செவ்வாய், 21 மே, 2019

ராஜிவ் காந்தி கொலையால் தமிழகமும் இந்தியாவும் ஈழமும் இன்றுவரை இழந்து கொண்டிருப்பவை ..

Prabaharan Alagarsamy : இராஜிவ் கொலைதான், தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற நபரை அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கியது. இராஜிவ்
கொலைதான், வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வி.பி.சிங் என்கிற மாணிக்கக் கல்லை தூக்கிவீசியது. இராஜிவ் கொலை ஏற்படுத்திய வெற்றிடம்தான், இந்துத்துவ அரசியல் வளர்ச்சிகான பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது.
இராஜிவ் காந்திக்கு கொடுத்த மரணதண்டனை என்பது, ஈழத்தமிழர்களுக்காவது எந்த வகையிலாவது பயன்பட்டதா என்றால், அதுவும் கிடையாது! ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை, உலகத்தில் எந்தவொரு நாடும் அங்கிகரிக்காமல் அவர்கள் அனாதைகளாக தனித்து விடப்பட்டது இராஜிவ் கொலையால்தான்.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்களை தொடர்ந்து கண்டித்து அந்த படையை திரும்ப அழைப்பதற்கு அழுத்தம் கொடுத்துவந்தது. விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவராக அன்றைய முதல்வர் கலைஞர் இருந்தார். ஆனால், அந்த ஆட்சிக்கு ஆபத்துவரும் என்பது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், பத்பனாபா உள்ளிட்ட 15 பேரை பட்டப்பகலில் சென்னையில் வைத்து கொலைசெய்தனர் புலிகள். அதில் இரண்டு அப்பாவி தமிழ்நாட்டுத் தமிழர்களும் செத்தனர். ( இரண்டுப் பேர் சாவதெல்லாம் பெரியவிசயமா, தனி நாடு என்கிற பெரிய லட்சியத்திற்கு முன்னால் இந்த சாவெல்லாம் சும்மா என்பதுதான் புலி வெறியர்களின் மன நிலை ) திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றவர் வி.பி.சிங். 1991 பொதுத்தேர்தலில். இராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டால், அந்த அனுதாப அலையில் வி.பி.சிங் காணாமல் போவார் என்பது குறித்த அக்கறை எதுவும் கொலை செய்தவர்களுக்கு இல்லை.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகவரியாக இருந்த இடம் பெரியார் திடல். ஒருமுறை பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட போலிஸ் சம்மன், பெரியார் திடல் என்று முகவரியிட்டுதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜிவ் காந்தி கொலையினால் திராவிடர் கழகத்திற்கு சிக்கல் வரும் என்கிற கவலையெல்லாம் புலிகளுக்கு இல்லை. இது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்கிற செயல் இல்லையா?
இராஜிவ் காந்தி கொலை என்பது எந்த வகையிலும் ஈழத்தமிழர்களுக்கோ, தமிழ் நாட்டு தமிழர்களுக்கோ அல்லது எவருக்குமோ எந்த வித நன்மையையும் கொடுக்கவில்லை !!! மாறாக இன்றுவரை தமிழ் நாடு அதன் பின்விளைவுகளுக்கான விலையை கொடுத்து வருகிறது!
இராஜிவ் காந்தி பெரிய யோக்கியரோ, புனிதரோ கிடையாதுதான். ஆனால், இராஜிவ் காந்திக்கு மரணதண்டனை வழங்கிவிட்டதாக மீசையை முறுக்குகிற பெரியார் இயக்க வீரர்களிடம் ஒரு கேள்வி. சரி, இராஜபக்சேவுக்கும், கருணாவிற்கும் எப்போது மரணதண்டனை வழங்கப்போகிறார்கள்? குஜராத் படுகொலை செய்தவர்களுக்கு யார் மரணதண்டனை வழங்கப்போகிறது? பெரியார் இயக்கங்கள் அதற்கான ஆட்களை தயார் செய்துவருகிறதா? பின் எதற்கு இந்த வீண் மரணதண்டனை சவடால் எல்லாம்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக