வெள்ளி, 17 மே, 2019

தொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை

தொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை
தினமலர் : வாஷிங்டன், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும், அவசர நிலை பிரகடனத்தில், அந்த நாட்டு அதிபர், டிரம்ப், நேற்று கையெழுத்திட்டார்
சமீப காலமாக, அமெரிக்காவுக்கும், நம் அண்டை நாடான, சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது. சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலடியாக, சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில், தொலை தொடர்பு சம்பந்தமான தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதை தடுப்பதற்காக, தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில அன்னிய நாட்டு நிறுவனங்களால்,அமெரிக்க தொழில்நுட்பம் திருடப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுஉள்ளது.இதை தடுக்கும் வகையில், தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, சீனா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் இனி பயன்படுத்த முடியாது. இதனால், அமெரிக்காவில் தொழில்செய்து வரும் நிறுவனங்கள், கடும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக