வியாழன், 30 மே, 2019

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன்

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன்மின்னம்பலம் : ரஜினி,
கமலை மோடியின் கூட்டாளிகள் எனக் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி கூறிவருகிறார். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (மே 30) சந்தித்த திருமாவளவன், பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், “வன்னிய சமூகத்தினருக்கும் இதர சமூகத்தினருக்கும் நான் எதிரி என்பதுபோல ஒரு தோற்றத்தை ஆதாய அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டு பரப்பிவந்தார்கள். அந்த அவதூறு பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த வன்னியர் சமூகம் மற்றும் பிற சமூக மக்களும் மனமுவந்து வாக்களித்ததன் விளைவாகத்தான் நான் வெற்றிபெற்றேன். வன்னிய சமுதாயத்தின் ஆதரவு கிடைத்தன் விளைவுதான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது” என்று தெரிவித்தார்.

திராவிடக் கட்சிகளில் தற்போது கரிஷ்மாட்டிக் தலைவர் யாரும் இல்லை என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இருந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை எந்த அணியும் பெற்றதில்லை. அதிகபட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் தேனியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை பார்த்தபின்னும் திமுக கூட்டணியை அங்கீகரிக்க, ஸ்டாலின் தலைமையை பாராட்ட மனமில்லாமல் ரஜினிகாந்த் போன்றவர்கள் இப்படிப்பட்ட கூற்றை சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன்” என்று விமர்சித்தார்.
மோடிக்கு கவர்ச்சி இருக்குமானால் திண்டுக்கலில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது போல வட இந்திய மாநிலங்களில் பாஜகவினர் யாராவது வெற்றிபெற்றிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியவர், “மோடி எதிர்ப்பு அரசியலை முன்வைத்து 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம். இது ரஜினியின் கவனத்துச் சென்றதா என்று தெரியவில்லை” என்றும் கூறினார்.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, “ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் கவர்ச்சி அரசியலை பாராட்டிவருகிறார்கள். அந்த கவர்ச்சி அரசியலை மோடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கலாம். மோடிக்கு இருக்கும் கவர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரஜினியும் கமலும் கருதுவார்கள்” என்று தெரிவித்தார்.
ரஜினியும் கமலும் மோடியின் கூட்டாளிகள், அவருடைய டீமைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, “அது உண்மையாக இருக்கலாம்” என்றும் பதிலளித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக