வெள்ளி, 10 மே, 2019

குருஷ் முருங்கை ..யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்து பிரபலமான முருங்கை ரகம் .. ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்!

இ.கார்த்திகேயன் -vikatan.com - எல்.ராஜேந்திரன் :
அவியல், கூட்டு, சாம்பார் எனப் பலவித உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய், முருங்கைக்காய். ஐயப்பன் பூஜை விரதகாலங்கள், திருவிழாக்கள், முகூர்த்த தினங்கள் போன்ற காலங்களில் முருங்கையின் விலை உச்சத்துக்குப் போய்விடும். கிராமங்களில் ‘முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதில்லை’ என்று ஒரு சொலவடை சொல்வதுண்டு. முருங்கைக்கு எப்போதும் சந்தையில் விற்பனை வாய்ப்பு இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கையை விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம். இவர், ‘குருஷ்’ எனும் ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை எனும் ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார்புரம் எனும் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே இருக்கிறது, தர்மலிங்கத்தின் முருங்கைத் தோட்டம். நம் வருகைக்காகத் தோட்டத்தில் காத்திருந்த தர்மலிங்கத்திடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.>
“எனக்குச் சொந்த ஊர் திசையன்விளைதான். ஐந்தாம் வகுப்புக்கு மேல பள்ளிக்கூடத்துக்குப் போகலை. சின்ன வயசுலயே அப்பாகூட வாழைக்காய் வியாபாரம் பார்க்க வந்துட்டேன். 1982-ஆம் வருஷம் முருங்கைக்காய் விவசாயத்தை ஆரம்பிச்சேன். திசையன்விளையில திரும்புன பக்கமெல்லாம் முருங்கைக்காய் மரமாத்தான் நிக்கும். ஆரம்பத்துல ‘யாழ்ப்பாணம் முருங்கை’யைத்தான் வெச்சேன். அடியுரமா குப்பை போட்டாலும், ஊட்டத்துக்கு ரசாயன உரம் போட்டுத்தான் சாகுபடி செஞ்சுக்கிட்டுருந்தேன். அப்படியே போய்க்கிட்டுருந்த சமயத்துல 2008-ஆம் வருஷம், எங்க ஊர்ல இருக்குற ஒரு டீக்கடையில ‘பசுமைவிகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். அதுல இயற்கை விவசாயம் பத்தி நிறையத் தகவல்கள் இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.
இப்போ வரைக்கும் அத்தனை பசுமை விகடன் புத்தகங்களையும் பத்திரமா வெச்சுருக்கேன். ‘பசுமை ஒலி’ பகுதியில் இருக்குற தொலைபேசி எண் மூலமாகப் பஞ்சகவ்யா தயாரிக்கிறதைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் ரசாயன உரங்களை நிறுத்திட்டு இயற்கைக்கு மாறினேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன தர்மலிங்கம், முருங்கைத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“இது எல்லாம் ‘குருஷ்’ங்கிற முருங்கை ரகம். எங்க பகுதியில யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்தபடியா பிரபலமான முருங்கை ரகம் ‘குருஷ் முருங்கை’. குருஷ் ரகம் எப்படி எங்க பகுதிக்கு வந்துச்சுனு தெரியலை. இந்தப்பக்கம் அழகிவிளை, டேனியல், குருஷ், கரும்புனு பல முருங்கை ரகங்களைச் சாகுபடி செய்றாங்க. குருஷ் முருங்கைக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும் நுனி வளையாமலும் இருக்கும். காய்களைப் பறிச்சு மூணு நாள்கள் வரைக்கும் இருப்பு வைக்கலாம். அதனால, இந்தப்பகுதியில அதிகமா குருஷ் ரகத்தைத்தான் சாகுபடி செய்றாங்க.  எட்டு வருஷத்துக்கு முன்னாடி, போலையார்புரம்ங்கிற கிராமத்திலிருந்து இந்த குருஷ் முருங்கைக் குச்சிகளை வாங்கிட்டு வந்து நட்டு வெச்சேன். இயற்கை முறையில இது நல்லா விளையுது. இங்க மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 6 ஏக்கர் நிலத்துல குருஷ் முருங்கை பறிப்புல இருக்கு. மீதி 4 ஏக்கர் நிலத்தை முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் பண்ணி வெச்சுருக்கேன்” என்ற தர்மலிங்கம் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். “ஒரு ஏக்கர் நிலத்துல 100 மரங்கள் நடவு செய்யலாம். இந்த அளவு நிலத்துல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கை குறைந்தபட்சம் 7 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரைக்கும் விலை போகுது. மொத்தமாகக் கணக்குப் பார்க்குறப்போ... ஒரு கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சுடும். அந்த வகையில பார்த்தா 12 டன் முருங்கை மூலமா, 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. குப்பை, இடுபொருள் தயாரிப்பு, தெளிப்பு, பறிப்புக்கூலினு எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 வரை செலவாகும். அதுபோக ஒரு ஏக்கர் முருங்கை மூலமா வருஷத்துக்கு 3,30,000 ரூபாய் லாபம் கிடைக்குது. மொத்தம் 6 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து வருஷத்துக்கு 19,80,000 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்ற தர்மலிங்கம் நிறைவாக, “என்னடா முருங்கையில இவ்வளவு வருமானமானு கொஞ்சம் மலைப்பாத்தான் இருக்கும். ஆனா, உண்மையில இதைவிட அதிக லாபம் எடுத்துட்டுருக்கேன். மகசூலையும் சரி, வருமானத்தையும் சரி கொஞ்சம் குறைச்சுத்தான் நான் சொல்லிருக்கேன். சரியான முறையில நடவு, தேவையான சமயத்துல உரம், பருவத்துல கவாத்துனு கண்ணும் கருத்துமாகப் பராமரிச்சா, இந்த வருமானம் சாத்தியம்தான். என்னைப் பொறுத்தவரை அதிகப்பராமரிப்பு இல்லாமல் நிறைவான வருமானம் கொடுக்குறது முருங்கை மட்டும்தான்” என்று சொல்லிக்கொண்டே முருங்கைக்கட்டுகளைத் தூக்கிக்காட்டியபடி விடைகொடுத்தார்.தொடர்புக்கு, தர்மலிங்கம், செல்போன்: 99760 11750 -- இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக