செவ்வாய், 28 மே, 2019

சவுக்கு சங்கர் : இத்தனையும் தாண்டி திமுக அடைந்த வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி ...

savukkuonline.com - jeevanand-rajendran : இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை அடித்தாலும் தமிழ்நாட்டில் ஒரு துளி ஈரம் கூட இல்லை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு சக்தியே கிடையாது, தனித்து போட்டியிடுமேயானால் நிச்சயம் நோட்டாவுக்கு கீழ் தான். ஆனால் இந்த முறை சாதிய சமன்பாட்டின் படியும், வாக்கு சதவிதத்தின் படியும் ஒரு வலுவான கூட்டணி தான் அமைத்திருந்தது. அப்படி இருந்தும் இந்த கூட்டணியை வீழ்த்தியதற்கு என்ன காரணம்? முதலில் வெற்றி தோல்விக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தை பார்ப்போம்
1 லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 3 (சிதம்பரம், தருமபுரி, திருப்பூர்)
1 – 2 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 11 (கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் , சேலம் , தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர்)
2 – 3 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 9 (ஆரணி , சென்னை கிழக்கு , ஈரோடு , காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,நாமக்கல் ,நீலகிரி )
3 – 4 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 8 (அரக்கோணம் , மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், வல்லூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை )
4-5 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 4 (சென்னை வடக்கு, கரூர், பெரம்பூர், திருச்சிராப்பள்ளி)
5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 2 (திண்டுக்கல், ஸ்ரீபெரம்பூதூர் )
10 தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு முதல் 5 லட்சம் வாக்கு வித்தியாசம் வரை வென்றுள்ளனர். இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளும் அதிமுகவும் நேரடியாக போட்டியிட்ட தொகுதி 8, சிதம்பரம் தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பெருவாரியான வாக்கு சதவிகிதத்தில் வெற்றி  பெற்றுள்ளனர்.

இதில் எனக்கு ஆச்சரியம் ஊட்டுவது கொங்கு பெல்ட் என்று அறியப்படும் திருப்பூர், கோவை, கரூர் தொகுதிகள். கவுண்டர் சமுதாயம் அதிகமாக இருக்கும் இந்த பகுதிகள் அதிமுகவின் கோட்டையாக அறியப்படும், பத்தாத குறைக்கு முதல்வர் அந்த சமுகத்தை சேர்ந்தவர்.
கோவை அதிமுக வாக்கு வங்கி மட்டும் அல்ல 98ல் நடந்த குண்டுவெடிப்பிற்க்கு பின் ஹிந்து முன்னணி அசுர வளர்ச்சி பெற்ற தொகுதி, பாஜகவின்  வாக்கு வங்கி அதிகம். அங்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன்  1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிபி.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து இருக்கிறார்.
திருப்பூர் தொகுதி அமைச்சர் செங்கோட்டையனின் இரும்புக் கோட்டை அங்கே சுப்புராயன் 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
கரூர் தொகுதி பணம், பதவி, அந்தஸ்து என்று வலிமையான நிலையில் உள்ள தம்பிதுரையை, காங்கிரஸ் கட்சியின்  அடிமட்டத்தில் இருந்து வந்த ஜோதிமணி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
இந்த புள்ளி விபரத்தில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் கூட்டணி அமைப்பதில் மட்டும் அல்ல வெற்றி, கூட்டணி கட்சிகளின் வாக்கு சிதறாமல் கைமாறினால் மட்டுமே வெற்றி.  கூட்டணி கட்சிக்காக மற்ற கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை போராடி இருக்கிறான் என்பது அப்பட்மாக தெரிகிறது.
கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது, ஸ்டாலின் மீது எதிர்மறை விமர்சனம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்து வெளிநடப்பை தவிர ஒன்றும் செய்யவில்லை என்றும், மேடை பேச்சில் அவர் செய்த பிழைகளை மீம் ஆக்கி கேலி செய்வது, கட்சியில் எவனாவது தகராறு செய்தால்  அதை செய்தியாக்கி திமுகவை தவறான லைம் லைட்டில் வைத்துக்கொண்டே இருந்தது. இத்தனையும் தாண்டி இந்த முறை திமுக அடைந்த  வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பதை சொல்ல எந்த தயக்கமும் இல்லை.
கூட்டணிக்கு அதிக இடங்களை ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார் என்ற விமர்சனம் கட்சிக்குள் இருந்தாலும்  திமுகவின் வாக்குகள் அப்படியே கூட்டணிக் கட்சிக்கு சென்று இருக்கிறது. இல்லையென்றால் நேருவின் கோட்டை திருச்சியில் “வாக்குகளை போட சொன்னால் அள்ளி கொட்டியதற்கு நன்றி” என்று திருநாவுக்கரசு சொல்வாரா? இந்த வெற்றி ஒவ்வொரு கூட்டணி கட்சி தொண்டனுக்கும் உரித்தான வெற்றி.
சென்ற முறை திமுகவின் வெற்றியை தட்டிப் பறித்ததில் மக்கள் நல கூட்டணி ஒரு காரணியாக இருந்தது.  இந்த தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மையம் அந்த வேலையை செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நடந்தது என்னவோ திமுகவிற்கு சென்ற வாக்குகளை கமல் பிரிக்கவில்லை. மாறாக அதிமுக வாக்குகளை பிரித்திருக்கிறார். இரண்டு கட்சிகளையும் பிடிக்காத, நோட்டாவிற்கு போட விரும்பாத வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் இரண்டே மாற்று தான் ஒன்று மையம் மற்றொன்று நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சியின் தத்துவத்தில் தீவிர உடன்பாடு இருந்தாலொழிய மாற்று அரசியல் தேடும் ஒருவரால் அந்த கட்சிக்கு ஓட்டு போட முடியாது. இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம், அரசியலே எனக்கு பிடிக்காது. ஆனால் ஓட்டு போடுவேன் என்று இருக்கும் வாக்காளர்கள் மக்கள் நீதி மையத. திற்கு வாக்கு அளித்ததாக கருதுகிறேன் குறிப்பாக பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர்.
சீமானின் வசீகரிக்கத்தக்க பேச்சு நிச்சயம் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களை பெருவாரியாக ஈர்த்திருப்பது அவர் பல இடங்களில் 3ஆவது இடத்தில் இருப்பதிலிருந்து தெரிகிறது. சீமான் ஒரு சிறந்த கதை சொல்லி.  டைரக்டர் சங்கர் படம் போல பிரமாண்டமாக, நம்பிக்கை விதைப்பதை போல இருக்கும். ஆனால் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், நடைமுறை சாத்தியமற்று இருக்கும். இதை அவரின் அபிமானிகள் உணர்வதுக்கு 2-3 வருடங்கள் ஆகும். உணர்ந்தவுடன்  அவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல தொடங்குவார்கள்.   அதற்குள் புது ஆட்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள். ஏறக்குறைய சீமானின் வாக்கு வங்கி இதே அளவு தான் இருக்கும்.
என்ன தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், தேசிய கட்சிகளினால் மாநிலத்துக்கு ஏற்படும் கேடுகளை கணிசமான இளைஞர்கள் மனதில் கொண்டு சென்றதற்கு சீமானை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இந்த தேர்தலில் மிகவும் ஏமாற்றம் அளித்தது TTV தினகரனின் படு தோல்வி.  RK Nagar வெற்றிக்கு பின் அதிமுகவை எப்படியும் கைப்பற்றி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. பொது தேர்தலில் இல்லாவிட்டாலும்,  இடைத்தேர்தலில்  ஓரிரு இடங்களில் வென்று மற்ற இடங்களில் அதிமுக வாக்குகளை பெருமளவு பிரிப்பார் என்ற எண்ணம் இருந்தது. தாக்கம் இருந்ததே ஒழிய அது ஆட்சி மாற்றம் நடக்குமளவுக்கானதாக இல்லை. இன்னும் இரண்டு வருடங்களில் அவரோடு இருக்கும் கட்சியினர் அதிமுகவிற்கோ, திமுகவிற்கோ செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமிழ்நாட்டில் பாஜகவின்  வீழ்ச்சிக்கு இது மட்டும் அல்ல காரணம். தமிழ்நாடு முன்னெடுக்கும் மாநில உரிமைக்கான குரலும்,  தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களும், பிரச்சாரங்களும் தான். மோடி என்ற பிம்பத்தை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாஜகவை அம்பலப்படுத்தும் எண்ணற்ற தனி நபர்களும் , பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இடம் எடுத்து சென்ற மே 17 போன்ற அரசியல் சாரா அமைப்புகளின் பங்கும் மிக அதிகம்.
நடந்து முடிந்த தேர்தல் நிலை வேண்டுமானால் இப்படி இருக்கலாம், இனி வரும் தேர்தலில் பாஜக இன்னும் வீரியமாக செயல்படும். எந்த ஒரு மாநிலத்தில் வெற்றிடம் இருக்கிறதோ அங்கே பாஜக எளிதில் நுழைந்துவிடும். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சி பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலுவாக இருப்பதால் பாஜக காலூன்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக அழிவை சந்தித்தால் இன்னும் 2 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுக்கலாம்.
தமிழ்நாட்டின் நலனுக்காகவாவது அதிமுக வலுவடைய வேண்டும் அப்படி இல்லையென்றால் மாற்று கட்சி உருவெடுக்க வேண்டும். அது வெறுப்பரசியல் பேசும் நாம் தமிழர் கட்சியாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒரே ஆறுதலான விஷயம் மாநில பிரச்சனைகளை தேசிய பிரச்சனையாக எடுத்து செல்ல தமிழகத்தில்  பாஜக தலைவர்கள் யாரும் லாயக்கற்று இருப்பதும், மக்களின் தொடர்புக்கு எட்டா உயரத்தில் இருந்து கொண்டு “ஒரு நாட்டுக்காக இந்த மாநிலத்தை  தியாகம் செய்வது தப்பு இல்லை ” என்ற திமிர் பேச்சுமே காரணம்.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த ஒரு வலுவான தேசிய தலைவர் வேண்டும். அல்லது பல வலுவான மாநில காட்சிகள் உருவாவது அவசியம். இதற்கான சாத்தியக்கூறுகள் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை இன்னும் 5 ஆண்டுகள் இருக்கிறது. காங்கிரஸ் தங்களின் வீழ்ச்சியை சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
2011 ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை காங்கிரஸ் தலைவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது.  அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் கேரளாவை சேர்ந்த ரெம்யா. விவசாய தினக்கூலியாக வேலை செய்யும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர், மெல்ல மெல்ல சிறிய பதவிகள் கொடுத்து அவரை மெருகேற்றி இன்று 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து இருக்கிறார். மக்களோடு மக்களாக களமாடும் 300 ரம்யாகளும், ஜோதிமணிகளும்  நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில்  வெற்றி வாய்ப்பாளர்களாக உருவாக்க வேண்டும். காங்கிரஸ் முதல்வர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் , மூத்த தலைவர்களின் மகன்களுக்கு வாய்பளிக்காமல் அடையாளம் காணப்பட்ட 300 வேட்பாளர்களுடன் இணைத்து பயணித்து அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.
மம்தா, மாயாவதி பிரதமர் தங்களின் அகந்தையை விட்டொழித்து நாட்டு நன்மைக்காவது ஒரு திசையில் பயணிக்க வேண்டும்.   நம்பிக்கையோடு காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக