திங்கள், 27 மே, 2019

லாலு பிரசாத் மதிய உணவை நிறுத்தி விட்டார் .. தேர்தல் தோல்வி கவலையில் ..

லாலுபிரசாத் யாதவ்லாலுபிரசாத் யாதவ்vikatan : மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மதிய உணவு எடுத்துக்கொள்வதை பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் நிறுத்திவிட்டதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் 303 இடங்களில் வென்று பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பதவியேற்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராகிறார் நரேந்திர மோடி. தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகள் முகாமில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சித் தலைமைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன.


குறிப்பாக, பீகாரில் பலம்பொருந்திய கட்சியாக இருந்த லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இந்தத் தகவல் அக்கட்சியினரை ரொம்பவே பாதித்திருக்கிறது. மோடி அலை வீசியதாகக் கூறப்பட்ட கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் பீகாரில் 4 இடங்களில் வென்றிருந்தது.
பீகார் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் யாதவை இந்தத் தேர்தல் முடிவுகள் வெகுவாகப் பாதித்திருக்கிறது. கோடிக்கான ரூபாய் மதிப்பிலான மாட்டுத் தீவன ஊழல் மோசடியில், லாலுபிரசாத் யாதவ், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவர் தற்போது சிறையில், தனது தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் லாலுபிரசாத் யாதவ் மதிய உணவு எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள். இதுகுறித்து பேசிய ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் உமேஷ் பிரசாத், `லாலுபிரசாத் வழக்கமாக உணவு எடுத்துக்கொள்ளும் முறை கடந்த 2, 3 நாள்களாக மாறியிருக்கிறது. அவர் காலை மற்றும் இரவு உணவுகளை எடுத்துக்கொள்கிறார். ஆனால், மதிய உணவை அறவே தவிர்த்து விடுகிறார்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் லாலுபிரசாத் யாதவுக்கு தினசரி 3 முறை இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் அவர் உணவு எடுத்துக்கொள்ளாததால், உரிய அளவு இன்சுலின் கொடுப்பதிலும் மருத்துவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். அதேபோல், கடந்த சில நாள்களாகவே லாலு, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வருகிறார் என்கிறார்கள் மருத்துவர்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக