சனி, 11 மே, 2019

மே.வங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை


vinavu.com - கலைமதி : மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் இப்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலையில் இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் இருந்த போட்டி, இப்போது திரிணாமூல் – பாஜக என மாறியுள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜக கொடிகளுடன் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கிக்கொண்டு செல்வது மாநிலம் முழுவதும் காணும் காட்சியாக உள்ளது.
இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கும் நிலையை அம்மாநில இடதுசாரி தலைவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, சிபிஎம் கட்சியின் பத்திரிகையான கனசக்திக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் என்ற எண்ணெய் சட்டியிலிருந்து, பாஜக என்ற நெருப்பில் விழுவதால் எந்த பலனும் இல்லை என அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியை ‘ஆபத்து’ என சொல்லியிருக்கும் பட்டாச்சார்யா, “சில இடங்களில் இந்த ஆபத்து தொடங்கிவிட்டது. நம்முடைய குறிக்கோள் சுய அழிவிலிருந்து அவர்களை காப்பாற்றுவதுதான்” என்கிறார்.
கட்சியின் கருத்திலிருந்து வேறுபடும் பட்டாச்சார்யா, இந்த மக்களவை தேர்தலில் தங்களுடைய முதன்மையான எதிரி திரிணாமூல் காங்கிரஸ் அல்ல, பாஜகதான் என்கிறார்.  சிபிஎம்-ன் மற்ற தலைவர்கள் திரிணாமூலும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்கிறார்கள்.
மூத்த இடதுசாரி தலைவரான பட்டாச்சார்யா, தீவிர சுவாச நோய் காரணமாகவும் பார்வை குறைபாடு காரணமாகவும் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.  இரண்டு முறை முதலமைச்சராக இருந்த இவர், மோடியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மதசார்பற்ற மேற்கு வங்கத்தில் மதவாத உணர்வை தூண்டுவதாக கூறியுள்ளார். சந்தர்ப்பவாத முதலாளிகளின் காவலராக இருக்கும் மோடியை எந்த விலை கொடுத்தேனும் அகற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர் – எதிர் கொள்கை முரண்பாடுகளை தூக்கியெறிந்து இடது ஆதரவாளர்கள், காவி கட்சியின் ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். அமைப்பு ரீதியாகவும் மக்களிடம் செல்வாக்கு பெறுவதிலும் சிவப்புப் படை தன்னுடைய பிரகாசத்தை இழந்து வருகிறது. சில இடங்களில் பணத்தைக் கொடுத்து ஆதரவைத் திரட்டுகிறது பாஜக. சில இடங்களில் இடதுசாரிகள் மற்றும் திரிணாமூல் ஆகிய இரண்டு கட்சிகளின் அலட்சியம் காரணமாகவும் காவி உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறது.

2011-ம் ஆண்டு ஆட்சியை இழந்தது முதல், சிபிஎம் கட்சியின் செல்வாக்கு சரிவிலேயே இருக்கிறது. அக்கட்சியின் தேர்தல் வெற்றிகளும்கூட சரிவையே கண்டன. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சிபிஎம் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. 1977 முதல் 2011 வரை இடைவெளி இல்லாமல் ஆட்சியில் இருந்த கட்சி இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலின்போது இடது முன்னணியின் வாக்கு வங்கி 39.6%. பாஜகவின் வாக்கு வங்கி 4.06% மட்டுமே.  பிறகு, இடது முன்னணியின் வாக்கு வங்கி 25.6% கீழே இறங்கியது. பாஜகவின் வாக்கு வங்கி 10.28% உயர்வைக் கண்டது.
திரிணாமூல் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்திருக்கிற நிலையில், பல திறனாய்வாளர்கள் இடதுசாரி வாக்காளர்களின் வாக்குகளே பாஜகவுக்கு சென்றிருக்கலாம் என கருதுகின்றனர்.  சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, மக்களவை தேர்தலிலும் இதே நிலைமையே.



பெருகி வரும் பாஜக ஆதரவு
ஐம்பது வயதான தபன் பிஸ்வாஸின் குடும்பம் தீவிர இடதுசாரி ஆதரவு கொண்டது. ஆனால், பிஸ்வாஸ் டும்டும் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் சமீக் பட்டாச்சார்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறார். ஏன் அவர் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் எனக் கேட்டபோது, “சிபிஎம் கட்சியே இங்கு இல்லை. அவர்களுடைய கூட்டங்களுக்கு 15-20 பேர்தான் வருகிறார்கள். அதுபோன்ற கட்சிக்கு பிரச்சாரம் செய்வதால் என்ன பயன்? சிபிஎம்-ஐ ஆதரித்த காலத்திலிருந்து மம்தா எங்களுடைய எதிரி. இப்போதும் அவர் எங்களுடைய எதிரி. பாஜக போன்ற சக்திவாய்ந்த ஒரு கட்சியை ஆதரித்தால்தான் அவரை வீழ்த்த முடியும்” என்கிறார்.
தி வயர் மேற்கொண்ட மேற்கு வங்க பயணங்களில் பிஸ்வாஸைப் போன்ற பல ஆதரவாளர்கள், பாஜக ஆதரவாளர்களாக மாறியிருப்பதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஆதரவாளர்கள் மட்டுமல்ல, கட்சித் தொண்டர்களும்கூட பாஜகவுக்கு மாறிவிட்டதையும் பார்க்க முடிந்தது.
பிரனாப் மோண்டல் என்ற ரிக்‌ஷா ஓட்டுநர், “எங்களுடைய குடும்பம் சிபிஎம் ஆதரவாளர்களைக் கொண்டது. இப்போது, அவர்களுக்கு வாக்களிப்பது வாக்கை வீணாக்குவதுபோல.  உள்ளூர் தலைவர்கள் தனிப்பட்ட முறையில், திரிணாமூலை வீழ்த்த பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்” என்கிறார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்திய காகெம் மும்ரு என்ற தற்போதைய சிபிஎம் எம்.எல்.ஏ., எதிர்பாராத நிகழ்வாக தற்போது மால்டா வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ. வலதுசாரி கட்சியான பாஜகவில் இணைவது இதுவே முதல் முறை.

நிலைமையை உணர்ந்திருக்கும் முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் போன்ற இடதுசாரி தலைவர்கள் இது குறித்து எச்சரிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “திரிணாமூல் காங்கிரசிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக, பாஜகவை ஆதரிக்கும் தவறை செய்துவிடாதீர்கள். இது சுய அழிவுக்குரிய முடிவு” என்றார்.
ஆனாலும், இடதுசாரி தலைவர்கள் மிகவும் தாமதமாகவே விழித்திருக்கிறார்கள். பெரிய அளவிலான இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜகவுக்கு மாறிவிட்டனர். பாஜவை அவர்கள் மாற்றாக கருதுகின்றனர். பல திறனாய்வாளர்கள் இடதுசாரிகளின் வாக்குவங்கி 8-10% குறையும் என கணித்திருக்கிறார்கள்.
இடதுசாரிகளின் தேர்தல் திட்டமிடல் சொதப்பியதால், அது பாஜகவுக்கு ஆதரவாக முடிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். அரசியல் அறிவியல் கற்றுத்தரும் மைதுல் இஸ்லாம், “இடதுசாரிகள் பாஜகவையும் திரிணாமூல் காங்கிரசையும் ஒரே விதமாக தாக்குகிறார்கள். அவர்களை ஒன்றாக்கி தாக்குவது அவர்களுக்கே வினையாக முடியக்கூடும்” என்கிறார்.
“இந்த மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை பாஜகதான் இடதுசாரிகளின் முதன்மை எதிரி; திரிணாமூல் அல்ல. ஆனால், இடதுசாரிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் திரிணாமூல் குறித்த விமர்சனம் அதிகமாக உள்ளது. பாஜக மீது மென்மையான தாக்குதல்களையே பார்க்க முடிகிறது” என்கிறார் இஸ்லாம்.
கலைமதி
கட்டுரை: ஹிமாத்ரி கோஷ்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக