மின்னம்பலம்: ஏழாம் கட்டமாக இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த மே 19ஆம் தேதி மாலை எக்ஸிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. இதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான ஊடகங்களும் தெரிவித்திருந்த நிலையில், இதன் எதிரொலி மும்பை பங்குச் சந்தையில் தீவிரமாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீண்டும் பிரதமர் மோடி என்ற செய்தியே உலா வந்துகொண்டிருந்த நிலையில் மே 20, திங்கட்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் மிக உற்சாகமான நிலை தென்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தை எட்டியது. காரணம், மீண்டும் மோடி பிரதமராவார் என்று செய்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு டானிக் போல அமைந்தது.
எக்சிட் போல் கணிப்புகள் மூலம் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் தொழிலதிபர் அதானி குழும பங்குகள் மிக அதிக உயரத்தை எட்டின. ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் 17 சதவிகிதம் விலை உயர்ந்தன.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு ரூபாய் 43.70 ஆக இருந்தது. அதானி கேஸ் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் உயர்ந்து 135 ரூபாய் ஆக உயர்ந்தது. அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் உயர்ந்து 46 ரூபாயாக இருந்தன. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்குகள் 9 சதவிகிதம் உயர்ந்து 274 ரூபாயாக இருந்தது. அதானி துறைமுகம் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான பங்குகள் 8 சதவிகிதம் அதிகரித்து 395 ரூபாயாக உயர்ந்தது. அன்று காலை 10 மணிக்குள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு பங்குச் சந்தைகளிலும் 9.68 மில்லியன் பங்குகள் விலை உயர்ந்து இன்னொரு கைகளுக்குச் சென்றன என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள்.
இவ்வாறு சுமார் ஒரு கோடி பங்குகள் விலை உயர்வின் மூலம் அதானி மற்றும் அம்பானி உட்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்த ஒரு நாளில் கிடைத்த லாபம் மட்டும் லட்சக்கணக்கான கோடிகள் என்கின்றன பொருளாதார புள்ளி விவரங்கள்.
இந்த பங்குச் சந்தை பணம்தான் டெல்லி வழியாக அடுத்தகட்ட அரசை உருவாக்குவதற்குப் பெரும்பங்கு வகிக்கிறது என்கிறார்கள் தலைநகர சோர்ஸுகள்
மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்குக் கொடுத்த அறிக்கையின்படி மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 223 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பதற்கான முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டிருக்கிறார் என்பதை ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது என்ற தலைப்பில் மே 20 டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டிருந்தோம்.
தமிழகத்தில் திமுக அதிகமான மக்களவைத் தொகுதிகளைப் பெறும் என்று எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு இருக்கிற நிலையில், பாஜக அரசுக்கு மெஜாரிட்டி குறையும்பட்சத்தில் திமுகவின் உதவியை நாடியிருக்கிறது பாஜக. அந்த முதல்கட்ட வேண்டுகோளை திமுக நிராகரித்துவிட்ட நிலையில் இந்த பங்குச் சந்தை உயர்வுக்குப் பின் அடுத்தகட்ட ஆஃபரை அதிரடியாக திமுகவை நோக்கி நகர்த்துகிறது பாஜக.
அதன்படி ஸ்டாலினுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் மீண்டும் பேசிய அமித் ஷாவுக்கு நெருக்கமான பாஜக எம்.பி, பாஜக அரசை திமுக ஆதரிக்கும்பட்சத்தில் 5,000 கோடி ரூபாய் வரை தருகிறோம் என்று பேரம் பேசத் தொடங்கியுள்ளனர். இதைக்கேட்டு ஸ்டாலின் வட்டாரம் ஆடிப் போய் விட்டதாம்.
தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்க கட்சிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால், இப்போது பாஜகவோ புதிய அரசு அமைப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் டெல்லியிலிருந்து வருகின்றன.
திமுகவோடு பாஜக நடத்த முயற்சிக்கும் இந்த பேரம் குறித்து ஸ்டாலின் காதுகளுக்குப் போனபோது இப்படியெல்லாம் நடக்குமா என்று திமுக சீனியர்களிடமும், கலைஞரின் செயலாளர்களாக இருந்தவர்களிடமும் தன் வியப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர்களும், “தலைவர் கலைஞரிடம் டெல்லியிலிருந்து எத்தனையோ தலைவர்கள் பேசி இருக்கிறார்கள். ஆனால், இப்படி ஓர் அணுகுமுறை டெல்லியிலிருந்து இதுவரை வந்ததில்லை” என்று ஆச்சரியத்தைக் கொட்டியிருக்கிறார்கள்.
திமுகவை நோக்கி 5,000 கோடி ரூபாய் பேரம் என்றால் தென்னிந்தியாவின் நம்பிக்கையான அடுத்த அரசியல் தலைவராக இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இருக்கும் பாஜக வலை வீசி வருகிறது. கேட்கும் பணத்தைக் கொடுப்போம் சிபிஐ வசம் இருக்கும் வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுத் தருவோம் என்ற இரு வாக்குறுதிகள் ஜெகன்மோகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் நடந்த விதம், பிரச்சாரம், எக்ஸிட் போல், அதன் மூலம் பங்குச் சந்தை வணிக உயர்வு, அதன்மூலம் புதிய அரசுக்கான பேரம் என்று இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லி அரசியல் திசை மாறி இருக்கிறது.
கார்ப்பரேட் தேங்காயை எடுத்து கட்சிப் பிள்ளையார்களுக்கு உடைப்பதன் மூலம் புதிய ஆட்சி அமைக்கலாம் என்று தீவிரமாக முயற்சி செய்கிறது பாஜக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக