சனி, 4 மே, 2019

வருமானவரி துறைமீது வழக்கு பதிவு .. லாட்டர் மாட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் ..

covai lottery martin company cashier suicide case - லாட்டரி மார்டின் நிறுவன காசாளர் தற்கொலை விவகாரம்: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!tamil.indianexpress.com : கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில், கடந்த 5 நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மார்ட்டினின் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றி வந்த பழனிச்சாமியின் சடலம் வெள்ளியங்காடு குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் தான் தனது தந்தை உயிரிழந்ததாக, பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காரமடை போலீஸார், வருமான வரித் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு ரோகின் குமார் அளித்துள்ள மனுவில், “நான் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். எனது தந்தை பழனிச்சாமி, மார்ட்டின் குரூப் ஆஃப் நிறுவனத்தின், ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக காசாளராகப் பணியாற்றிவந்தார்.

கடந்த 30-ம் தேதி மாலை 4 மணிக்கு, எங்கள் வீட்டுக்கு வந்து வருமான வரித் துறையினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட 7 அதிகாரிகள், எனது அப்பாவை உடனடியாக வரவேண்டும் என்று கூறினார்கள். என்னுடைய போனில் இருந்து அப்பாவை அழைத்தனர். சிறிது நேரத்தில் அப்பா வீட்டுக்கு வந்தார். எங்கள் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள ஓர் அறைக்கு அப்பாவை அழைத்துச் சென்றனர். எங்களை மாடியில் இருக்கச் சொன்னார்கள். அதில் ஒருவர், அப்பாவை கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து விசாரணை நடத்தினார். அப்போது, அப்பா சத்தம் போட்டதை நான் பார்த்தேன். அதன் பிறகு, இரவு முழுவதும் எனது அப்பாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினர்.
இதையடுத்து, 1-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அவரை ஆபீஸுக்கு அழைத்துச் சென்றனர். 7 மணிக்கு ஓர் அதிகாரி, என் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால், அவரை எங்களுடன் பேச அனுமதிக்கவில்லை. அப்பாவின் உடலில் காயங்கள் இருந்தன. முகம் வீங்கியிருந்தது. குளிக்கவைத்து அவரை மீண்டும் ஆபீஸுக்கு அழைத்துச் சென்றனர். இரவு 12 மணிக்குதான் வீட்டுக்கு வந்தார்.
இடது கை மணிக்கட்டு அருகே தையல் போட்ட காயம் இருந்தது. தன்னை துன்புறுத்தியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறிக் கதறி அழுதார். மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 3-ம் தேதி காலை 7 மணிக்கு ஆபீஸ் போக வேண்டும் என்று கூறினார். நாங்கள் வேண்டாம் என்று தடுத்தோம். அப்பா, மிகவும் பயந்துபோயிருந்தார். இதனால், விசாரணைக்காக ஆபீஸ் சென்றுவிட்டார். ஆனால், அவர் ஆபீஸுக்கும் செல்லவில்லை என்று பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. பல இடங்களில் அவரை தேடினோம். மதியம் 2 மணி அளவில், அப்பாவின் இரு சக்கர வாகனம் வெள்ளியங்காடு குட்டை அருகே தனியாக நிற்பதாக போலீஸ் தரப்பில் தகவல் சொன்னார்கள். அப்பாவின் உடலை அந்தக் குட்டையில் இருந்து மீட்டனர். எனது அப்பாவின் உடல் தற்போது, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது. அவரது உடலில் காயங்கள் இருப்பதாக கூறினார்கள். குறிப்பாக, மூக்கில் வெட்டுக் காயம் போல உள்ளது.
எனது அப்பாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் தொடர்ந்து வருமான வரித் துறை விசாரணையில் இருந்தார். இந்தச் சூழலில் அவருடைய மரணம், எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரமடை போலீஸார் இதைச் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே, நீதித்துறை நடுவரைக்கொண்டு விசாரணை நடத்த நீங்கள் உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவரை வைத்து உடல் கூறாய்வு செய்யும்படியும், அதை வீடியோ எடுக்கவும் நீங்கள் உத்தரவிட வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று, நீதிமன்றம் விடுமுறை என்பதாலும் உடல்கூறாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பதாலும், எனது மனுவை அவசர மனுவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை காவல் துறை கண்காணிப்பாளர் மூலம் ஆர்.டி.ஒ விசாரணை நடத்த நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக