வெள்ளி, 24 மே, 2019

வெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர்.. கலைஞர் சமாதியில் கலங்கிய கனிமொழி!

கனிமொழிசன்றிதலில் மலர்vikatan.com - -sathya-gopalan :
தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில் 37 இடங்களில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகளில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பா.ம.க-வின் அன்புமணி, தே.மு.தி.க-வின் சுதீஷ் போன்ற பல தலைவர்களும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இவர்களில் தூத்துக்குடியில் களமிறங்கிய தி.மு.க-வின் கனிமொழிக்கும், பா.ஜந்வின் தமிழிசைக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு ஆகியவை ஆளும் கட்சி மீதான நல்லெண்ணத்தை உடைத்தது. அதனால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.க-வுக்கு, அங்கு வெற்றி வாய்ப்பு சற்று கடுமையாகவே இருந்தது. அந்த நேரத்தில் கனிமொழி செய்த சில சிறப்பான செயல்கள் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கை உயர்த்தியது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காகக் கனிமொழி, தூத்துக்குடியில் தனியாக ஒரு வீடு எடுத்து அங்கேயே தங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆளும் கட்சி மீதான கோபம், கலைஞரின் மறைவு, மக்களுக்கு கனிமொழி அளித்த நம்பிக்கை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஓட்டாக மாறியது. நேற்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
கருணாநிதி சமாதி
வெற்றி பெற்ற பிறகு இன்று காலை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்று ஆசி பெற்றார். கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்த், தாய் ராசாத்தி அம்மாள் மற்றும் தொண்டர்கள் பலர் இருந்தனர். தான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழைக் கருணாநிதியின் சமாதியில் வைத்து வணங்கினார். முதலில் சான்றிதழை வைத்துவிட்டு கனிமொழியும், ராசாத்தி அம்மாளும் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அடுத்த சில நிமிடங்கள் கழித்து சான்றிதழைச் சமாதியில் இருந்து எடுத்தார் கனிமொழி. அப்போது அதனுடன் ஒரு பூவும் ஒட்டிக்கொண்டு வந்தது. இதைப் பார்த்த கனிமொழி கலங்கினார். மலரைப் பார்த்ததும் அருகில் இருந்த தொண்டர்களும் கை தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.
``பிறந்தநாள், விசேஷ நாள்கள், தேர்தல் வெற்றி இப்படி எதுவாக இருந்தாலும் கனிமொழி முதலில் தன் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவார். அதே போன்றுதான் கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தலில், வெற்றி பெற்ற பிறகு முதல் வேலையாக சான்றிதழுடன் தந்தை சமாதிக்குச் சென்றார்.  அங்குதான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. ஃபைலில் மலர் ஒட்டியுள்ளதைப் பார்த்ததும் கனிமொழி செய்வதறியாது கண்கலங்கினார். எப்போதும் தன்னை உச்சி முகர்ந்து ஆசீர்வாதம் செய்யும் தந்தை இந்தத் தேர்தல் வெற்றிக்கும் பூ அளித்து ஆசீர்வாதம் செய்ததாகவே உணர்ந்தார். பூவைக் கண்டதும் அவருக்குப் பேச்சு வரவில்லை. தொண்டர்களும் ஃபைலில் மலரைக் கண்டதும் கொண்டாடினார்கள்”  என கனிமொழி ஆதரவாளர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக