தேவகௌடாவுக்கும் பிரதமர் ஆகும் விருப்பம் உள்ளதாம் .. ஸ்டாலினிடம் ...

பிரதமர் லாபி: ஸ்டாலினிடம் பேசிய தேவகவுடாமின்னம்பலம் : தேர்தல் முடிவுகளுக்காக இந்தியாவே காத்திருக்கும் நிலையில், பல்வேறுபட்ட கணக்குகளை வைத்துக் கொண்டு பல தலைவர்கள் காய்நகர்த்தி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியா, பாஜக ஆட்சியா அல்லது மாநிலக் கட்சிகள் இணைந்து காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் சேரும் கூட்டணி ஆட்சியா என்று பல்வேறு வியூகங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஒருவேளை காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 150 இடங்களுக்கும் மேல் பெற்றுவிடும் நிலையில் பந்து மாநிலக் கட்சிகள் பக்கம் திரும்பும். அப்போது 1996, 98 போல ஐக்கிய முன்னணியைப் புதுப்பித்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் எனவும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதில் இருந்தே லாபியில் இறங்கிவிட்டனர்.

சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியில் இருக்கும்போதே பல வெளிநாட்டு தலைவர்கள், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் தனிப்பட்ட முறையில் நட்புறவு பாராட்டி ஆந்திராவுக்கு பல முதலீடுகளைக் கொண்டுவந்தவர். தவிர பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை திரட்ட இந்தியா முழுதும் பயணம் செய்து சில மாதங்களாகவே அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர். அந்த வகையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் பதவி மீது ஒரு கண் இருக்கிறது.அதேநேரம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பதைப் பொறுத்தே அவரது பிரதமர் கனவு தீர்மானிக்கப்படலாம்.

இன்னொரு பக்கம் தேவகவுடா ஏற்கனவே கூட்டணி ஆட்சியை நடத்திய பிரதமர் என்ற வகையில் மீண்டும் கடந்த சில நாட்களாக பிரதமர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.
ஓரிரு நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினோடு அலைபேசியில் பேசியிருக்கிறார் தேவ கவுடா. கலைஞருடனான தனது நட்பு, அரசியல் அனுபவங்கள் ஆகியவற்றை ஸ்டாலினுடன் பகிர்ந்துகொண்ட கவுடா,
“நான் இந்த எம்.பி. தேர்தல்ல நிற்கமாட்டேன்னு ஏற்கனவே அறிவிச்சிருந்தேன். ஆனா கட்சி தொண்டர்கள்,நிர்வாகிகளோட வற்புறுத்தலால்தான் முடிவை மாத்திக்கிட்டு தேர்தலில் நின்னேன். இப்ப தேசிய அளவுல அரசியல் சூழல் மாறிக்கிட்டிருக்கு. ஒரு வேளை ரிசல்ட்டுக்குப் பின் மாநிலக் கட்சிகளோட கை ஓங்கும் நிலைமை வந்துச்சுன்னா, நான் பிரதமர் ஆகறதுக்கு உங்கள் ஒத்துழைப்பு வேணும். அன்னிக்கு உங்க அப்பா எனக்கு உறுதுணையா இருந்தார். இன்னிக்கு அவரது மகன் நீங்க எனக்கு உதவியா இருப்பீங்கனு நம்புறேன்” என்று மிகவும் உருக்கமாக ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார் தேவகவுடா.
தேவகவுடா மீது ஸ்டாலின் மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். ஏனெனில் கலைஞர் மறைந்த பின் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அதற்கான சட்ட முயற்சிகளில் திமுகவுக்கு தேவகவுடா தன்னால் ஆன உதவிகளைச் செய்தவர். இதைக் கருத்தில் கொண்ட ஸ்டாலின், ’தேர்தல் முடிவுக்குப் பின் அப்படி ஒரு சூழல் வந்தா உங்களுக்கு உதவி செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக