சனி, 4 மே, 2019

புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” -

BBC :விக்கினேஸ்வரன் கஜீபன் -பிபிசி தமிழுக்காக : தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார்.>தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை.
முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர்.


ஆனால் தற்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். வடக்கிலே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் மற்ற மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறு முஸ்லிம் மக்களுடனும் நடந்து கொண்டனர். அதனால் எங்களை வெளியேற்றியமைக்காக அவர்களை மனவருத்ததுடன் மன்னித்துள்ளோம் எனக் கூறும் முகமட் தாகீர், 1997க்கு பிறகு நாம் இந்த பூமியில் காலடி வைக்கும்போது முதன்முதலில் வந்தவன் என்ற வகையில் எங்களை யாழ். பேருந்து நிலையம் முன் இரு கைகூப்பி வரவேற்ற காட்சி இன்னமும் என் கண்களில் உள்ளது என்று கூறியவர், அவர்கள் கொண்டு வந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது அவர்களின் பாசம் எனவும் கூறுகிறார். விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர். இன்று என்ன நடக்கிறது? e>யாரோ ஒரு பயங்கரவாதிகள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களை வதைப்பதும், பள்ளிவாசல் மீது கல்லெறிவதும், தீ வைப்பதும், வீதியில் செல்கையில் ஏளனமாக பார்பதும் முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையாகிவிட்டதாக முகமட் தாகீர் கூறுகிறார்.
சில இடங்களில் வியாபார நடவடிக்கையினை தடுப்பதுமாக செயற்படுகின்றனர். இவ்வாறு ஒரு கீழ்தரமான செயலை தமிழ் மக்கள் எமக்கு செய்யவில்லை என்கிறார் முகமட் தாகீர்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடன் இணைந்து தொழில் செய்து பொருளாதாரத்தை விஸ்தரித்துள்ளோம். அவர்களும் தமது புரிந்துணர்வுடன் தமது அன்பை வெளிப்படுத்துகின்றனர் எனக்கூறும் அவர், எம்மீதான விடுதலை புலிகளின் செயற்பாட்டுக்காக சில கல்விமான்களும் மன்னிப்பு கேட்டதும் நம் மனதில் நிற்கின்றது. நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரை தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்போம் எதிராக செயற்படமாட்டோம் என உறுதிபட கூறுகிறார் முகமட் தாகீர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத சமூகம் என்பது கவலை அளிக்கிறது எனவும், பெண்கள் அணியும் முகத்திரையினை தடை செய்தவர்கள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். ஒருசிலர் செய்த இந்த தாக்குதலுக்கு அதன் ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடுதான் இடம்பெற்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்த அவர், இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் சிறுபாண்மையினரால்தான் தாங்கள் தோற்றுள்ளோம் என்பதனால் இவ்வாறு செயற்பட்டு சிறுபான்மையினரை தம்வசம் திருப்புப முயற்சிக்கின்றனர் என குற்றஞ்சாட்டுகிறார். இலங்கை குண்டுவெடிப்பை காரணம் காட்டி ராணுவமயமாக்குதலை அனுமதிக்க இயலாது"
அதைதான் கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கூறியுள்ளதாகவும் அவருக்கு பின்னால் முஸ்லிம் மக்கள் எமது ஆதரவை கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
பெண்கள் முகத்திரை தொடர்பில் நம் மத தலைவர்கள் தமது தலைமை போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கின்றனர் என கூறிய முகமட் தாகீர், இது தனக்கு மிகவும் கவலையாகவும் மனவருத்தமாக உள்ளதாகவும் கூறிகிறார்.<>அண்மையில் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களை இறங்கும்படி அரசு படை கூறியுள்ளது என்ற தகவலை தெரிவித்த முகமட் தாகீர், ஊடகங்களும் முஸ்லிம் சமூகம் என்று கூறி எம்மை பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
"என்னதான் நடந்தாலும் நாம் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்து அவர்களை ஆட்சியில் ஏற்றுவோம் என கனவில் கூட நினைக்க வேண்டாம். நாம் வாக்களிக்கமாட்டோம்" என உறுதிபட பேசினார் முகமட் தாகீர்.
நோன்பு காலத்தில் நாம் பெரும் இன்னல்களை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இந்த குண்டுதாரிகளின் சரியான பின்னணி கண்டறியப்படாவிட்டால் இந்த நாடு பயங்கரவாதத்தினால் முற்றாக அழிந்து போகும் என்பதை திட்டவட்டமாக கூறினார் முகமட் தாகீர்.
தவுஹீத் ஜமாத் அமைப்பு
தவுஹீத் ஜமாத் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கின்றனர் என கூறும் இவர், இலங்கையில் ஜம்மியத் உலமா என்ற சபை உள்ளதாகவும், இதுதான் முஸ்லிம்களின் மிக உயர்ந்த சபை அந்த சபையில் தவுஹீத் ஜமாத், ஜபிலிக் ஜமாத், ஹரிகா என்ற அங்கங்ளை கொண்டதுதான் இந்த அமைப்பு என்றார்.
ஆகவே தவுஹீத் ஜமாத் அமைப்பை மட்டும் தடை செய்து அவர்களை மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தலைவர்கள் தமக்குள் உள்ள போட்டியை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை பழிவாங்கும் செயலாக உள்ளதாகவும், இதை ஒரு சூழ்ச்சியாகவே பார்பதாகவும் முகமட் தாகீர் தெரிவித்தார்.ஜம்மியத் உலமா சபை சரியான முறையில் நடந்துகொள்ளாததால்தான் தவுஹீத் ஜமாத் அமைப்பின் விடயங்களை இவர்கள் பெரிதுபடுத்தி கிழக்கில் முஸ்லிம்களை பழிவாங்கிகொண்டு இருக்கின்றனர் என்றார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு ஒரு நேர்வழிகாட்டும் அமைப்பு. பயங்கரவாதிகள் இல்லை என்கிறார் அவர்.
"இங்கு ஆயுதங்களுடன் பிடிக்கபட்டவர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டால் அது விடுதலை புலிகள் என்று கூறுபவர்கள் ஏன் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எங்களை மட்டும் ஒட்டுமொத்த முஸ்லிம்களாக பறைசாற்றுகின்றனர்" எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.
அவர்களின் நோக்கமே இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி உயர்ந்த இடங்களுக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் என குற்றஞ்சாட்டும் இவர், பொருளாதாரத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் முக்கிய விடயம் என்கின்றார்.
முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பயங்கரவாதத்தை முற்றாக எதிர்கின்றோம். இஸ்லாமில் பயங்கரவாத்திற்கு இடமில்லை எனவும் கூறும் முகமட் தாகீர், தற்கொலைக்கும் இடமில்லை; அவ்வாறு தற்கொலை செய்பவர்களை முஸ்லிம் என நாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் உறுதியாக தெரித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக