புதன், 29 மே, 2019

பாயல் தத்வி மரணம்: 3 மருத்துவர்கள் கைது!

பாயல் தத்வி மரணம்: 3 மருத்துவர்கள் கைது!மின்னம்பலம் : மும்பை மருத்துவ மாணவி பாயல்
தத்வி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரை ராகிங் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 மருத்துவர்களை நேற்று மும்பை காவல் துறை கைது செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த பாயல் தத்வி, கடந்த ஆண்டு மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவப் பிரிவு முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். பாயல் தத்வி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்.
பாயல் தத்வியின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு ஹேமா அகுஜா, பக்தி மெகர், அங்கீதா கந்தில்வால் என்ற மூன்று முதுகலை மருத்துவ மாணவிகள் அவரைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாயல், கடந்த 22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று முதுநிலை மருத்துவ மாணவிகள் மற்றும் பாயல் அங்கம் வகித்த பிரிவின் தலைவர் ஆகியோரை பிரிகான் மும்பை மாநகராட்சி இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், நேற்று (மே 28) மும்பை காவல் துறையினர் பாயல் தத்வியின் மரணத்திற்குக் காரணமான ஹேமா அகுஜா, பக்தி மெகர், அங்கீதா கந்தில்வால் ஆகியோரைக் கைது செய்தனர். இன்று (மே 29) அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்தியக் குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ராகிங் எதிர்ப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த மூன்று மருத்துவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பாயல் தத்வியின் கணவர் மருத்துவர் சல்மான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பாயல் அறைக்கதவைத் திறந்து பார்த்தவர்களில் அந்த 3 பேரும் இருந்தனர். அப்போதுதான் மின் விசிறியில் பாயல் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. எனவே, காவல் துறையினர் இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை போலவே பாயல் மரணம் நிகழ்ந்திருப்பதாகக் கூறி, இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின, பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக