வியாழன், 9 மே, 2019

ஸ்டாலின் : தேர்தல் அதிகாரி சாஹூ மீது நம்பிக்கை இழந்து விட்டோம்

சாஹு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: ஸ்டாலின்மின்னம்பலம் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த எதிர்க்கட்சியினர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சாட்டினர். இதுபோலவே ஈரோட்டுக்கும் 20 விவிபாட் இயந்திரங்கள் கொண்டுவந்துள்ளனர். இவை தொடர்பாக விளக்க வேண்டுமென திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று (மே 8) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள் போல நடந்து கொள்கிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்து செய்தி வெளியானவுடன் “மறு வாக்குப் பதிவுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்” என்று கூறும் தலைமைத் தேர்தல் அதிகாரி, “எத்தனை இடங்களில் மறு வாக்குப்பதிவு என்றால் அதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும்” என்று நழுவுகிறார். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு கோரி கொடுத்த திமுகவின் மனுவுக்கு இதுவரை எவ்வித தீர்மானமான உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவையிலிருந்து தேனிக்கு மாற்றியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்குக் கொண்டு சென்றது ஏன்? துணை முதலமைச்சரின் மகன் தேனி தொகுதியில் போட்டியிடுவதால், குறிப்பாக வாரணாசியில் பிரதமரைச் சந்தித்த பிறகு அதிமுக அரசுக்கும் - தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகள் என்ன, எந்த அடிப்படையில் 46 வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தார் என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ள ஸ்டாலின், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மீதான நம்பிக்கையை திமுகவும் எதிர்க்கட்சிகளும் முற்றிலும் இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேனி மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபாட் எந்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெறப்பட உத்தரவிட வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின்,
“ஆளுங்கட்சியின் தலையீடுகளின் காரணமாக, தமிழகத்தில் நிகழும் முறைகேடுகளுக்கு இடையே தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தலைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகவும் தடுமாறி நிற்கிறார் என்பது நன்கு தெரிகிறது. ஆகவே, எஞ்சியிருக்கும் நாட்களுக்கு உடனடியாக “மாநில சிறப்புத் தலைமைத் தேர்தல் அதிகாரி” ஒருவரை நியமித்து, தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவுக்குப் பாதுகாத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “எந்த அரசியல் கட்சிகளும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படாத நிலையில் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம். மறு வாக்குப்பதிவை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, மறு வாக்குப்பதிவு நடத்துவதைத் தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக