வெள்ளி, 10 மே, 2019

தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்

தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்veerakesari :இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாகவும் சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனரென்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டதோடு குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் உளவியல் முதலுதவி தேவைப்படுகிறதென்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள் என்பதால், உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்றும் செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக