வியாழன், 16 மே, 2019

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி!ரவிக்குமார் - மின்னம்பலம் : அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு இணைப்புக் கல்லூரிகளில் கடந்த செமஸ்டரில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அந்த ஆறு கல்லூரிகளிலிருந்து 682 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.73 உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்களுக்கும் குறைவாகவே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தரமான கல்லூரிகள் எனச் சான்றளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 59 கல்லூரிகளில் மட்டும்தான் 50% மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகவும் தரமான கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே 85.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். (தகவல் : தி இந்து ஆங்கில நாளேடு 16.05.2019). இந்தத் தகவல்கள் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி
2016-17ஆம் கல்வியாண்டில் 177 பொறியியல் கல்லூரிகளில்15% க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அக்கல்லூரிகளின் அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை 77509. ஆனால் சேர்ந்ததோ 12399 மாணவர்கள் மட்டும்தான்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி அடைந்ததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன:
1. தொழில் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் ( AICTE ) பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கான விதிகளைத் தளர்த்தியது;
2.எஸ்சி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காதது
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமது விருப்பம் போல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதும் முக்கியமானதொரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பு.
விதிகளைத் தளர்த்தி ஏராளமான பொறியியல் கல்லூரிகள் துவக்கப் பட வழிவகுத்ததற்கும், எஸ்சி மாணவர்களுக்கான post matric scholarshipக்கான ஒதுக்கீட்டைக் குறைத்ததற்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விருப்பம்போல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததற்கும் மத்திய அரசே பொறுப்பாகும்.
அப்படிச் சொல்வதன் மூலம் மாநில அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது. தொழிற்கல்வியை வரைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசு உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். உயர்கல்வி பெறும் மாணவர்களின் விகிதத்தில் (GER) இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடம் வகிக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நமது ஆட்சியாளர்கள் அந்த உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு எந்தவொரு கவனத்தையும் செலுத்தவில்லை என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.

கருக்கப்பட்ட கனவு
பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, இடைநிற்றல் விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால்தான் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகி இருக்கும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தாம் லாபம் ஈட்டவேண்டும் என்பதற்காக எப்படி மாணவர்களின் உயர் கல்விக் கனவைக் கருக்கியிருக்கின்றன என்பது புலப்படும்.
தற்போது தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை தொடர்ந்து செயல்பட முடியாத நிதி நெருக்கடியில் உள்ளன. அவற்றை அப்படியே கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றிக்கொள்வதற்கு இப்போது விதிகளில் இடமில்லை என All India Council for Technical Education (AICTE) கூறியுள்ளது. ஆனால், அக்கல்லூரிகளின் உரிமையாளர்கள் விரும்பினால் அவற்றை மூடுவதற்கு அனுமதி வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இக்கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. பல கல்லூரிகள் தமது பழைய மாணவர்களையே மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களாகப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அதனால் அங்கு பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் வேலைக்குத் தகுதியானவர்களாக இருப்பதில்லை.
இந்தக் கல்லூரிகளை இதே நிலையில் இயங்க அனுமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக அமைந்துவிடும். எனவே, போதுமான மாணவர் சேர்க்கை இல்லாத சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உயர் கல்வி நிலையை மேம்படுத்துவதற்குச் சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய உயர் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது எப்படி எனத் தமிழக அரசு உடனடியாக ஆலோசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக