மோடியின் பேரணியில் பன்னீரும் மகனும் |
கோவையிலிருந்து நேற்றிரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த திமுக,
அமமுக, காங்கிரஸ் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். தேனியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று (மே 8) பூதாகரமாக வெடித்தது. திமுக கூட்டணி வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், “இத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? அண்மையில் வாரணாசி சென்ற பன்னீர்செல்வம் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து வந்தார். மோடியின் கை, காலில் விழுந்து இந்த யோசனைக்கு அனுமதி வாங்கி வந்திருக்கலாம். இரவில் கொண்டுவரப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்களையும் உடனே திரும்ப அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேனி வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம் தொடர்பாக புகார் மனு அளித்தார்.
அதில், “தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல், 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள், திடீரென கோவையிலிருந்து தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரும் தகவல் தெரிந்த எங்கள் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள், சம்பவ இடத்திற்குச் சென்று ஆட்சேபத்தை பதிவு செய்தனர். ஆனால் இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் அளித்த பதில் தெளிவாக இல்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மை அதிகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ தெரியப்படுத்தாமல், பயன்படுத்தப்படாத வாக்குப் பதிவு இயந்திரங்களையோ அல்லது விவிபாட் இயந்திரங்களையோ எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் சொல்கின்றன. ஆனால், விதிமுறைகளை மீறி வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும்” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த காரணத்திற்காக தேனி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு வாக்குப் பதிவு மற்றும் விவிபாட் இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன என்று தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும், இனி அரசியல் கட்சியினரிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்து எந்த பகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லக் கூடாது என்றும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
“பன்னீர்செல்வத்தின் மகனுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றும் நோக்கத்தோடு அந்த 50 பெட்டிகளும் கொண்டுசெல்லப்பட்டதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. ஏனெனில் வாரணாசி சென்ற பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்து தனியாக பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அது வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்காகத்தான் நிகழ்ந்ததோ என்ற எண்ணம் சாதரணமாகவே எழுகிறது. ஆனால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கம் தெளிவாகவோ திருப்தியாகவோ இல்லை. ஏன் தமிழகத்தில் மட்டும் இதுபோன்று நடக்கிறது என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று மனு அளித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவா?
தருமபுரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் 46 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
“வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க தேர்தலுக்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடத்துவது வழக்கம். இந்த நிலையில் 15 மக்களவைத் தொகுதிகளிலுள்ள 46 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவு நடத்திய எண்ணிக்கையை அழிக்காமல், அதே வாக்குப் பதிவு எந்திரங்கள், வாக்குப் பதிவுக்காக வைக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அறிக்கை அனுப்பினேன். அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக அளித்துள்ள புகார் மனுவில் இதனையும் குறிப்பிட்டுள்ளனர். அதில், “சில தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஈரோட்டுக்கு 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். யாருடைய உத்தரவின் பேரில் மறுவாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது என்பது தெரியவில்லை.
தருமபுரி தொகுதியிலுள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் யாரும் மறுவாக்குப் பதிவு கோராத இடத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக